தை மாத ராசி பலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
2007Shares
2007Shares
ibctamil.com
மேஷம்

நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலை பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள். இதுவரை ராசிக்கு 9ம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களுக்கும் தந்தையாருக்குமிடையே உரசல் போக்கையும், அவருக்கு உடல் நலக் குறைவையும் கொடுத்து வந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் பலமடைந்திருப்பதால் தந்தையாரின் ஆரோக்கியம் கூடும். உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். மகனுக்கு நல்ல இடத்தில் வரன் அமைய வேண்டுமென அவ்வப்போது எண்ணிக் கொண்டிருந்தீர்களே! நீங்கள் எதிர்பார்த்த படியே திருமணம் முடியும். அரசால் அனுகூலம் உண்டாகும். ராஜ கிரகங்களான குருவும், சனியும் சாதகமாக இருப்பதால் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். புது தொழில் தொடங்குவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஷேர் லாபம் தரும்.

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆடை வாங்குவீர்கள். சொந்த பந்தங்கள் மத்தியில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். மறைமுக அவமானம், தாழ்வு மனப்பான்மைகளெல்லாம் வந்து செல்லும். அரசியல்வாதிகளே! பினாமிகளின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். பிரபலங்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நல்ல நட்பு சூழல் உருவாகும். பெற்றோருடன் சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவ மாணவிகளே! உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உயர்கல்விக்காக சிலர் அயல்நாடு செல்வீர்கள். சக மாணவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களுக்கு உதவுவீர்கள். பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். கொடுக்கல், வாங்கலில் நிம்மதி ஏற்படும். இரும்பு, உணவு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள் என்றாலும் கேது 10ல் தொடர்வதால் சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். கலைத்துறையினரே! சம்பளப் பாக்கி கைக்கு வந்து சேரும். விவசாயிகளே! கடனை உடனை வாங்கி பயிரிட்டீர்களே! அதற்கான பலனை இப்பொழுது பெறுவீர்கள். வற்றிய கிணற்றில் நீர் சுரக்கும். தன்னம்பிக்கையால் தலை நிமிருவதுடன், புதிய முயற்சிகளிலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 19, 20, 21, 28, 29, 30 மற்றும் பிப்ரவரி 4, 5, 6, 7.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 14ம் தேதி பிற்பகல் மணி 2.55 வரை, பிப்ரவரி 8ம் தேதி காலை மணி 11.27 முதல் 9 மற்றும் 10ம் தேதி இரவு மணி 10.09 வரை எதிலும் பொறுமையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: சோழிங்கநல்லூர் பிரத்யங்கரா தேவியை தரிசித்து வரவும். ஊனமுற்றோருக்கு உதவவும்.

ரிஷபம்

எப்பொழுதும் கலகலப்பாக சிரித்துப் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் நீங்கள், சொன்ன சொல்லை ஒரு போதும் தவறமாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதாலும் சனியை விட்டு விலகியதாலும் உங்களின் புது முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சகட குருவும், அஷ்டமத்துச் சனியும் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யாரை நம்புவது, யாரை தள்ளி வைப்பது என்பதில் குழப்பம் வரும். தூக்கம் குறையும். சின்ன சின்ன வேலையையும் போராடி முடிக்க வேண்டி வரும். நட்பு வட்டத்தில் கவனமாக இருங்கள். ராகு 3ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.

நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே நல்ல பதில் வரும். ராசிக்கு 9ல் சூரியன் இருப்பதால் தந்தையாருடன் மனக்கசப்புகள் வரும். அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இட வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் சிலர் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள். உட்கட்சிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். மாணவ மாணவிகளே! உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தவறான பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. கணிதம், ஆங்கிலப் பாடங்களில் அதிக அக்கறை காட்டுங்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். லாபத்தை அதிகப்படுத்த புது யுக்திகளை கையாளுங்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. உணவு, இரும்பு, ரியல் எஸ்டேட், கிப்ட் ஷாப் வகைகளால் லாபம் பெருகும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடி வேலை வாங்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! எலித் தொல்லையால் மகசூல் குறையும். விளம்பரங்களைப் பார்த்துவிட்டு புதிது, புதிதாக வரும் உரங்களைப் பயன்படுத்தாதீர்கள். கீரை வகைகளால் ஆதாயமடைவீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் வளைந்து கொடுக்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 20, 21, 22, 23, 24, 25, 31 மற்றும் பிப்ரவரி 1, 2, 3, 7, 9.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 14ம் தேதி பிற்பகல் மணி 2.56 முதல் 15, 16ம் தேதி வரை மற்றும் பிப்ரவரி 10ம் தேதி இரவு மணி 10.10 முதல் 11, 12 ஆகிய தேதிகளில் யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம்.

பரிகாரம்: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரரைத் தரிசிக்கவும். சாலைப்பணியாளர்களுக்கு உணவு வாங்கித் தரவும்.

மிதுனம்

மென்மையும், விட்டுக்கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகக் கூடியவர்கள். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பிரபலங்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை தெரிந்து அவற்றை வெளிக் கொண்டு வர முயற்சி எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும்படி மகள் திருமணத்தை முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். 20ம் தேதி முதல் செவ்வாய் 6ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கு சாதகமாகும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்து கொள்வார்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் பயணிப்பதால் பணம் வரும். புது வண்டி வாங்குவீர்கள்.

ராசிநாதன் புதன் 22ம் தேதி முதல் 8ல் மறைந்திருக்கும் கேதுவுடன் இணைவதால் சோர்வு, சலிப்பு, யூரினரி இன்ஃபெக்‌ஷன், நரம்புச் சுளுக்கெல்லாம் வந்து போகும். உறவினர், நண்பர்களுடன் சின்னச் சின்ன மோதல்கள் வரக்கூடும். ஆனால் 8ம் தேதி முதல் புதன் 9ம் இடத்தில் அமர்வதால் ஆரோக்கியம் சீராகும். சூரியன் இந்த மாதம் முழுக்க 8ல் மறைவதால் அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். இளைய சகோதர வகையில் செலவுகள் வந்து போகும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்தப் பாருங்கள். கண்டகச் சனி தொடர்வதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, தைராய்ட் பிரச்னை, ரத்த அழுத்தம் வந்து செல்லும். ராகு 2ல் இருப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. பணப்பற்றாக்குறை ஏற்படும். கண் பார்வைக் கோளாறு வரக்கூடும். அரசியல்வாதிகளே! உங்கள் குடும்பப் பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். மாணவ மாணவிகளே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் உங்கள் தரம் உயரும். கன்னிப் பெண்களே! திறமையான வகையில் செயல்படுவீர்கள். தடைபட்ட சுப காரியங்கள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். கூட்டுத் தொழிலில் உங்களுக்கு நம்பிக்கையான பங்குதாரர் உங்களை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது. மூலிகை, ஸ்டேஷனரி, லார்ட்ஜிங் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஒருபுறம் வேலைப்பளு அதிகரித்தாலும் மறுபுறம் மதிப்பு, மரியாதை கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! நெல், கரும்பு, வாழை வகைகளால் ஆதாயமடைவீர்கள். போராட்டங்களை கடந்து புத்துயிர் பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 14, 15, 16, 22, 23, 24, 25, 27, 31 மற்றும் பிப்ரவரி 1, 2, 3, 4, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 17, 18 மற்றும் 19ம் தேதி பிற்பகல் மணி 1.27 வரை முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: கதிராமங்கலம் வனதுர்க்கைக்கு நெய் விளக்கேற்றி வணங்கவும். காகத்திற்கு உணவிடவும்.

