2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : மகர ராசிக்காரர்களே! எதிலும் தேவை கவனம்

Report Print Kavitha in ஜோதிடம்

விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.

அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து மகர ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

(உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை)

மகர ராசி நேயர்களே,

விகாரி வருடம் பிறக்கும் பொழுதே உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் இருக்கின்றார். அவரோடு குருவும், கேதுவும் இணைந்திருக்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும் வருடமாக இந்த வருடத்தைக் கருதலாம்.

புத்திரகாரகன் குரு விரய ஸ்தானத்தில் தனது சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி செலவிடும் சூழ்நிலை அதிகரிக்கும்.

6-ல் ராகு இருப்பதும், அதைக் குரு பார்ப்பதும் சிறப்பானதாகும். எனவே அஷ்டலட்சுமி யோகம் உங்களுக்கு செயல்படப் போகின்றது. எதிர்பார்த்த தொகை உங்களுக்கு எதிர்பார்த்த படியே வந்து சேரும்.

வருடத்தொடக்க நாளில் சப்தம ஸ்தானாதிபதி சந்திரன் சப்தம ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கின்றார். எனவே கல்யாணக்கனவுகள் நனவாகும் ஆண்டாகவே இந்த ஆண்டு அமையப்போகின்றது.

திருமணம் பேசுகின்றவர்களுக்கு சர்ப்பதோஷம் இருக்கின்றதா? செவ்வாய் தோஷம் இருக்கின்றதா? 7-ல் சனி இருக்கிறாரா? அல்லது சனி செவ்வாய் பார்வை அல்லது சேர்க்கை இருக்கின்றதா என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து பொருத்தம் பார்ப்பதே உத்தமம்.

தனுசு குருவின் சஞ்சாரம்

(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)

இக்காலத்தில் குருவினுடைய பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. சுக ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் சுகக்கேடுகள் அகலும்.

தன்னம்பிக்கை கூடும். தாய்வழி ஆதரவோடு தனித்து இயங்க முற்படுவீர்கள். வாகனங்களை வாங்கும் யோகம் உண்டு. எதிரிகள் விலகிச்செல்வர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் உன்னதமான இடம் அமையும். உதிரிவருமானம் பெருகும். உழைப்பிற்கேற்ற பலனும் கிடைக்கும்.

பணிநிரந்தரம் பற்றிய தகவல் ஒருசிலருக்கு வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும். கூடுதல் சம்பளத்திற்கு வெளிமாநிலங்களுக்குச் செல்லலாமா என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரப்போகின்றது.

4-ம் இடம் என்பது தாய் ஸ்தானம் என்று கருதப்படுவதால் தாய்வழி ஆதரவு கூடுதலாக இருக்கும். உறவினர் களின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும்.

திறமை பளிச்சிடும் இந்த நேரத்தில் கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி தனித்தியங்க முற்படுவீர்கள். வீடுகட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்று சிந்தித்தவர்களுக்கு பூமியோகம் இப் பொழுது செயல்படப்போகின்றது.

6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் பணமழையில் நனைய வழிவகுத்துக் கொடுப்பர்.

சிக்கல்கள் தீரும். சிரமங்கள் மாறும். தக்க விதத்தில் பொருளாதார நிலை உயரும். பரம்பரைச் சொத்துக்களில் இருந்த சண்டை சச்சரவுகள் அகன்று சாமாதானக் கொடிபறக்கப் போகின்றது. வாங்கிய கடனைக் கொடுத்துமகிழ்வீர்கள். மனக்கசப்புகள் மாறும்.

என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து விற்பனையாகி மிதமிஞ்சிய பொருளாதாரத்தை உருவாக்கப் போகின்றது. முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். உடல்ஆரோக்கிய குறைபாட்டின் காரணமாக ரண சிகிச்சை செய்துதான் குணமாக்க வேண்டும் என்று சொன்ன மருத்துவர்கள் இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கிவிடுவர்.

போராட்டநிலை மாறும். மனப் போராட்டங்கள் அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகம் பார்த்த இடத்தில் இடமாற்றங்கள் பரிசீலனையில் இருக்கலாம்.

இப்போது அது உறுதியாகி எதிர்பார்த்தபடியே இட மாற்றமும் கிடைக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டு.

உழைப்பு மட்டும் அதிகரிக்கும் நேரமிது. உணவு உண்ணும் நேரம் கூட ஒதுக்க முடியாத அளவிற்கு உத்தியோகத்தில் வேலைப்பளு கூடலாம். எனவே ஆரோக்கியத்தில் சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டு அகலும். பொதுவாக கை, கால்களில் வலி ஏற்படலாம். உங்களுடைய ஆற்றலை வெளிக்கொணர வைக்கும் நேரத்தில், மூட்டுவலி, முழங்கால்வலி போன்றவைகள் ஏற்பட்டு, அவதிப்பட வைக்கலாம். எனவே இக்காலத்தில் குரு பிரீதி செய்வது நல்லது.

விருச்சிக குருவின் சஞ்சாரம்

(18.5.2019 முதல் 28.10.2019 வரை)

இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார்.

இதன் பலனாக உங்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே வெற்றிகள் ஸ்தானம், புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகிய மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. எனவே உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர்.

உங்கள் தொழில் முயற்சிக்கு அவர்களது மேற்பார்வை கைகொடுக்கும். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தங்கள் எல்லாம் இப்பொழுது சமரசத்திற்கு முன்வருவர். பஞ்சாயத்துக்களும், பாகப்பிரிவினைகளும் இனி சாதகமாக முடியும். தொழிலில் சகோதர கூட்டுக்கள் உருவாகலாம்.

