மகத்துவம் தரும் மாசி மாத ராசிபலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
மேஷம்

மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்து பார்ப்பதில் வல்லவர்களான நீங்கள் எங்கும், எதிலும் அழகுணர்வையே விரும்புவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க லாப வீட்டிலேயே நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் ஆரோக்கியம் சீராகும். சொந்த ஊரில் வாங்கியிருந்த இடத்தை கட்டுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். நண்பர், உறவினர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

உடல் ஆரோக்கியம் சீராகும். ராசிநாதன் செவ்வாய் மார்ச் 9ம் தேதி வரை 8ல் அமர்ந்திருப்பதால் அநாவசியச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். இரண்டு, மூன்று வேலைகளை ஒரே நாளில் பார்க்க வேண்டியது வரும். தர்மசங்கடமான சூழ்நிலைகளும் அதிகரிக்கும். சகோதரங்களை விட்டுப் பிடிப்பது நல்லது. 10ம் தேதி முதல் சனியும், செவ்வாயும் சேர்வதால் தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. மனஉளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். ஆனால், சகோதரங்களால் ஆதாயம் கிடைக்கும்.

இந்த மாதம் முழுக்க புதனும், சுக்கிரனும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த தொகை உடனடியாக வந்து சேராவிட்டாலும் சற்று தாமதமாக வந்து சேரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பாதியில் நின்றுபோன வீடு கட்டும் பணி வங்கிக் கடன் உதவியுடன் மீண்டும் தொடர்வீர்கள்.

பழைய நண்பர்கள், உறவினர்கள் உங்களுடைய புதிய திட்டத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ராசிக்கு 7ல் அமர்ந்திருந்த குரு 14ம் தேதி முதல் அதிசார வக்ரமாகி 8ல் மறைவதால் சில நேரங்களில் தைரியம் குறையும். தன்னைப் பற்றி மற்றவர்கள் தவறாக நினைக்கிறார்களே! மதிப்பு, மரியாதை குறைந்து விடுமோ! வேறு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்றெல்லாம் அச்சப்படுவீர்கள்.

ஆனால் சனி பலமாக இருப்பதால் வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 13, 14, 15, 23, 26 மற்றும் மார்ச் 4, 5, 6, 14.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 7ம் தேதி மாலை 6.56 மணி முதல் 8, 9ம் தேதி வரை.

ரிஷபம்

விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள். அடுத்தடுத்து வேலைகள் வந்தாலும் அசராமல் முடிப்பவர்கள். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் மனைவி வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். திருமணமத் தடைகள் நீங்கும். அடிக்கடி பழுதான வாகனம் சரியாகும்.

சூரியனும் சாதகமாக இருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். மார்ச் 9ம் தேதி வரை செவ்வாய் 7ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதனால் உடல் உஷ்ணம் அதிகமாகும். கார உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சகோதரங்களால் நல்லது நடக்கும். ஆனால், மார்ச் 10ம் தேதி முதல் செவ்வாய் சனியுடன் சேர்வதால் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

கணவன் மனைவிக்குள் பிரிவுகள் வர வாய்ப்பிருக்கிறது. புதன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் உறவினர்கள் உங்களைப்பற்றி பெருமையாக பேசுவார்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். 6ல் மறைந்த குருபகவான் 14ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் 7ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதனால் இக்காலக்கட்டத்தில் நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவிவழி உறவினர்களுக்கு உதவுவீர்கள். மனைவிவழி உறவினர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் அலட்சியப் போக்கையும் மாற்றிக் கொள்வது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை கால தாமதமில்லாமல் செலுத்துவது நல்லது.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 17, 18, 19, 20, 21, 26, 27, 28 மற்றும் மார்ச் 2, 4, 6, 8, 9.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 13ம் தேதி காலை 9.55 மணி வரை மற்றும் மார்ச் 10,11,12ம் தேதி மாலை 5.09 மணி வரை.

மிதுனம்

இடம் பொருள் ஏவல் தெரிந்து, இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள் எதிரியானாலும் உதவும் குணமுடையவர்கள். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி அடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கோபம் தணியும். சொந்த, பந்தங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது நட்பு மலரும்.

வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். ஆனால், பிதுர்காரகன் சூரியன் இப்போது 9ம் வீடான பிதுர் ஸ்தானத்திலேயே அமர்வதால் தந்தையாருக்கு லேசாக உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். செவ்வாய் 6ல் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆனால், மார்ச் 10ம் தேதி முதல் செவ்வாய், சனியுடன் 7ம் வீட்டில் அமர்வதால் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுங்கள். மனைவிக்கு வேலைச்சுமை வந்து போகும். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.

இந்த மாதம் முழுக்க சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 5ல் அமர்ந்திருந்த குருபகவான் 14ம் தேதி முதல் அதிசார வக்ரமாகி 6ல் மறைவதால் மற்றவர்கள் தன்னைப் பற்றி தரக்குறைவாக நினைக்கிறார்களே! என்ற அச்சமெல்லாம் இருக்கும்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். ராசியை தொடர்ந்து சனிபகவானும் பார்த்துக் கொண்டிருப்பதால் வீண் சந்தேகத்தால் கணவன்மனைவிக்குள் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

வியாபாரத்தில் லாபம் சற்று குறைவாக இருக்கும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பங்குதாரருடன் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். வாகன உதிரி பாகங்கள், பூ, ஸ்டேஷனரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களும் வருவார்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். 9ம் தேதி வரை செவ்வாய் 6ல் அமர்ந்திருப்பதால் உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். ஆனால் ராகுவும், கேதுவும் சரியில்லாததால் மறைமுக எதிர்ப்புகளும் வந்துப் போகும். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பிற்பகுதி அலைச்சலை தந்தாலும் முற்பகுதியில் அதிரடி முன்னேற்றம் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 18, 19, 20, 21, 22, 27, 28 மற்றும் மார்ச் 1, 2, 3, 4, 8, 11.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 13ம் தேதி காலை 9.56மணி முதல் 14,15ம் தேதி இரவு 8.51மணி வரை மற்றும் மார்ச் 12ம் தேதி மாலை 5.10 மணி முதல் 13,14ம் தேதி வரை.

கடகம்

சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள், போராட்டங்களை ரசித்து வாழக்கூடிய மனசுடையவர்கள். இந்த மாதம் முழுக்க சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதையும் சமாளிக்கும் வல்லமை உண்டாகும். மனோபலம் கூடும். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். சூரியன் இப்போது 8ம் வீட்டில் நுழைந்திருப்பதால் மனைவிக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி நீங்கும். அவருடன் இருந்த கருத்து வேறுபாடுகளும் விலகும்.

அநாவசியச் செலவுகள் குறையும். ஆனால், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். 9ம் தேதி வரை செவ்வாய் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்தைப் பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வரக்கூடும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். 10ம் தேதி முதல் செவ்வாய், சனியுடன் சேர்ந்து 6ம் வீட்டில் அமர்வதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதரருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். புண்ணிய தலங்கள் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். 4ல் அமர்ந்திருந்த குருபகவான் 14ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வலுவாக அமர்வதால் இக்காலக்கட்டத்தில் பூர்வீக சொத்து கைக்கு வரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சனி தொடர்ந்து சாதகமாக இருப்பதால் வேற்றுமொழிப் பேசுபவர்கள், வேற்றுமாநிலத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் சேர்ந்து புது வியாபாரம் தொடங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஷேர் மூலம் பணம் வரும்.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 14, 21, 22, 23, 24 மற்றும் மார்ச் 1, 2, 3, 4, 5, 6, 11, 12, 14.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 15ம் தேதி இரவு 8.52மணி முதல் 16,17ம் தேதி வரை.

சிம்மம்

நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் தைரியம் கூடும். சவாலான காரியங்களைக் கூட கையில் எடுத்து முடிக்க துணிவீர்கள். ஆனாலும் கண் எரிச்சல், உஷ்ணத்தால் வேனல் கட்டி, தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்துப் போகும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். பணத்தட்டுப்பாடு குறையும். உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வெளியூர் பயணங்களால் மனஅமைதி கிடைக்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். 9ம் தேதி வரை செவ்வாய் சாதகமாகி செல்வதால் மகனுக்கு வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வாழ்க்கைத் துணையும் அவருக்கு அமையும். சொத்துப் பிரச்னையும் சாதகமாக முடிவடையும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். ஆனால் 10ம் தேதி முதல் செவ்வாய், சனியுடன் சேர்வதால் வாகனத்தை இயக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம்.

பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். 3ம்தேதி முதல் சுக்கிரன் 8ல் அமர்ந்து உங்களின் தனஸ்தானத்தை பார்க்க இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். கணவன்மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர், ஈகோ பிரச்னைகள் நீங்கும். மனம் விட்டு பேசுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

உறவினர், நண்பர்களின் ஆதரவுப் பெருகும். 3ல் அமர்ந்திருந்த குருபகவான் 14ம் தேதி முதல் அதிசார வக்ரமாகி 4ல் அமர்வதால் யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் வரும். தாயாரை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஒரு ஆதங்கமும் அடிமனதில் வந்துப் போகும். சில நேரங்களில் சூழ்நிலை கைதியாக சிக்கிக் கொள்வீர்கள். தர்மசங்கடமான சூழல்களும் அவ்வப்போது வரும். வாகனம் அடிக்கடி பழுதாகும். இரவில் வாகனத்தை பயன்படுத்த வேண்டாம். உங்கள் வாகனத்தையும் மற்றவர்களுக்கு இரவல் தர வேண்டாம். 5ல் சனி நிற்பதால் பூர்வீக சொத்து விஷயத்தில் பதட்டப்பட வேண்டாம். பாகப்பிரிவினை சற்று தாமதமாக முடிவடையும்.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 13, 14, 15, 24, 25, 26 மற்றும் மார்ச் 4 ,5, 6, 7, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 18, 19, 20ம் தேதி நண்பகல் 12.25மணி வரை.

கன்னி

மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக்கூடியவர்கள். 12ம் வீட்டிற்குரிய சூரியன் 6ல் அமர்வது விபரீத ராஜயோகத்தை தரக்கூடிய அமைப்பாகும். இந்த மாதம் முழுக்க சூரியன் 6ல் நிற்பதால் எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். அரைக்குறையாக நின்ற காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். 9ம் தேதி வரை செவ்வாய் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தைரியம் பிறக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும்.

சகோதரங்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். தாயாருக்கு இருந்து வந்த முதுகு, மூட்டு வலி நீங்கும். 10ம் தேதி முதல் செவ்வாய், சனியுடன் சேர்வதால் தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்துள்ள சுக்கிரன் உங்களுக்கு பணப்பற்றாக்குறையையும், கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்களையும், ஈகோ பிரச்னையால் பிரிவுகளையும் தந்து கொண்டிருக்கிறார். ஆனால் 3ம் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் அதுமுதல் சிக்கல்கள் நீங்கும்.

அழகு, இளமை கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். 26ம் தேதி வரை ராசிநாதன் புதன் வலுவிழந்து காணப்படுவதால் ஓய்வில்லாமல் வேலை பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும், நண்பர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். 27ம் தேதி முதல் புதன் ராசியை பார்க்க இருப்பதால் அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சொத்துச் சிக்கல் தீர்வுக்கு வரும். 2ல் அமர்ந்திருந்த குருபகவான் 14ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் 3ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள். 4ம் வீட்டில் சனி தொடர்வதால் தாயாருடன் மனவருத்தம் வரும். தாய்வழி சொத்துக்களை பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் கவனமாக இருங்கள். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும்.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 16, 17, 18, 19, 26, 27, 28 மற்றும் மார்ச் 2, 6, 8, 9, 11.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 20ம் தேதி நண்பகல் 12.26மணி முதல் 21,22ம் தேதி மாலை 4.46மணி வரை.

துலாம்

எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவரான நீங்கள் நல்லது கெட்டது தெரிந்து செயல்படுவீர்கள். சனி சாதகமாக இருப்பதால் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். அயல்நாடு செல்ல மகனுக்கு விசா கிடைக்கும். லாபாதிபதியாகிய சூரியன் 5ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் ஆரோக்யத்தில் இந்த மாதம் முழுக்க கூடுதல் அக்கறை செலுத்துங்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பாக்யாதிபதி புதன் 26ந் தேதி வரை 5ல் நிற்பதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். ஆனால் 27ந் தேதி முதல் 6ல் சென்று மறைவதால் திடீர் செலவுகள் வந்துப் போகும். தந்தையாருக்கு உடல் நல பாதிப்பும், அவருடன் கருத்து மோதல்களும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். உங்கள் ராசிக்கு 9ம் தேதி வரை 2ல் செவ்வாய் தொடர்வதால் பணத்தட்டுப்பாடு இருக்கும். சகோதரங்களால் அலைச்சல்களும், செலவினங்களும் இருக்கும். 10ம் தேதி முதல் செவ்வாயுடன், சனியும் சேர்வதால் மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமுண்டு.

என்றாலும் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2ம் தேதி வரை 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மகள் உங்களைப் புரிந்து கொள்வாள். மகனின் அலட்சியப்போக்கு மாறும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆனால், 3ம் தேதி முதல் சுக்கிரன் 6ல் சென்று மறைவதால் அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வாகனம் பழுதாகும்.

கணவன் மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்துவலி வந்துபோகும். மனைவி வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்திருந்த குரு 14ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் 2ல் அமர்வதால் தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 14, 19, 20, 21, 27, 28 மற்றும் மார்ச் 1, 2, 4, 8, 9, 10, 14.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 22ம் தேதி மாலை 4.47மணி முதல் 23, 24ம் தேதி இரவு 7.42 மணி வரை.

விருச்சிகம்

தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வாதங்களில் வெல்வீர்கள். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவீர்கள். உங்கள் ராசிக்கு சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை அமையும். தந்தைவழியில் உதவிகள் கிட்டும். தந்தைவழி சொத்து வந்து சேரும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அரசாங்க காரியங்கள் உடனடியாக முடியும். வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும்.

ஏழரைச் சனி தொடர்வதால் விலை உயர்ந்த ஆபரணங்கள், முக்கிய ஆவணங்களை மறதியால் இழந்துவிடாதீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். 9ம் தேதி வரை செவ்வாய் உங்கள் ராசிக்குள் ஆட்சிபெற்று நிற்பதால் தூக்கம் குறையும். எதிர்மறை எண்ணங்கள் வரும். சின்னச் சின்ன விஷயங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும். என்றாலும் சகோதரங்களின் ஆதரவு பெருகும். ஆனால், 10ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் சங்கடங்கள், பணப்பற்றாக்குறை, சொத்து சிக்கல்கள், பழைய கடன் பற்றிய கவலைகள் வந்துச் செல்லும்.

ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் எதிர்பார்த்து ஏமர்ந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சாலைகளை கடக்கும் போது ஏற்பட்ட பயம் விலகும். உங்கள் ராசிக்கு 12ல் அமர்ந்திருந்த குருபகவான் 14ம் தேதி முதல் அதிசார வக்ரமாகி ராசிக்குள்ளேயே நிற்பதால் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்கள் திறமை மீது சிலநேரம் சந்தேகம் வரும். இன்னும் கொஞ்சம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பீர்கள். அடுத்தவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்து குழம்பாதீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். உதவுவார்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள்.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 13, 14, 15, 21, 22, 23 மற்றும் மார்ச் 1, 2, 3, 4, 10, 11, 12, 14.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 24ம் தேதி இரவு 7.43மணி முதல் 25, 26ம் தேதி இரவு 9.52 மணி வரை.

தனுசு

எறும்பு போல் அயராது உழைத்து, தேன்போல் சேமிக்கும் இயல்புடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் 3ல் அமர்ந்திருப்பதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவையும் வெற்றி பெற வைப்பார். தடைகளெல்லாம் நீங்கும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.

ராகு 8ல் தொடர்வதால் கை, காலில் அடிபடுதல், மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். ராசிக்கு 2ல் கேது நிற்பதால் சில நேரங்களில் மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் வம்பில் சிக்கிக் கொள்வீர்கள். ஜென்மச் சனி நடைபெறுவதால் பெரிய நோய்கள் இருப்பது போல் தெரியும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். மனைவிக்கு வேலை கிடைக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசம் என வீடு களைக்கட்டும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். 9ம் தேதி வரை செவ்வாய் 12ல் நிற்பதால் தலைச்சுற்றல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவ்வப்போது பழைய கசப்பான சம்பவங்களையும் நினைத்து குழம்புவீர்கள். 10ம் தேதி முதல் செவ்வாய் சனியுடன் சேர்ந்து பலவீனமடைவதால் மனதில் இனந்தெரியாத குழப்பம் வந்து போகும். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். 2ம் தேதி வரை சுக்கிரன் 3ல் அமர்ந்திருப்பதால் பணவரவு அதிகரிக்கும். நம்மால் முடிக்க முடியுமா என நீங்கள் மலைப்புடன் பார்த்த பல காரியங்கள் இப்போது முடியும்.

வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனைவி, பிள்ளைகள் நீண்ட நாளாகக் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். 03ம் தேதி முதல் சுக்கிரன் 4ல் அமர்வதால் புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருந்த குரு 14ம் தேதி முதல் அதிசார வக்ரமாகி 12ல் மறைவதால் அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. தூக்கம் குறையும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 14,15,17,24,25, மற்றும் மார்ச் 4,5,6,13,14.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 26ம் தேதி இரவு 9.53மணி முதல் 27,28ம் தேதி வரை.

மகரம்

தென்றலாய் காணப்பட்டாலும் அவ்வப்போது புயலென மாறும் நீங்கள் பேச்சிலும், செயலிலும் வேகத்தைக் காட்டுபவர்கள். செவ்வாய் 9ம் தேதி வரை லாப வீட்டிலேயே வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சவாலான காரியங்களைக் கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

ஷேர் மூலமும் பணம் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பொறுப்புகள், கௌரவப் பதவிகள் வரக்கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். 2ல் சூரியன் நிற்பதால் வார்த்தைகளில் கனிவு வேண்டும். சில நேரங்களில் கறாராகப் பேசி சிலரின் மனதை புண்படுத்துவீர்கள். கண் எரிச்சல் வரக்கூடும். ஏழரைச்சனி தொடங்கியிருப்பதால் எதிர்காலம் பற்றிய பயம் வந்துச் செல்லும். கடந்த கால கசப்பான சம்பவங்களால் அவ்வப்போது தூக்கம் குறையும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். 10ம் தேதி முதல் செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள்.

யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்துச் செல்லும். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். சுக்கிரன் வலுவடைந்து நிற்பதால் இதமாகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். தோற்றப் பொலிவு கூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுது விலகும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்கள் ராசிக்கு இதுவரை 10ல் அமர்ந்திருந்த குருபகவான் 14ம் தேதி முதல் அதிசார வக்ரமாகி லாப வீட்டில் அமர்வதால் எங்கு சென்றாலும் முதல் மரியாதையைத் தருவார். எதிர்பார்த்த வகையில் பணமும் வரும். மூத்த சகோதரங்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

பூர்வீக சொத்துப் பிரச்னையும் முடிவுக்கு வரும். வேலை கிடைக்கும். வீட்டை மாற்றுவது, விரிவுப்படுத்துவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். பழைய டிசைன் நகைைய மாற்றி புது டிசைனில் நகை வாங்குவீர்கள். புதன் வலுவான வீடுகளில் செல்வதால் உங்களின் நட்பு வட்டம் விரியும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். வெளி நாட்டில் இருக்கும் உறவினர், நண்பர் உதவுவார்கள். விசா கிடைக்கும்.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 17, 18, 19, 20, 25, 26, 27, 28 மற்றும் மார்ச் 6, 8, 9, 11.

சந்திராஷ்டமம்: மார்ச் 1, 2ம் தேதி வரை.

கும்பம்

நல்ல நிர்வாகத் திறனும், பரந்த அறிவும் கொண்ட நீங்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் அசாத்தியத் திறனுள்ளவர்கள். இந்த மாதம் உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தப்பாருங்கள். காரம் மற்றும் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். 9ம் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும்.

உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த உறவினர், நண்பர்களை இனம்கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்கள் உங்களின் ஆலோசனையையும் ஏற்றுக் கொள்வார்கள். 10ம் தேதி முதல் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் சின்னச் சின்ன காரியங்கள் கூட தடைப்பட்டு முடிவடையும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். பணப்பற்றாக்குறையும் இருக்கும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டு மனை வாங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவியுடன் சிலர் வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். முகம் மலரும். வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேற்று மதத்தை சார்ந்தவர்களும் ஆதரவு தருவார்கள். மனைவிவழியில் நன்மை உண்டாகும். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்திருந்த குருபகவான் 14ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் 10ல் அமர்வதால் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும்.

மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். பூர்வ புண்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் அமைதி உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த படி வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உறவினர், நண்பர்கள் மதிப்பார்கள். வெளியூர் பயணங்களால் மனநிம்மதி கிட்டும்.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 19, 20, 21, 27, 28 மற்றும் மார்ச் 1, 2, 8, 9, 10, 11

சந்திராஷ்டமம்: மார்ச் 3,4,5ம் தேதி காலை 10.36மணி வரை.

மீனம்

கடல்போல் விரிந்த மனசும், கலகலப்பாக பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்கள். இந்த மாதம் முழுக்க சுக்கிரன் வலுவான வீடுகளில் செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வாகனம் சரியாகும். அங்கு இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள். கல்யாணம், கிரகப் பிரவேசம் என வீடு களைக்கட்டும்.

உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் சூரியன் நுழைந்திருப்பதால் செலவினங்கள் ஒருபக்கம் இருந்துக் கொண்டேயிருக்கும். ஆனாலும் சுபச் செலவுகளும் அவ்வப்போது உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்கள், நெருங்கியிருப்பவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களே!

அவர்களுக்கெல்லாம் விலை உயர்ந்த பொருள் வாங்கித் தருவது அல்லது அவர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவது என்று பல காரியங்களையும் இந்த மாதத்திலே நீங்கள் செய்வீர்கள். திடீர் பயணங்களால் சோர்வு, களைப்பு அதிகரிக்கும். சனி சாதகமாகி நிற்பதால் சோர்ந்து விடாமல் முயன்றுக் கொண்டேயிருப்பீர்கள். நல்லவர்களின் நட்பும் கிடைக்கும். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள், வேற்றுமொழிக்காரர்கள் ஆதரவாக இருப்பார்கள். செவ்வாய் 9ம் தேதி வரை 9ல் அமர்ந்திருப்பதால் மனஉளைச்சல் நீங்கும்.

சாத்வீகமான எண்ணங்கள் வரும். பழைய பிரச்னையை மாறுபட்ட கோணத்தில் யோசித்து புது தீர்வு காண வழி கிடைக்கும். 10ம் தேதி முதல் சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் உத்யோகத்தில் மரியாதை குறைவான சம்பவங்கள் நிகழக் கூடும். மேல் அதிகாரியுடன் பணிப்போர் வந்து நீங்கும். சகோதரங்களால் நிம்மதி இழப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு 8ல் அமர்ந்திருந்த குருபகவான் 14ம் தேதி முதல் அதிசார வக்ரமாகி 9ல் அமர்ந்து வலுவாக இருப்பதால் உங்களின் செல்வாக்கு உயரும். ஷேர் மூலம் பணம் வரும். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தந்தைவழியில் மதிப்பு, மரியாதை கூடும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு மாறுவீர்கள். வழக்கு வெற்றி அடையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

ராசியான தேதிகள்: பிப்ரவரி 13, 14, 21, 23, 26 மற்றும் மார்ச் 1, 2, 3, 4, 10, 11, 13, 14.

சந்திராஷ்டமம்: மார்ச் 5ம் தேதி காலை 10.37 மணி முதல் 6,7ம் தேதி மாலை 6.55 மணி வரை.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்