2019 புத்தாண்டு பலன்கள்: வருமானம் உயரும்....வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

தனுசு ராசியினரே! சேமித்து வைப்பதில் தேனீக்களைப் போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப் போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதையே செய்வீர்கள்.

சகதியில் கல்லை விட்டெறிந்தால் அது தன் மேலேதான் தெறிக்கும், என்பதை உணர்ந்த நீங்கள் கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கிவிடுவீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரனும், சுக்கிரனும் நிற்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும்.

வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோவில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். அண்ணனுக்கு திருமணம் சிறப்பாக முடியும்.

தம்பியுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்று போன வீடு கட்டும் வேலையை இனி விரைந்து முடிப்பீர்கள். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.

கல்யாணம், காதுகுத்தி, மஞ்சள் நீராட்டு, கிரகப் பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கோயில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனம் வாங்குவீர்கள். 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் கேதுவும், 8ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரையம், இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும்.

சிலர் உங்கள் வாயைக் கிளறி வேடிக்கை பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கணுக்கால் வலி வந்து செல்லும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோவில் விஷேங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. என்றாலும் தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும்.

மனைவிக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய்க் கோளாறு வந்து செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். இந்த ஆண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாக வருவதால் யாரிடமாவது சண்டைபோட வேண்டும் என யோசிக்க வைக்கும்.

உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது.

உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஆரோக்யம் பாதிக்கும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.

பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். காய்ச்சல், யூரினரி இன்பெக்‌ஷன் வந்துச் செல்லும். வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். பல வருடங்களாக பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாக புரிந்துக் கொள்வார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும்.

கன்னிப்பெண்களே!

பொய்க் காதலை நினைத்து வருந்தாதீர்கள். உங்களின் படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்றாற்போல நல்ல மணமகன் அமைவார். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

மாணவர்களே!

தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது, ஓயாது படித்து விடைகளை எழுதி பாருங்கள்.

அரசியல்வாதிகளே!

எதிர்கட்சியினரின் கேள்விக்கு இடமளிக்காமல் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பாருங்கள்.

வியாபாரிகளே!

பொறுப்பாக செயல்பட்டு லாபத்தை பெருக்கப்பாருங்கள். பக்கத்துக் கடைக்காரரைப் பார்த்து பெரிய முதலீடுகளைப் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பங்குதாரர்களால் விரயம் வரும். ரியல் எஸ்டேட், கமிஷ்ன், அரிசிஎண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.

உத்யோகஸ்தர்களே!

கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். முக்கிய கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. இடமாற்றம் இருக்கும்.

கலைஞர்களே!

அரசால் பாராட்டப்படுவீர்கள். மூத்த கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விவசாயிகளே!

விளைச்சலை நம்பி பெரிய அளவில் கடன் வாங்கி மாட்டிக்கொண்டீர்களே! இப்பொழுது அதனை பைசல் செய்யுமளவிற்கு மகசூல் பெருகும். பக்கத்து நிலத்துக்காரருடன் வீண் தகராறு வேண்டாமே. அவசர முடிவுகளையும், ஆவேசப் பேச்சுகளையும் தவிர்த்தால் வெற்றியும், மகிழ்ச்சியும் தரும் வருடமிது.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers