தை மாதம் ராசிபலன்கள்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு எச்சரிக்கை?

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

12 ராசிகளுக்கான தை மாதராசிபலன்கள்

மேஷம்

வளைந்துக் கொடுக்க தெரியாததால் சில வாய்ப்புகளை நழுவவிட்டவர்களே!

தன்மானம், சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களே! நெற்றியடியாகப் பேசும் நீங்கள், அன்பு காட்டினால் அடிப்பணிந்து வருவீர்கள்.

உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருந்த உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியன் இப்போது 10ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று அமர்ந்ததால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகனுக்கு நல்ல மணமகள் அமையும்.

மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். சிலருக்கு புது வேலைக் கிடைக்கும். சோம்பல், களைப்பு இவற்றிலிருந்து விடுப்பட்டு சுறுசுறுப்பாவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். மிகப் பெரிய பதவி வகிப்பவர்கள் அறிமுகமாவார்கள். 30ந் தேதி முதல் சுக்கிரன் 9ம் வீட்டில் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். ஆனால் 8ல் குரு நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சல், செலவினங்கள் இருக்கும்.

நேரடியாக சென்று சில காரியங்களை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சனிபகவான் 9ல் நிற்பதால் நிற்பதால் தைரியம் பிறக்கும். சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள்.

பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். 31ந் தேதி வரை ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் சின்ன சின்ன விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதரங்களால் அலைச்சல், மனத்தாங்கல் வந்துச் செல்லும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஆனால் 01ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல சாதகமாக அமையும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள், சொந்தபந்தங்களெல்லாம் தேடி வந்துப் பேசுவார்கள்.

எதிர்ப்புகள் நீங்கும். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகள் தேடி வரும். கன்னிப் பெண்களே! புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். மாணவர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி படித்து நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.

வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் இருக்கும். பதிப்பகம், மருந்து, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.

சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். விவசாயிகளே! ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். கரும்பு, மஞ்சள் வகைகளால் லாபமடைவீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்களும், பணவரவும் அதிகரிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 15,20,21,26,27,28 மற்றும் பிப்ரவரி 4,6,7.

சந்திராஷ்டமம்:

ஜனவரி 29ம் தேதி பிற்பகல் 1.49 மணி முதல் 30,31ம் தேதி இரவு 9.31 மணி வரை

ரிஷபம்

நெற்றியில் சுருக்கம் விழுந்தாலும் இதயத்தை இளமையாக வைத்திருப்பவர்களே! தொடங்கிய வேலையை முடிக்கும் வரை தூங்காதவர்களே!

பணப்பற்றைவிட, நாட்டுப் பற்று, மொழிப் பற்று அதிகமுள்ளவர்களே! உங்கள் சுகாதிபதி சூரியன் ராசிக்கு 9ல் நுழைந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். ஆனால் தந்தையாருக்கு அடிக்கடி ஆரோக்ய குறைவு ஏற்படும். அவருடன் மோதல்களும் வரக்கூடும்.

உங்கள் ராசியை ராசிநாதன் சுக்கிரன் பார்த்துக் கொண்டிருப்பதால் அழகு, இளமைக் கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் பிள்ளைகள் அயல்நாடு சென்று உயர்கல்வி கற்பதற்கும், வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. 30ந் தேதி முதல் சுக்கிரன் 8ல் மறைந்தாலும் பணவரவிற்கு பஞ்சமிருக்காது. பழைய சொந்தபந்தங்களை சந்திப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.

எதிர்பார்த்திருந்த தொகை வரத் தொடங்கும். ஆனால் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப்பாருங்கள். நேரம் கெட்ட நேரத்தில் பயணிக்க வேண்டாம். 31ந் தேதி வரை செவ்வாய் பகவான் லாப வீட்டில் நிற்பதால் காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள்.

உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். 01ந் தேதி முதல் 12ல் சென்று மறைவதால் எடுத்து வைக்க முடியாதபடி, சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். புதன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் விலகும்.

