குருபெயர்ச்சி பலன்கள் 2018 - 2019: துலாம் ராசியினரே இதனை படியுங்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

துலாம் ராசி நேயர்களே

எந்த ஊர் சென்றாலும் சொந்த ஊரை மறவாத நீங்கள் அவ்வப்போது கடந்த கால நினைவுகளில் மூழ்குவீர்கள். வாழ்க்கையின் உச்சகட்டத்தை எட்டிய பிறகும் கூட விழுந்து கிடந்ததை மறக்காதவர்களே! தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படி தான் என்பதை உணர்ந்த நீங்கள், கடின உழைப்பாளிகள்.

இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் ஏற்படுத்தினாரே! எங்கு சென்றாலும் ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்தாரே! குடும்பத்திலும் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் இல்லாமல் செய்தாரே! எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று ஆதங்கப்பட்டு புலம்ப வைத்தாரே!

இப்படி பலவகையிலும் இன்னல்களை மாறி மாறித் தந்து மனதில் அமைதியே இல்லாமல் நிலை குலையச் செய்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2ம் வீட்டில் அமர்வதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.

குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

தாழ்வு மனப்பான்மை, தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை விட்டு முழுமையாக விலகுவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

பழுதாகிக் கிடந்த வாகனம், மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இனந்தெரியாத கவலைகளால் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும்.

நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தையாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்யமும் சீராகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பெரிய நோயிலிருந்து விடுபடுவீர்கள். குரு 8ம் வீட்டை பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

ஆயுள் கூடும். வேற்றுமதத்தினர் உதவுவார். குரு 10ம் வீட்டை பார்ப்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் சேவகாதிபதியும், சஷ்டமாதிபதியுமான குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள்.

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சுக, பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

புது வேலை கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும்.வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

பூர்வீக சொத்தால் வருமானம் வரும். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு.

புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிசார வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் தலைசுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்துசெல்லும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மனைவிவழியில் செலவுகள் அதிகமாகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டாம். தூக்கம் குறையும். நண்பர்களுடன் மோதல்கள் வரும். யூரினரி இன்ஃபெக்‌ஷன், தோலில் நமைச்சல், மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். இடையிடையே பணவரவும், வி.ஐ.பி தொடர்பும் கிடைக்கும்.

வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். ரெட்டிப்பு லாபம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

முரண்டுபிடித்த வேலையாட்கள் இனி ஒத்துழைப்பார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள்.

சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவ பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார்.

உத்யோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! சிறுசிறு அவமானங்களையும் சந்தித்தீர்களே! இனி உங்கள் உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள்.

ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

கன்னிப்பெண்களே!

அலர்ஜி, வயிற்று வலி விலகும். உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் அமருவீர்கள். மொழி அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.

மாணவ, மாணவிகளே!

நினைவாற்றல் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளே!

தலைமையே வியந்து பாராட்டுமளவிற்கு உங்களுடைய களப்பணி சிறப்பாக இருக்கும். எதிர்க்கட்சியினரை உங்களுடைய காரசாரமான பேச்சால் அசர வைப்பீர்கள். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே!

போட்டிகள் குறையும். திரையிட முடியாமல் தடைப்பட்டிருந்த உங்களது படைப்பு வெளியாகும். உங்களைப் பற்றிய வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். வருமானம் உயரும்.

விவசாயிகளே!

மாற்றுப்பயிர் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். மகளின் திருமணத்தை விமரிசையாக முடிப்பீர்கள். இந்த குரு மாற்றம் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும், வீடு, மனை, வாகன யோகத்தையும் அள்ளித் தரும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers