குருபெயர்ச்சி பலன்கள் 2018- 2019: மகரராசியினரே உங்களுக்கு நன்மைகள் கிடைக்குமா?

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்
1701Shares
1701Shares
ibctamil.com

அன்பான மகர ராசிநேயர்களே!

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக்கூடியவர்கள்.

தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறும் நீங்கள் ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்கள். கொடை குணம் கொண்ட நீங்கள் குறுகிய வட்டத்தில் வாழாமல் பரந்து விரிந்த சிந்தனை படைத்தவர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு உத்யோக ஸ்தானமான 10ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைச்சுமையையும், உங்களைப் பற்றிய அவதூறு பேச்சுக்களையும், கௌரவக் குறைவான சம்பவங்களையும் அவமானத்தையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 11ம் வீட்டில் அமர்வதால் இப்போது என்னவாகுமோ, அடுத்தது என்ன நடக்குமோ என்ற அச்சத்தால் கூனிக்குறுகி, ஒதுங்கியிருந்த நீங்கள், இனி வெளியுலகத்திற்கு வருவீர்கள்.

எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் தட்டுத் தடுமாறினீர்களே! குடும்பத்திலும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிரச்னை வந்ததே! இனி அவற்றிற்கெல்லாம் லாப ஸ்தான குருபகவான் நல்ல தீர்வுகளைத் தருவார். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள்.

குருபகவானின் பார்வை பலன்கள்

உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு.

டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். குரு 5ம் வீட்டை பார்ப்பதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி இனி தெளிவு பிறக்கும். மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும்.

மகன் கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவார். உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

குரு ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் விரயாதிபதியும், சேவகாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் உங்களைத் தூண்டி விடுவார்கள்.

கொந்தளித்து வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் ராசிநாதனும், தனாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் அடுத்தடுத்து மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்ததை தந்து முடிப்பீர்கள்.

வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் சஷ்டமாதிபதியும், பாக்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள்.

பூர்வீக சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொந்த, பந்தங்கள் மத்தியில் கௌரவம் கூடும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 12ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சுப செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பணவரவு உண்டு. வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.

மகளுக்கு திருமணம் கூடி வரும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் முன்பாக சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சந்தை நிலவரத்தை தெரிந்து கொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள்.

புது கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெக்குலேஷன், இரும்பு, கட்டிட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை, மறைமுக அவமானம், எதிர்ப்புகள் இருந்ததே! உங்களுக்கு எதிராக சில அதிகாரிகளும், சக ஊழியர்களும் வேலை பார்த்தார்களே! அந்த நிலையெல்லாம் மாறும். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார்.

மூத்த அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். அவரிடமிருந்து அலுவலக ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடையே உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே!

காதல் இனிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கல்யாணமும் கூடி வரும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். புது உத்யோகம் அமையும். ஆடை, ஆபரணம் சேரும். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள்.

மாணவ, மாணவிகளே!

ஏனோ தானோ என்று படிக்காமால் இனி ஆர்வத்துடன் படிப்பீர்கள். நினைவாற்றல் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பெண் உயரும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். சக மாணவர்களின் அன்பைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே!

உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். சில வி.ஐ.பிகளும் உங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவார்கள். கட்சித் தலைமை அதிசயிக்கும் படி சிலவற்றை செய்வீர்கள்.

கலைத்துறையினரே!

வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் என மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! இனி துளிர்த்தெழுவீர்கள். பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும். பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

விவசாயிகளே!

அடகிலிருந்த பத்திரத்தை மீட்பீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். விளைச்சல் அதிகரிப்பதால் சந்தோஷமடைவீர்கள். அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் அடுத்தடுத்து வெற்றிகளையும் பணப்புழக்கத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்