இந்தவார ராசிலன்கள் (மார்ச் 11-03-2018 முதல் 17-03-2018 வரை)

Report Print Gokulan Gokulan in ஜோதிடம்
889Shares
889Shares
lankasrimarket.com

இந்தவார ராசிலன்கள் (மார்ச் 11-03-2018 முதல் 17-03-2018 வரை)

மேஷம்

தனாதிபதி சுக்கிரன் பனிரெண்டில் உச்சமடைந்து குருவுடன் பரிவர்த்தனை அடைவதால் இது மே‌ஷத்தினர் செலவு செய்யும் வாரமாக இருக்கும். குறிப்பாக வாழ்க்கைத் துணையின் மனமறிந்து சுப விரயம் செய்வீர்கள். ராசிநாதன் செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.. பிள்ளைகள் வி‌ஷயத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது ஜாலியான வாரம். படிப்பை தவிர மற்ற எல்லா வி‌ஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.

தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். இளைஞர்களுக்கு எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். சிலருக்கு வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும்.

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரனும், லாபாதிபதி குருவும் பரிவர்த்தனை அடைந்து அதில் சுக்கிரன் உச்சமடைவதால் இது நல்ல வாரம்தான். எட்டாமிடத்தில் செவ்வாயும், சனியும் இணைவது நல்ல பலனைச் செய்யும் அமைப்பு இல்லை என்றாலும் கூட ராசிநாதன் உச்ச வலுவடைந்து பரிவர்த்தனை பெறுவது வரவிருக்கும் கெடுதல்களை தடுக்கின்ற ஒரு அமைப்பாக இருக்கும். வாக்குஸ்தானத்தைப் பார்க்கும் செவ்வாய், சனியால் உறவினர்களுடன் உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.

அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் ரி‌ஷபத்தினர் இருப்பதால் சோம்பலுக்கு இடம் கொடாமல் எதிலும் சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக வேலைமாற்றம், தொழில் விரிவாக்கம் போன்ற வி‌ஷயங்களில் அவரசப்படாமல், அடுத்தவரை நம்பாமல் நிதானமாக எதையும் சிந்தித்து செய்யுங்கள். தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் அனைத்து வி‌ஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள் என்பது நிச்சயம்.

மிதுனம்

ராசிக்கு ஏழாமிடத்தில் சனி, செவ்வாய் இணைவதால் மிதுனத்தினர் இந்த வாரம் நண்பர்கள் வி‌ஷயத்தில் மனக்கசப்பு அடையும் வாரமாக இருக்கும். குறிப்பாக மிகவும் நெருங்கிய நண்பர் என்று நீங்கள் நம்பும் ஒருவரிடம் இருந்து அதற்கு மாறான செய்கைகளை பார்த்து மனவருத்தம் அடைவீர்கள். 30 வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு உண்மையான நட்பை அடையாளம் காட்டும் வாரம் இது. ராசிநாதன் புதன் நீசமடைவதால் அனைத்திலும் தடைகளும், தாமதங்களும் இருக்கும்.

ராசியை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பதால் உங்களை வெறுப்பேற்றும் விதமான சம்பவங்கள் நடந்தாலும், குருவின் பார்வையும் ராசிக்கு இருப்பதால் அனைத்தையும் நிதானமாகவும், மன உறுதியுடனும் நீங்கள் சமாளித்து வெற்றி கொள்வீர்கள். 12,14,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 12ம்தேதி மாலை 4.19 மணி முதல் 15ம்தேதி அதிகாலை 4.13 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எந்த ஒரு வி‌ஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும்.

கடகம்

கடகத்தினருக்கு இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் யாவும் முழுமையாக பலன் தரும் வாரமாக இருக்கும். ராசியின் யோகர்களான செவ்வாய், சூரியன் இருவரும் குருவின் வீட்டிலும், குருவின் பார்வையிலும் அமர்ந்து சுபத்துவ தொடர்புகளை பெறுவதால் எந்த ஒரு வி‌ஷயத்திலும் துணிந்து இறங்குவதற்கு ஏற்ற வாரம் இது. லாபஸ்தானம் பலம் பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து வி‌ஷயங்களும் சிறப்பாக நடைபெறும். சிகப்புநிறம் சம்பந்தப்பட்டவர்கள், கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் மிகுந்த நன்மைகளைப் பெறுவீர்கள்.

ராசியில் இருள்கிரகமான ராகு இருப்பதால் கடகத்தினர் ஒருமுறை ராகுபகவான் பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத் தலங்களுக்கு சென்று ராகு பகவானுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. 14,15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 15ம் தேதி அதிகாலை 4.13 மணி முதல் 17ம்தேதி மதியம் 1.31 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

சிம்மம்

மூன்று, எட்டுக்குடையவர்கள் பரிவர்த்தனையாவதால் எதிர்பாராத திடீர் லாபங்களை சிம்ம ராசிக்காரர்கள் அடைகின்ற வாரம் இது. வார ஆரம்பத்தில் ராசிநாதன் சூரியன் ராசியைப் பார்த்து அவரை குருபகவான் பார்ப்பதால் எதிலும் சிம்மத்தினர் வெற்றியை மட்டுமே எதிர்நோக்குவீர்கள். சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் மனதளவிலும் உடல்நிலையிலும் புத்துணர்ச்சியையும், சந்தோ‌ஷத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம். இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது.

நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். வேலை, தொழில் வி‌ஷயங்களில் இருந்து வந்த இடைஞ்சல்கள் நீங்கும். பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். 15,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 17ம்தேதி மதியம் 1.31 மணி முதல் 19ம் தேதி இரவு 8.08 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம்.

கன்னி

ராசிநாதன் புதன் நீசபங்க அமைப்பிலும், யோகாதிபதி சுக்கிரன் பரிவர்த்தனை யோகத்திலும் இருப்பதால் கன்னி ராசிக்காரர்களின் முயற்சிகள் அனைத்தும் முதலில் தடைகளுக்கு உள்ளாகி முடிவில் ஜெயிக்கின்ற வாரமாக இது இருக்கும். புதன் நீசமடைந்தாலும் ராசியை பார்க்கிறார் என்பதால் கன்னிக்கு கெடுபலன்கள் எதுவும் நடக்க முடியாத வாரம் இது. உங்கள் திறமைகள் இப்போது வெளிவரும். சிலருக்கு குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள்.

சிறிய வி‌ஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். ராசிநாதன் வலுக்குறைந்து இருப்பதாலும் எட்டுக்குடைய செவ்வாய் யோகாதிபதி சனியுடன் இணைவதாலும் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் வரப்போவது இல்லை. நெருங்கிய நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

துலாம்

முயற்சி ஸ்தானமான மூன்றா மிடத்தில் பாபக் கிரகங்களான செவ்வாய், சனியும் இணைந்திருக்கும் நிலையில் ராசிநாதன் சுக்கிரன் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு “பழம் நழுவி பாலில் விழுந்தது” போன்ற நிலை என்பதால் துலாத்தினர் தொட்டது துலங்கும் வாரம் இது. குருபகவான் ராசியில் இருப்பதால் பணவரவுகளுக்கும் பஞ்சமில்லாத வாரமாகவும் இது இருக்கும். இளைஞர்களுக்கு இனி கெடுதல்கள் நடக்காது. உங்களில் சிலருக்கு துயரங்கள் அனைத்தும் தீருவதற்கான வாரமாக இது இருக்கும்.

ஆறு எட்டு பனிரெண்டிற்குடையவர்கள் யோக அமைப்பில் இருப்பதால் அனைத்திலும் மறைமுகமாக நன்மைகள் நடக்கும் வாரம் இது. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. எந்த ஒரு வி‌ஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். ராசிநாதன் வலுவாக இருப்பதால் எல்லாம் நன்றாக நடக்கும்.

விருச்சிகம்

ஜென்மச்சனி விலகி விட்டதாலும், ஜீவனாதிபதி சூரியன் தன் வீட்டை தானே பார்ப்பதாலும், ஐந்துக்குடை யவன் பரிவர்த்தனை அடைவதாலும் இது விருச்சிகத்தினரை ஒருபடி முன்னேற்றும் வாரமாக இருக்கும். இரண்டுக்குடையவன் பரிவர்த்தனை வலுப் பெறுவதால் வருமானத்திற்கு குறைவு இருக்காது. இதுவரை இல்லாதவகையில் இப்போது அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தேவையற்ற விவகாரங்களில் காசை விரயம் செய்வீர்கள் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

ஏழரைச்சனி முழுமையாக விலகாததால் எடுக்கும் முயற்சிகளில் முழுமையான ஈடுபாடு தேவைப்படும். குறிப்பாக சாப்ட்வேர், கணக்கு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு டார்கெட் போன்ற இலக்கு நிர்ணையிக்கப்பட்டு அலைச்சல்கள் அதிகம் இருக்கும். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். இப்போது இருக்கும் பிரச்னைகள் நிரந்தரமாக தீரும் காலம் வந்து விட்டது. விருச்சிகம் என்றும் வீண் போகாது. கவலை வேண்டாம்.

தனுசு

ராசியில் சனி, செவ்வாய் இணைவ தால் தனுசுராசி இளைஞர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் வாரமாக இது இருக்கும். ஆயினும் ராசிநாதன் குரு பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் எதுவும் எல்லை மீறாமல் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். குருபகவான் பதினொன்றில் இருப்பதால் ராசியின் பல வீனங்கள் விலகி நடுத்தர வயதினருக்கு நன்மைகள் நடக்கும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான மாற்றங்களைத் தரும் வி‌ஷயங்கள் இப்போது உண்டு.

வாழ்க்கைத்துணை வி‌ஷயங்களில் விட்டுக் கொடுத்துபோங்கள். தனுசுவினருக்கு இப்பொழுது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். இளைய பருவத்தினர் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது. என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மகரம்

இரண்டாம் வீட்டில் அமர்ந்து உங்களின் பணவரவை தடுத்து கொண்டிருந்த எட்டுக்குடைய சூரியன் இந்த வாரம் முதல் விலகுவதால் மகரத்திற்கு தொழில் மேன்மைகளையும், பொருளாதார உயர்வையும் தருகின்ற வாரம் இது. வேலை செய்யும் இடத்தில் மாதாந்திர டார்கெட், உயரதிகாரி தொந்தரவு போன்ற மன அழுத்தங்களை சந்தித்தவர்களுக்கு இந்த வாரம் முதல் அவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். குரு சுக்ர பரிவர்த்தனையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டு. தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

உங்களில் சிலருக்கு தொழிலில் கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்‌ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சய மானாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. சீக்கிரமாக முடிய வேண்டிய வேலைகள் கூட இழுத்துக் கொண்டே போய் எரிச்சலை ஏற்படுத்தும். குருவும், சுக்கிரனும் சுபத்துவ நிலையில் பரிவர்த்தனையாவதால் சிலருக்கு தாமதித்து வந்த விசா கிடைக்கும்.

கும்பம்

ராஜகிரகங்கள் அனைத்தும் சாதக பலன்களை தரும் நிலையில் இருக்கிறார்கள். கும்பத்தினருக்கு அனைத்தும் கிடைக்கின்ற வாரம் இது. அவரவர்களுடைய வயது, தகுதி, இருப்பிடத்திற்கேற்றார் போல நன்மைகள் நடக்கும் என்பதால் இந்த வாரம் நீங்கள் கவலைப்பட தேவையில்லாத வாரமாக இருக்கும். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த வி‌ஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். சகோதர, சகோதரிகள் வி‌ஷயத்தில் நல்லவைகள் உண்டு.

மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத் துடன் செயல்படுவீர்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நல்லதிருப்பங்கள் இருக்கும். கோட்சாரத்தில் நல்ல பலன்கள் இருந்தாலும் உங்களில் சிலர் பிறந்த ஜாதக தசா புக்தி அமைப்புப்படி கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அப்படிப் பட்டவர்களுக்குக் கூட ராசியை ஆக்கிரமித்து உடல்நலம், மனநலம் இரண்டையும் பாதித்துக் கொண்டிருந்த சூரியன் இந்தவாரம் முதல் விலகி அடுத்த ராசிக்கு செல்வதால் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளும், சிக்கல்களும் தீரும்.

மீனம்

எட்டுக்குடைய சுக்கிரன் ராசியில் உச்சமடைவது உங்களில் சிலருக்கு தொழில் ரீதியான மனக்கலக்கங்களை கொடுக்கின்ற ஒரு அமைப்புதான் என்றாலும் குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை அடைவதால் எந்த ஒரு வி‌ஷயமும் எதிராக நடக்காமல் மீனத்தினரின் மனதிற்கேற்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும் என்பது உறுதி. ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்து ஐந்துக்குடையன் பனிரெண்டில் மறைவதால் குழந்தைகளால் செலவுகளும் பிள்ளைகளால் மனவருத்தங்களும் இருக்கும். சிலருக்கு இதுவரை தடையாகி வந்தவைகள் கிடைக்கும்..

எட்டாமிடம் வலுப் பெறுவதால் இப்போது புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வார ஆரம்பத்தில் தேவையற்ற வி‌ஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் உங்கள் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள்.

- Dina Mani

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்