பழைய நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு கொண்டுச் செல்லுங்கள். கன்னிப் பெண்களே! முகப்பரு நீங்கி தோற்றப் பொலிவுக் கூடும்.

கசந்த காதல் இனிக்கும். மாணவர்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கணிதம், வரலாற்று பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். கமிஷன், ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள்.

வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் சின்ன சின்ன போராட்டங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். எவ்வளவு வேலைப் பார்த்தாலும் பாராட்டுக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே!

உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். விவசாயிகளே! பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த நிலத்தை மீதிப்பணம் தந்து முடிப்பீர்கள். பழுதான பம்பு செட்டை மாற்றுவீர்கள். மாதத்தின் தொடக்கம் கொஞ்சம் தொந்தரவுகளை தந்தாலும் மையப் பகுதி மகிழ்ச்சியையும், இறுதிப் பகுதி வெற்றியையும் தரும்.

ராசியான தேதிகள்:

ஜனவரி 15,19,20,21,23,24,28,29,30 மற்றும் பிப்ரவரி 6,7,8,9,10,11.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 31ம் தேதி இரவு 9.32மணி முதல் பிப்ரவரி 1,2,3ம் தேதி காலை 7.32 மணி வரை.

மிதுனம்

சோர்ந்து வரும் சொந்த பந்தங்களின் வேடந்தாங்கல்களே! நெருக்கடி நேரத்திலும் தன்னம்பிக்கை தளராதவர்களே! மாறுபட்ட சமுதாயப் பார்வை உள்ளவர்களே! சுற்றியிருப்பவர்கள் சுகப்பட தன் தேவைகளை சுருக்கிக் கொள்பவர்களே!

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனவலிமை கூடும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். சொந்த பந்தங்களால் பாராட்டப்படுவீர்கள். செவ்வாயும் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள்.

சகோதர வகையில் நன்மை உண்டாகும். 29ந் தேதி வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால் செலவினங்களும், சின்ன சின்ன விபத்துகளும் வந்துப் போகும். கணவன்மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். கேஸ் அடுப்பை கவனமாக பயன்படுத்துங்கள்.

நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் குடும்பத்தில் நிகழும் சண்டை, சச்சரவு, அந்தரங்க விஷயங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். 30ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்வதால் கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

சூரியன் 8ல் இந்த மாதம் முழுக்க நிற்பதால் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல், அலைச்சல் வந்துப் போகும். 6ல் மறைந்திருக்கும் குருவும் உங்களுக்கு சோர்வு, களைப்பை ஏற்படுத்துவார்கள். பிள்ளைகளிடமும் சில சமயங்களில் கோபப்பட்டு பேசுவீர்கள்.

சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளையும் பரப்புவார்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். சனிபகவான் 7ல் அமர்ந்திருப்பதால் மனைவியுடன் வாக்குவாதம், அவருக்கு வேலைச்சுமை, மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். வங்கிக் காசோலை விவகாரங்களில் கவனம் தேவை.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் கட்சி மேல்மட்டத்தை விமர்சித்துக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். பெற்றோர் பாசமாக நடந்துக் கொள்வார்கள். மாணவர்களே! வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள்.

அதிகாலையில் எழுந்து படியுங்கள். மாதத்தின் முற்பகுதி வியாபாரம் மந்தமாக இருக்கும். பிற்பகுதியில் சூடுபிடிக்கும். பற்று வரவு உயரும். வேலையாட்களை மாற்றுவீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, ஸ்டேஷனரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் மாதத்தின் முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

பிற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பூச்சித் தொல்லை கட்டுப்பாட்டிற்குள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 15,21,22,23,24,25,30,31 மற்றும் பிப்ரவரி 1,9,10,11,12.

சந்திராஷ்டம தினங்கள்:

பிப்ரவரி 3ம் தேதி காலை 7.40 மணி முதல் 4,5ம் தேதி இரவு 7மணி வரை.

கடகம்

மரத்தடியில் பிறந்தாலும் மாநிலத்தை ஆள நினைப்பவர்களே! முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துக் காட்டுபவர்களே! குழுவாக செயல்படுவதை விரும்புபவர்களே! 29ந் தேதி வரை 5ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால் குழந்தை பாக்யம் உண்டு.

மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய நகையை தந்து விட்டு புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். ஓவன், ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்கள் வாங்குவீர்கள். ஆனால் 30ந் தேதி முதல் சுக்ரன் 6ல் மறைவதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். இந்த மாதம் முழுக்க சூரியன் 7ல் நிற்பதால் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுங்கள். தினந்தோறும் நடைபயிற்சி, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். மனைவிக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குருபகவான் சாதகமாக இருப்பதால் ஊர் பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். சனிபகவான் வலுவாக 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டு. வீடு கட்டத் தொடங்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அறிமுகம் கிடைக்கும்.

அயல்நாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மகிழ்ச்சி உண்டு. தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செவ்வாயும் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கி அமைதியான சூழ்நிலை உருவாகும். சகோதரங்கள் அன்பாக பேசுவார்கள். பொருளுதவியும் செய்வார்கள். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும்.

பெற்றோருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். மாணவர்களே! டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும்.

சின்ன சின்ன நட்டங்கள் வரும். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களை மனங்கோணாமல் நடத்துங்கள். அரிசி, எண்ணெய், இரும்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். ராசிக்குள் ராகு நிற்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

விரும்பத் தகாத இடமாற்றங்கள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கலைத்துறையினர்களே! உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! வங்கிக் கடனை பைசல் செய்வது பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி அமைதியாக காய் நகர்த்த வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 15,16,17,23,24,25,26,27,28 மற்றும் பிப்ரவரி 1,2,11,12.

சந்திராஷ்டம தினங்கள்:

பிப்ரவரி 5ம் தேதி இரவு 7.01மணி முதல் 6,7ம் தேதி வரை.

சிம்மம்

வானத்தில் பறந்தாலும் பூமியில் திரியும் கோழியை குறி வைக்கும் பருந்தைப் போல் எப்போதும் லட்சியத்தை விட்டு விலகாதவர்களே! சுதந்திர தாகம் உடைய நீங்கள், அதிகாரத்திற்கு அஞ்சமாட்டீர்கள். சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் நினைத்த காரியங்களெல்லாம் சுலபமாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளை பாக்யம் உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிநாதன் சூரியன் 5ல் அமர்ந்துக் கொண்டு அவ்வப்போது மனக்குழப்பங்களையும், முன்கோபத்தையும், பிள்ளைகளால் அலைச்சலையும், தந்துக் கொண்டிருந்தார்.

இப்போது 6ம் வீட்டில் நுழைந்திருப்பதால் அச்சம் நீங்கும். தடைகள் விலகும். அரைக்குறையாக நின்ற காரியங்களையெல்லாம் நல்ல விதத்தில் முடித்துக் காட்டுவீர்கள். வீண் விவாதங்களெல்லாம் குடும்பத்திலே நீங்கும். புதிதாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

ஆனால் ராசிக்கு 4ல் குரு நிற்பதால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். ஆங்காங்கே பகை உணர்வு உண்டாகும். சிலரின் நட்பை முன்கோபத்தால் இழக்க நேரிடும். தாயாருடனும் கருத்து மோதல்கள் வரும். 31ந் தேதி வரை செவ்வாய் 8ம் வீட்டிலேயே நிற்பதால் அலைச்சல், சின்ன சின்ன மன இறுக்கங்கள் வந்துச் செல்லும். சகோதரங்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம்.

எந்த காரியத்தை செய்தாலும் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள். அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். 01ந் தேதி முதல் 9ல் செவ்வாய் நுழைவதால் சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். ஒரு இடத்தை தந்துவிட்டு மற்றொரு சொத்து வாங்குவீர்கள். வீடு, மனையும் உங்கள் ரசனைப்படி அமையும். சனி பகவான் 5ல் நிற்பதால் நெருங்கிய சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

தாய்மாமன், அத்தை வகையில் ஆதரவுப் பெருகும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். 01ந் தேதி முதல் புதன் 7ல் நுழைவதால் உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்கள் கோரிக்கையை ஏற்கும்.