கடகம்

எல்லோரையும் ஒன்றாக அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள், அன்பின் அடையாளமாக இருப்பவர்கள். சனிபகவான் வலுவாக 6ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் உங்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் யார் என்பதை உணர்ந்து அவர்களிடம் மட்டும் இனி உறவு கொண்டாடுவீர்கள். 20ம் தேதி முதல் செவ்வாய் 5ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் மதிப்பார்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் கால், கழுத்து, முதுகு மற்றும் உடல் வலி வந்து போகும். தூங்கும் இடத்தையும் அடிக்கடி மாற்ற வேண்டாம். பணப்பட்டுவாடா விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

முக்கியமான விஷயங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று செய்து முடிப்பது நல்லது. சுக்கிரன் சாதகமாக இருப்பதுடன், 22ம் தேதி முதல் புதனும் சாதகமாவதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சூரியன் 7ல் அமர்வதால் உடல் உஷ்ணமாகும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். மனைவிக்கு முதுகுத் தண்டில் வலி, வீண் டென்ஷனெல்லாம் வரக்கூடும். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும். பெற்றோர் பாசமழை பொழிவார்கள்.

மாணவ மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் உங்களை தோற்கடிக்க நினைத்தவர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். புதிதாக சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் முணுமுணுப்பார்கள். ஏஜென்சி, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி சில நேரத்தில் கடிந்து பேசினாலும் பல சமயங்களில் கனிவாக நடந்துக் கொள்வார். சக ஊழியர்களைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விவசாயிகளே! கிணறு சுரக்கும். கடனுதவி கிடைக்கும். நிலத்தகராறுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கடின உழைப்பாலும், விட்டுக் கொடுத்து செல்வதாலும் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 15, 16, 17, 18, 24, 25, 27, 28 மற்றும் பிப்ரவரி 2, 3, 4, 5, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 19ம் தேதி பிற்பகல் மணி 1.28 முதல் 20 மற்றும் 21ம் தேதி இரவு மணி 10.15 வரை வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சோளிங்கர் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடவும். முதியோர் இல்லத்திற்கு உதவவும்.

சிம்மம்

எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க எண்ணும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். இதுவரை சனியுடன் சிக்கியிருந்த உங்கள் ராசிநாதன் சூரியன் இந்த மாதம் முழுக்க 6ம் வீட்டில் அமர்வதால் படபடப்பு, கை, கால் வலி, நெஞ்சு வலி குறையும். உடல் ஆரோக்கியம் கூடும். எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் திணறினீர்களே! இனி பக்குவமான பேச்சால் முடிப்பீர்கள். வங்கி லோன் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 6ம் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைந்து நிற்பதால் தொண்டைப் புகைச்சல், கழுத்து வலி, சளித் தொந்தரவு, வீண் செலவுகளெல்லாம் வந்து செல்லும். கணவன் மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வந்துபோகும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 20ம் தேதி முதல் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் கேந்திர பலம் பெற்று 4ம் வீட்டில் ஆட்சியில் அமர்வதால் உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.

சொத்து வாங்குவதற்கு முன் பணம் தருவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, வர்ணம் பூசுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குரு 3ம் இடத்திலும், சனி 5ம் வீட்டிலும் நிற்பதால் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். முன்கோபம் அதிகரிக்கும். சின்னச் சின்ன தடுமாற்றங்கள், ஏமாற்றங்கள் வந்து போகும். பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். சகாக்கள் மதிப்பார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள். மாணவ மாணவிகளே! பொது அறிவுத் திறன், மொழி அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் உங்களிடம் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவது சம்பந்தமாக நெருக்கமானவர்களிடம் ஆலோசனை செய்வீர்கள். பங்குதாரர்களால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! அவ்வப்போது கிசுகிசுத் தொந்தரவுகள் வரும். உங்களின் கற்பனைத் திறன் வளரும். விவசாயிகளே! மரப்பயிர்கள், மூலிகைப் பயிர்கள், பூக்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். முற்பகுதி கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் மத்தியப் பகுதியிலிருந்து சமயோஜித புத்தியாலும், நட்பு வட்டத்தாலும் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 14, 17, 18, 19, 20, 27, 28, 29, 30 மற்றும் பிப்ரவரி 5, 6, 7.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 21ம் தேதி இரவு மணி 10.16 முதல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்: அருகிலுள்ள பெருமாள் ஆலயத்திற்கு புதன்கிழமைகளில் துளசி வாங்கித் தரவும். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவவும்.

கன்னி

வெள்ளையுள்ளமும், வெளிப்படையான பேச்சும், விவேகத்துடன் செயல்படும் திறனும் கொண்ட நீங்கள், எப்பொழுதும் நல்லதே நினைப்பவர்கள். 20ம் தேதி முதல் ராசிக்கு 3ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று வலுவாக அமர்வதால் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் குருபகவான் தொடர்ந்து கொண்டிருப்பதால் பிரச்னைகளையும், சவால்களையும் எளிதாகச் சமாளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஓரளவு பணத்தட்டுப்பாடு குறையும். பிரபலங்களின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை இந்த மாதத்தில் முடிப்பீர்கள். 7ம் தேதி முதல் சுக்கிரனும், 8ம் தேதி முதல் புதனும் 6ம்வீட்டில் சென்று மறைவதால் சிறுசிறு விபத்துகள், காய்ச்சல், சளித் தொந்தரவு, சைனஸ் இருப்பதைப் போல் ஒருவித தலை வலி, அலர்ஜி, வாகனப் பழுதுகளெல்லாம் வந்து நீங்கும்.

கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மனக்கசப்புகள், வீண் விவாதங்கள், அசதி, பசியின்மை, தூக்கமின்மையெல்லாம் வந்து செல்லும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ராகு லாப ஸ்தானத்தில் தொடர்வதால் ஷேர் லாபம் தரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். சகாக்களைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். மாணவ,மாணவிகளே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். மர வகைகள், ரியல் எஸ்டேட், பெட்ரோல் பங்க் வகைகளால் லாபமடைவீர்கள். வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் சின்னச் சின்ன பிரச்னைகள் தலைதூக்கினாலும் சாதுர்யமாகப் பேசி சரி செய்வீர்கள். கலைத்துறையினரே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். பூச்சித் தொல்லை விலகும். எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 14, 15, 16, 20, 21, 22, 23, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1, 7, 9, 10, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 24, 25 மற்றும் 26ம் தேதி காலை மணி 8.41 வரை எதிலும் அவசரப்பட வேண்டாம்.

பரிகாரம்: காஞ்சி காமாட்சியம்மனை செவ்வாய்க்கிழமையில் தரிசிக்கவும். காலணிகளை தானமாகத் தரவும்.

துலாம்

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் மறக்கமாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிலும் மகிழ்ச்சியே கிட்டும். முடியுமோ முடியாதோ என்றிருந்த பல காரியங்கள் இப்பொழுது முடிவுக்கு வரும். பணப்புழக்கம் அதிகமாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசிய செலவுகளை மட்டும் இனி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 3ம் வீட்டில் சனி நிற்பதால் ஷேர் லாபம் தரும். பிரச்னைகளை சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய வீட்டை சிலர் இடித்துக் கட்டுவீர்கள். வாகன வசதி பெருகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

என்றாலும் ஜென்ம குரு தொடர்வதால் சிறுசிறு விபத்து, மந்தம், மறதி, தாழ்வுமனப்பான்மை, மறைமுக எதிர்ப்புகளெல்லாம் வந்து நீங்கும். செவ்வாய் 20ம் தேதி முதல் ராசியை விட்டு விலகுவதால் மனப்போராட்டங்கள் விலகும். உடன் பிறந்தவர்களுடனான கசப்புணர்வுகள் விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் விலகும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். மாணவ மாணவிகளே! ஓவியம், இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். மொழிப் பாடங்களில் முன்னேறுவீர்கள். பழைய நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று புது வேலையில் சேருவீர்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைத்தாலும் தட்டாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் வரும். எதிர்ப்புகளும், எதிரான கோஷங்களும் அடங்கும்.

வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். மற்ற கடைகளை விட கொஞ்சம் தனித்து இருக்க வேண்டும் என்பதற்காக கடையை அழகுபடுத்துவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்து கொள்வீர்கள். தொல்லை கொடுக்கும் பங்குதாரர்களை நீக்கி விட்டு நல்லவர்களை பங்குதாரர்களாக மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமையை மூத்த அதிகாரிகள் பரிசோதிப்பார்கள். சக ஊழியர்களில் ஒரு சிலர் சாதகமாக இல்லாவிட்டாலும் சிலர் நீங்கள் செய்த நன்றியை மறக்காமல் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புத் தகராறு நீங்கும். மகசூல் பெருகும். கலைத்துறையினரே! வேற்றுமொழிப் பட வாய்ப்புகள் வரும். இந்த மாதம் பரபரப்பானதாகவும், செல்வாக்குமிக்கதாகவும் இழுபறியாக இருந்த வேலைகளை முடித்துக் காட்டுவதாகவும் அமையும்.

ராசியான தேதிகள்: ஜனவரி 14, 15, 16, 22, 23, 24, 25, 31 மற்றும் பிப்ரவரி 1, 2 , 3, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 26ம் தேதி காலை மணி 8.42 முதல் 27 மற்றும் 28ம் தேதி காலை மணி 11.30 வரை முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சிங்கப்பெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள ஆப்பூர் ஸ்ரீனிவாசரை தரிசித்து வலம் வரவும். ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு உதவவும்.

தனுசு

செய்நன்றியை ஒருபோதும் மறவாத நீங்கள்,தன்னை எதிரியாக நினைத்தவர்களுக்கும் நல்லதே நினைக்கும் குணம் படைத்தவர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் புத்துணர்ச்சி ததும்பும். ராசியை விட்டு சூரியன் விலகியதால் ஆரோக்கியம் சீராகும். வருமானம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என சில நேரங்களில் வருந்துவீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஆனால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். ராசிநாதன் குருபகவான் லாப ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரம் பரபரப்புடன் காணப்படும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளையெல்லாம் இனி விரைந்து முடிப்பீர்கள். ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால் நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, மூச்சுத் திணறல், ஒருவித படபடப்பு, தயக்கம் வந்து செல்லும். எங்குச் சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரித்ததைப் போல உணர்வீர்கள். உங்களுக்கு தலைக்கனம் அதிகமாகி விட்டதாக முணுமுணுப்பார்கள். முன்கோபம் வேண்டாமே.

என்ன வாழ்க்கை இது? செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு வந்து போகும். 20ம் தேதி முதல் செவ்வாய் 12ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் புதிதாக வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வெகுநாள் கனவாக இருந்த ஆசை இப்போது நிறைவேறும். மாணவ, மாணவிகளே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை அழைத்துப் பேசும். மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

வியாபாரத்தை பெருக்குவீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உணவு, டிராவல்ஸ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் அதிகரிக்கும். வேற்றுமதத்தவர்கள், மாற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த அதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். உங்களின் கற்பனைத் திறன் வளரும். விவசாயிகளே! நவீன உரங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். தொலை நோக்குச் சிந்தனையாலும், விடாமுயற்சியாலும் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 18, 19, 21, 27, 28, 29 மற்றும் பிப்ரவரி 5, 6, 7.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 30ம் தேதி பிற்பகல் மணி 1.53 முதல் 31 மற்றும் பிப்ரவரி 1ம்தேதி மாலை மணி 4.38 வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமி தினத்தன்று காலபைரவருக்கு சிவப்பு அரளிமலர்களால் அர்ச்சனை செய்யவும். தொழு நோயாளிகளுக்கு உணவு வாங்கித்தரவும்.

மகரம்

புலி பசித்தாலும் புல்லை தின்னாதது போல தன்மானம் மிக்க நீங்கள், யார் சொத்துக்கும் ஆசைப்பட மாட்டீர்கள். உங்களுடைய ராசிக்குள்ளேயே சூரியனும், கேதுவும் அமர்ந்திருப்பதால் மாதத்தின் தொடக்கமே உங்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். சோர்வு, களைப்பு, முதுகு வலி, மூட்டு வலி வந்து போகும். உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லையென்று அலுத்துக் கொள்வீர்கள். ஒற்றையாக இருந்து எவ்வளவு தான் போராடுவது, எத்தனைக் காலத்திற்குதான் இப்படி

கஷ்டப்படுவது என்ற ஒரு ஆதங்கமும் அவ்வப்போது வெளிப்படும். முன்கோபத்தை கட்டுப்படுத்தப் பாருங்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வீடு, மனை, வாகனச் சேர்க்கையெல்லாம் உண்டு. பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிவீர்கள். உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். புது வேலை அமையும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

அழகு, இளமை கூடும். அடகிலிருந்த நகையை மீட்க வழி பிறக்கும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் கௌரவப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சகோதரங்களின் ஒற்றுமை பலப்படும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். தாயாரின் ஆரோக்யம் சீராகும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. ராசிக்கு 7ல் ராகு நிற்பதால் மனைவி சில நேரங்களில் கோபமாகப் பேசுவார். மனைவிக்கு தைராய்டு நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். மாணவ, மாணவிகளே! கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெறுவீர்கள். அவ்வப்போது தன்னம்பிக்கை குறையும். கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரிக் கால தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். தேமல், முகப்பரு, முடி உதிர்வதெல்லாம் வந்து போகும். அரசியல்வாதிகளே! கட்சி அதிகாரிகளுடன் விவாதங்கள் வந்து போகும். சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்குவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களால் இழப்புகள் வரக்கூடும். ஏற்றுமதி, இறக்குமதி, கமிஷன், கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் பெறுவீர்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். உத்யோகத்தில் சின்னச் சின்ன எதிர்ப்புகள் இருக்கும். வேலைச்சுமை இருக்கும். சிலர் உங்களை விமர்சித்துப் பேசுவார்கள். அதிகாரிகளும் இரட்டை வேடம் போட வாய்ப்பிருக்கிறது. உஷாராக இருங்கள். 10ல் குரு நிற்பதால் உங்கள் பணியில் நீங்கள் கறாராக இருப்பதுதான் நல்லது. கலைத்துறையினரே! உங்களுடைய திறமைகள் வெளிப்படும். விவசாயிகளே! மரப்பயிர்கள், கிழங்கு, கரும்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். கொஞ்சம் அலைச்சலையும், ஆரோக்ய குறைவையும், வேலைச்சுமையையும் தந்தாலும் திட்டமிட்ட காரியங்களை முடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 14, 20, 21, 22, 23, 25, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 7, 8, 9, 10.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 1ம் தேதி மாலை மணி 4.39 முதல் 2 மற்றும் 3ம் தேதி இரவு மணி 8.44 வரை கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள்.

பரிகாரம்: சென்னை மடிப்பாக்கம் ஐயப்பன் ஆலய தரிசனம் செய்யவும். ஏழைச்சிறுமியர் கல்விக்கு உதவவும்.

கும்பம்

சோர்வு தட்டாமல் எந்த ஒரு செயலையும் அசாத்தியம் உடைய நீங்கள் எப்பொழுதும் முதலிடத்தையே பிடிக்க விரும்புவீர்கள். 20ம் தேதி முதல் ராசிக்கு 10ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, மனநிறைவு எல்லாம் உண்டு. கணவன் மனைவிக்குள் நிலவி வந்த கசப்புணர்வுகள் மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். புதிய வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். புறநகர் பகுதியில் வீட்டு மனை வாங்க திட்டமிடுவீர்கள். ராஜ கிரகங்களான சனியும், குருவும் வலுவாக அமர்ந்திருப்பதால் நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வீட்டில் ஒரு அறை கூடுதலாகக் கட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். மலையாளம், தெலுங்கு மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உங்களிடம் வலிய வந்து உறவாடுவார்கள். சூரியன் இந்த மாதம் முழுக்க 12&ம் இடத்தில் மறைந்திருப்பதால் அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டி பூசல்கள் மறையும். மாணவ மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்த்து ரசிக்க வேண்டுமென்று நினைத்திருந்த ஊர்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உயர்கல்வி மீது இருந்த ஆர்வமில்லாப் போக்கு மாறும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புது பங்குதாரர்களும் வருவார்கள். புரோக்கரேஜ், கிரானைட், மொசைக், டைல்ஸ் போன்ற வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். இழுபறியான பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் கடின உழைப்பையும் தியாக உணர்வையும் மேலதிகாரி புரிந்து கொள்வார். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும். கலைத்துறையினரே! ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பழைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். ஊரிலே புது பொறுப்புகள் வரும். தன்னிச்சையான முடிவுகளாலும், விரைந்து செயல்படுவதாலும் எதிலும் உங்கள் கை ஓங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 14, 15, 16, 22, 23, 24, 25, 31 மற்றும் பிப்ரவரி 1, 2, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 3ம் தேதி இரவு மணி 8.45 முதல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வீண் டென்ஷன் வேண்டாம்.

பரிகாரம்: பிரசித்தி பெற்ற சித்தர் பீடம் ஒன்றை தரிசிக்கவும். பசுவிற்கு உணவிடவும்.

மீனம்

சேமித்து வைப்பதில் தேனீக்களைப்போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப்போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதையே செய்வீர்கள். இந்த மாதம் முழுக்க ராசிக்கு 11ம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் மன தைரியம் பிறக்கும். உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிபுகுவீர்கள். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். அரசு அதிகாரிகளின் நட்பு கிட்டும். ராசிநாதன் குரு வக்ரமாகி 8ல் மறைந்திருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்துவிட்டு காசோலையில் கையொப்பமிட்டு தருவது நல்லது. யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிலும் மகிழ்ச்சி தங்கும். சோம்பல் நிங்கி சுறுசுறுப்படைவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

தர வேண்டிய பணத்தை தந்து முடிப்பீர்கள். கலாட்டா குடும்பமாக இருந்த உங்கள் குடும்பம் இனி அமைதியாக மாறும். கணவன்மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 20ம்ந் தேதி முதல் செவ்வாய் ஆட்சிப் பெற்று 9ம் வீட்டில் அமர்வதால் தடைகளெல்லாம் விலகும். உடன் பிறந்தவர்களுடனான மோதல்கள் விலகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியினரும் மதிக்கும்படி சில கருத்துக்களை வெளியிடுவீர்கள். உங்கள் அறிவுப்பூர்வமான, சாதுர்யமான பேச்சை கேட்டு சகாக்கள் மகிழ்வார்கள். மாணவ மாணவிகளே! விளையாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தயக்கமில்லாமல் ஆசிரியரிடம் உங்களுடைய சந்தேகத்தை கேட்கத் தவறாதீர்கள். கன்னிப் பெண்களே! உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர்கள். பெற்றோரின் அறிவுரையில் உண்மையிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும்.

பழைய வாடிக்கையாளர்களும் வருவார்கள். வாடிக்கையாளர்களின் மனங்கோணாமல் நடந்து கொள்ளுங்கள். உணவு, டெக்ஸ்டைல், ஹார்டுவேர் வகைகளாலும் லாபம் வரும். பழைய பாக்கிகளை சாமர்த்தியமாக பேசி வசூலிப்பீர்கள். வேலைப்பளு அதிகம் இருக்கும் நேரத்தில் வேலையாட்கள் விடுப்பில் செல்வார்கள். பங்குதாரர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். உத்யோகத்தில் சில நேரத்தில் மேலதிகாரி எரிந்து விழுவார். நிரந்தரமற்ற சூழல் உருவாகும். சக ஊழியர்களிடம் உஷாராக பழகுங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வற்றிய கிணறு சுரக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அலைச்சலும், செலவுகளும் ஒருபக்கம் இருந்தாலும் தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 15, 16, 17, 18, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் பிப்ரவரி 2, 3, 4, 5,11,12.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 6, 7 மற்றும் 8ந் தேதி காலை மணி 11.27 வரை யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

பரிகாரம்: திருபுவனம் சரபேஸ்வரரை வணங்கி வரவும். நலிந்தோர்க்கு புடவை வாங்கித் தரவும்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்