கன்னிப்பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். மாணவர்களே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும்.

இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், மூலிகை வகைகளால் ஆதாயம் உண்டு. குரு 4ல் இருப்பதால் உத்யோகத்தில் ஒரு நிலைத்தன்மையில்லாமல் எந்த நேரத்தில் என்னவாகுமோ என்ற ஒரு பயம் இருக்கும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

எதிர்பார்த்த சலுகைகள் சற்று தாமதமாகும். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். வங்கியில் இழுத்தடித்த கடன் தொகை இப்பொழுது கிடைக்கும். திடீர் யோகங்களையும், வெற்றிகளையும் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 17,18,26,27,28 மற்றும் பிப்ரவரி 4,5,6,12.

சந்திராஷ்டம தினங்கள்:

பிப்ரவரி 8,9,10ம் தேதி மாலை 4.22மணி வரை.

கன்னி

எதிர்மறை எண்ணங்களுடன் வருபவர்களை ஆற்றுப் படுத்தி நேர்வழியில் கொண்டு செல்பவர்களே! பனியா, வெயிலா என்று பார்க்காமல் என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இடைவிடாமல் உழைப்பவர்களே! சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் மனோ பலம் அதிகரிக்கும். செல்வாக்குக் கூடும். விவாதங்களெல்லாம் நீங்கும். வெள்ளி ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

பழுதான வாகனத்தையும் மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, விற்பது நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு முடியும். கேட்ட இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். குரு 3ல் முடங்கிக் கிடப்பதால் முன்கோபத்தால் பிரச்னைகள் வரும். சூரியன் 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து கவலைகள் வந்துப் போகும். 31ந் தேதி வரை செவ்வாய் பகவான் 7ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீடு, மனை வாங்குவீர்கள்.

ஆனால் 01ந் தேதி முதல் 8ல் மறைவதால் எந்த சொத்து, நிலம், வீடு, மனை வாங்குவதாக இருந்தாலும் தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

கணவன்மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்துப் போகும். சகோதர வகையில் அலைச்சல், பிணக்குகள் வரும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துச் செல்லும்.

தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். 01ந் தேதி முதல் ராசிநாதன் புதன் 6ல் மறைவதால் சோர்வு, களைப்பு வரும். கொஞ்சம் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். நீங்கள் கேட்டதை பெற்றோர் வாங்கித் தருவார்கள்.

மாணவர்களே! உங்களின் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவுகள் எடுப்பீர்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மூலம் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் சின்ன சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் உயரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! நீர் வரத்து அதிகரிக்கும். நெல், காய் கறி, பழ வகைகளால் லாபம் பெருகும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 19,20,21,22,28,29,30,31 மற்றும் பிப்ரவரி 6,7,8,9.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 15,16ம் தேதி பிற்பகல் 3.53 மணி வரை மற்றும் பிப்ரவரி 10ம் தேதி மாலை 4.23 மணி முதல் 11,12ம் தேதி வரை.

துலாம்

யார்க்கும் அஞ்சாமல் அடிமனசில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே செய்து சாதிப்பவர்களே! மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பவர்களே! மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் சென்றுக் கொண்டிருப்பதால் சிலர் புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். தள்ளுபடி விற்பனையில் புது வாகனம் வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கல் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாமே. வீடு கட்ட அனுமதி சற்று தாமதமாகும். மூத்த சகோதரங்களால் கொஞ்சம் பிரச்னைகள் வரக்கூடும்.

குருபகவான் 2ல் தொடர்வதால் தந்தைவழி சொத்து வந்து சேரும். தந்தைவழியில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். சனிபகவான் வலுவாக 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.

வெளிப்படையாக பேசி சிலரின் அரசு சம்பந்தப்பட்ட அதிகாரியின் நட்பு கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் பணம் வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள்.

அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். கன்னிப் பெண்களே! ஆடை, அணிகலன் சேரும். பெற்றோரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். அவ்வப்போது சோர்வடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். வேலையாட்களால் பிரச்னைகள் தலைத்தூக்கும்.

வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளப்பாருங்கள். ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத்துறையினர்களே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். தொலை நோக்குச் சிந்தனையால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

15,20,21,22,23,24,30,31 மற்றும் பிப்ரவரி 1,2,3,4,9,11.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 16ம் தேதி பிற்பகல் 3.54 மணி முதல் 17,18ம் தேதி இரவு 8.52 மணி வரை.

விருச்சிகம்

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்களே! பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! மனித நேயம் உள்ளவர்களே! நெருக்கடி நேரத்திலும் பதட்டப்படாதவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். தோற்றப் பொலிவுக் கூடும். சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும்.

உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். மனைவி வழியில் உதவியுண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். சூரியன் 3ம் வீட்டில் அமர்ந்ததால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கோவில் விழாக்கள், உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். ஆனால் உங்கள் ராசியிலேயே குருபகவான் தொடர்வதால் கோபத்தை கட்டுப்படுத்தப் பாருங்கள். மற்றவர்கள் ஏதேனும் தவறு செய்தாலும் உங்கள் தலையில் தான் அது வந்து விழும்.

உங்கள் மீதுதான் எல்லோரும் வீண் பழி சுமத்தப் பார்பார்கள். நீங்களும் எல்லாப் பிரச்னையையும் சேர்த்து சேர்த்து பார்த்துக் கொள்ளாதீர்கள். 31ந் தேதி வரை செவ்வாயும் 5ல் இருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். எடைமிகுந்த பொருட்களை தூக்காதீர்கள். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 01ந் தேதி முதல் செவ்வாய் 6ல் நுழைவதால் எதிர்ப்புகள் அடங்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும்.

வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள். புதன் சாதகமாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நட்பு வட்டம் விரியும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

மாணவர்களே! உயர்கல்வியில் கொஞ்சம் போராடி வெற்றி பெறுவீர்கள். பெற்றோர் நீங்கள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவார்கள். வியாபாரத்தில் அதிரடி திட்டங்கள் தீட்டுவீர்கள். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு கடையை புது இடத்திற்கு மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள்.

கம்ப்யூட்டர், செல்போன், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். உத்யோகத்தில் நிம்மதி கிடைக்கும். தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்கள் சிலருக்காக பரிந்துப் பேசுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! எண்ணங்கள் ஈடேறும். மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். விவசாயிகளே! மகசூல் அதிகரிப்பால் சந்தோஷம் நிலைக்கும். நீர்பாசனப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். வெற்றிப்படியில் ஏறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 15,16,17,25,26,27,28,29 மற்றும் பிப்ரவரி 4,6,7,8,12 பாபா.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 18ம் தேதி இரவு 8.53 மணி முதல் 19,20ம் தேதி வரை.

தனுசு

பூவைப் போல் புன் சிரிப்பும் மெல்லிய மனசும் கொண்ட நீங்கள் சில நேரங்களில் புயலாக சீறிப்பாய்ந்து புரட்சி செய்வீர்கள். ஒற்றுமையே உயர்வு தரும் என்பதை உணர்த்துவீர்கள். ராஜதந்திரிகளான நீங்கள் சமயோஜித புத்தியால் சாதிப்பவர்கள். இந்த மாதம் முழுக்க சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.

புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஆடை, ஆபரணம் சேரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள் அமர்ந்துக் கொண்டு உங்களை பாடாய் படுத்திய சூரிய பகவான் இப்போது ராசியை விட்டு விலகி 2ம் வீட்டில் நுழைந்திருப்பதால் முன்கோபம் நீங்கும்.

ஆனால் சில நேரங்களில் கார சாரமாக பேசுவீர்கள். பல் வலி, கண் எரிச்சல், பார்வைக் கோளாறு வரக்கூடும். 12ல் குரு தொடர்வதால் கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். புகழ் பெற்ற ஸ்தலங்களிலிருந்து பிரசாதங்களும் வந்து சேரும். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துக் கொண்டேயிருக்கும். ஏழரைச் சனி நடைபெறுவதால் எந்த பிரச்னையையும் பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம்.

அதிலும் ஜென்மச் சனி இருப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். எந்த வேலையும் தடைப்பட்டு பின்னர் முடிவடையும். யாருக்கும் ஜாமீன், கேரன்டர் கையெழுத்திட வேண்டாம். ராசிக்கு சாதகமான வீடுகளில் புதன் சென்றுக் கொண்டிருப்பதால் நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது வேலை கிடைக்கும். செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் கணவன்மனைவிக்குள் இருக்கும் கசப்புணர்வுகள் நீங்கும்.

அன்யோன்யம் அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். மாணவர்களே! மதிப்பெண் உயரும். ஆசிரியரின் அன்பை பெறுவீர்கள்.

முற்பகுதி வியாபாரம் சுமாராக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

செங்கல், உணவு, இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். கலைத்துறையினர்களே! அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! மகசூலை அதிகப்படுத்த நவீன ரக உரங்களை கையாளுவீர்கள். ஏமாற்றங்கள், எதிர்ப்புகளை கடக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 17,18,19,20,26,27,28,29 மற்றும் பிப்ரவரி 4,5,6,7,9,11.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 21,22ம் தேதி வரை.

மகரம்

நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே! தராதரம் அறிந்து பழகும் சிறந்த நிர்வாகிகளே! அதிகாரப் பதவி வந்தாலும் ஆணவப்படாமல் அடக்கமாக சாதிப்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் கைக்கூடும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணியை தொடருவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுங்கள்.

அதிக நேரம் வேலைப் பார்க்க வேண்டி வரும். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வரக்கூடும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையெல்லாம் உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள்.

குரு லாப வீட்டிலேயே நீடிப்பதால் வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். உங்களின் பாக்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் செலவுக்குத் தகுந்தாற் போல் பணவரவு உண்டு. செல்வாக்கு கூடும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் எடுத்து நடத்துவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பெரிய மனிதர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

செவ்வாய் வலுவாக இருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளெல்லாம் வெளிப்படும். சொத்து, பாகப் பிரிவினைப் பிரச்னைகள் தீரும். பூர்வீக சொத்து பங்கையும் கேட்டு வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களே! ஞாபகசக்தி அதிகரிக்கும். அன்றாட பாடங்களை உடனுக்குடன் முடித்து வகுப்பறையில் ஆசிரியரிடம் நற்பெயர் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார். பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களால் லாபம் பெருகும். ஏழரைச் சனி தொடர்வதால் உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.

புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களையும் கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! வீட்டில் நல்லது நடக்கும். காய் கறி, பயிறு வகைகளால் ஆதாயம் அடைவார்கள். மதிப்பு, மரியாதை கூடும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 19,20,21,22,28,29,30,31 மற்றும் பிப்ரவரி 6,7,8,9,10,11,12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 23,24ம் தேதி வரை.

கும்பம்

கடமை உணர்வு கொண்ட நீங்கள் காதல் வசப்படுபவர்கள். பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். கடந்த கால அனுபவங்களை மறக்காமல் வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வதில் வல்லவர்கள் நீங்கள்தான். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் அடிப்படை வசதிகள் பெருகும். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள்.

பணபலம் உயரும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குழந்தை பாக்யம் உண்டாகும். 10ல் குரு நிற்பதால் எதிலும் ஒரு பயம் இருக்கும். அசிங்கப்பட்டு விடுவோமோ, அவமானங்களை சந்திக்க நேரிடுமோ, யாரேனும் தன்னைப் பற்றி தவறாக சொல்லி விடுவார்களோ என்றெல்லாம் அடிக்கடி யோசித்துக் கொண்டேயிருப்பீர்கள்.

அடிக்கடி மனஉளைச்சலுக்குள்ளாவீர்கள். லாப வீட்டில் சனி வலுவாக இருப்பதால் பணம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். 31ந் தேதி வரை செவ்வாய் 2ம் வீட்டிலேயே நிற்பதால் சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். 01ந் தேதி முதல் 3ல் அமர்வதால் சொத்துப் பிரச்னைகள் தீரும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

பிள்ளைகளை கூடாப்பழக்களிலிருந்து மீட்பீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் 12ல் மறைந்திருப்பதால் தூக்கமில்லாமல் போகும். வேலைச்சுமை அதிகரிக்கும். வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். தகுதிக் கேற்ப நல்ல வேலை அமையும்.

மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படியுங்கள். விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது. பெற்றோரின் அரவணைப்பு உண்டு. வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். சுமுகமான லாபம் உண்டு. பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களின் கோரிக்கையை ஏற்பார்கள். கெமிக்கல், எண்ணெய் வித்துக்கள், இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும்.

என்றாலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாக கிடைக்கும். உங்களை எப்பொழுதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் இனி வலிய வந்து நட்புறவாடுவார்கள். கலைத்துறையினர்களே! உங்கள் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! மாற்றுப் பயிரிட்டு வருமானத்தை பெருக்குவீர்கள். சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 15,21,22,23,24,30,31 மற்றும் பிப்ரவரி 1,2,8,9,10,11.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 25,26,27ம் தேதி காலை 8.25மணி வரை.

மீனம்

மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே! பாகுபாடு பார்க்காமல் பலரிடமும் பாசமழை பொழிபவர்களே! தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாதவர்களே! மூடநம்பிக்கைகளில் மூழ்காமல் அறிவுப் பூர்வமாக சிந்திப்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். டி.வி, ஃப்ரிஜ் மாற்றுவீர்கள். பழைய இடத்தை நல்ல விலைக்கு விற்று புது நிலம், வீடு வாங்குவீர்கள்

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். குரு 9ல் தொடர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். திடீர் திருப்பங்களும் வாழ்க்கையில் உண்டாகும். பிரபலங்கள் தக்க சமயத்தில் உதவிகரமாக இருப்பார்கள்.

சின்ன சின்ன சேமிப்புகள் இருக்கும். சனிபகவான் 10ல் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

புது வேலைக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ், கௌரவம் உயரும். 31ந் தேதி வரை உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் இருப்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். எரிச்சலாக பேசுவீர்கள். 01ந் தேதி முதல் ராசியை விட்டு விலகி 2ல் அமர்வதால் நிதானம் வரும். பிரச்னைகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பும் கிடைக்கும். இந்த மாதம் முழுக்க சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் வழக்குகள் சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வேலைக் கிடைக்கும். கிரகப் பிரவேசம், காது குத்து என அடிக்கடி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதனால் வீடு களைக்கட்டும். அரசியல்வாதிகளே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.

பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். மாணவர்களே! கவிதை, இலக்கிய போட்டிகளில் கலந்துக் கொள்வீர்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். வியாபாரத்தில் சில அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். போட்டிகளை சமாளிக்கக் கடையை விரிவுப்படுத்தி அழகுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். ஏஜென்சி, கலை சாதனப் பொருட்கள், துணி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி புகழ்வார். என்றாலும் பணிகளை முடிப்பதில் தொய்வு வேண்டாம். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் அறிவுரை கிடைக்கும். அரசுப் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். விவசாயிகளே! பூச்சிக் கடி, வண்டுக் கடியிலிருந்து பயிரைக் காக்க நவீனரக மருந்துகளை பயன்படுத்துவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நினைத்ததை முடித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 15,17,23,24,25,26 மற்றும் பிப்ரவரி 1,2,3,4,6,11,12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 27ம் தேதி காலை 8.26மணி முதல் 28,29ம் தேதி பிற்பகல் 1.48 மணி வரை.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்