5-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் புத்திரப்பேறுக்காக காத்திருப்பவர் களுக்கு அது கைகூடலாம். மேலும் புத்திரப்பேறு வாய்க்காதவர்கள் இப்பொழுது பஞ்சமாதிபதி இருக்கும் பாதசார பலமறிந்து அதற்குரிய ஸ்தல வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால், புத்திரப்பேறு வாய்க்கும்.

கல்யாண வயதடைந்த பிள்ளை களுக்கு திருமணப் பேச்சுக்கள் முடிவாகி ஊரார் வியக்கும் விதத்தில் உன்னதமாக திருமணங்களை நடத்திக் காட்டுவீர்கள். மேற்படிப்பிற்காக பிள்ளைகள் வெளிநாடு செல்ல நினைத்தால் அதற்காக செய்த முயற்சிகள் கைகூடும்.

சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இல்லறம் இனிதாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறை களைப் போக்க முன்வருவீர்கள். வெளிநாட்டு யோகம் விரும்பியபடியே அமையும். மனையில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உருவாகும் நேரமிது.

அயல்நாட்டு பயணங்களும் கை கூடலாம். உத்தியோகத்தில் உள்ள சக பணியாளர்களும் வெளிநாடு சென்று வந்து கொண்டிருக்கிறார்களே, நம்மை நம்முடைய தொழில் நிலையம் வெளிநாடு அனுப்ப முன்வரவில்லையே என்று நினைக்கலாம்.

ஏழரைச்சனி நடக்கின்ற பொழுது நீங்கள் வெளிநாடு சென்றாலும் நிம்மதி கிடைக்காது. பெரும் தொகையொன்றை பணம்கட்டிவிட்டு சென்று பின்பு வேலை கிடைக்காமல் திரும்பும் சூழ்நிலை சிலருக்கு உண்டு. எனவே பயணம் செய்பவர்கள் தங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டுச்செல்வது நல்லது.

சனியின் சஞ்சார நிலை

ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் தான் இருக்கின்றார். விரயச்சனியாக உலா வருகின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். சனியின் பார்வை 2, 4. 9 ஆகிய இடங்களில் பதிகின்றது.

உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான் உங்களுக்குரிய பலன் களையே வழங்குவர். இக்காலத்தில் செலவுகள் கூடுதலாக இருக்கும்.

சிறுசிறு பிரச்சினைகளை வளரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் என்னதான் பாடுபட்டுக் காரியங்களை முடித்துக்கொடுத்தாலும் அவர்கள் நன்றிகாட்ட மாட்டார்கள். சனியின் வக்ர காலத்தில் கவனம் தேவை.

ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் ராகுவும், 12-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். சாயா கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் அந்தக் கிரகங்கள் இருக்கும் இடத்தையும், அந்த இடத்திற்கு அதிபதியையும் பொறுத்தே பலன்கள் கொடுக்கும். குறிப்பாக கேதுவோடு கூடியிருக்கும் குரு, ராகுவைப் பார்க்கின்றார்.

எனவே தோஷங்கள் அனைத்தும் அகன்று யோகங்கள் உங்களுக்கு வரப்போகின்றது. தேக நலனில் தெளிவு பிறக்கும். செல்வ நிலை ஒருபடி உயரும். வேகமாக சில காரியங்கள் முடிவடையலாம். வேற்று மனிதர் களின் ஒத்துழைப்போடு நீங்கள் செய்யும் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சனி-செவ்வாய் பார்வைக்காலம்

(14.4.2019 முதல் 23.6.2019 வரை)

இக்காலம் நீங்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலமாகும். கட்டிய மனையால் தொல்லை, கடமையில் தொய்வு ஏற்படும்.

ஒட்டி உறவாடிய நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர். ஊர் மாற்றங்களில் ஆர்வம், சகோதர சச்சரவுகள் போன்றவற்றைச் சந்திக்கும் நேரமிது. தாய் வழி ஆதரவு குறையும். இடம், பூமியால் சில சிக்கல்கள் உருவாகலாம். பத்திரப்பதிவில் பிரச்சினை, பிறரை விமர்சிப்பதிலும் தொல்லைகள் ஏற்படலாம்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த ஆண்டு குடும்பச்சுமை கூடுதலாகத் தான் இருக்கும்.

கொடுக்கல் வாங்கல்களில் நிதானம் தேவை. விரய ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இருப்பதால் எதைச்செய்தாலும் யோசித்துச் செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களை கலந்த ஆலோசித்துச் செய்தால் பிரச்சினைகள் ஏற்படாது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும், என்றாலும் கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதுதான் நல்லது. புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் விதம் நடந்து கொள்வது நல்லது. தாய்வழி ஆதரவு திருப்தியாக இருக்கும். சகோதர வர்க்கத்தினரில் ஒருசிலர் மட்டுமே உங்களுக்கு உதவியாக இருப்பர். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதித் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.

வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பக்கத்து வீட்டாரின் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் எளிதில் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்குரிய சலுகைகளை வழங்குவர்.

வாகன மாற்றம் செய்வது நல்லது. குலதெய் வழிபாடும், குரு, சனி, ராகு, கேதுக்களின் வழிபாடும் கூடுதல் நன்மையை வழங்கும்.

வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு

வெள்ளிக்கிழமை தோறும் விநாயகர் கவசம் பாடி சர்ப்ப விநாயகரை வழிபடுவது நல்லது. சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் தீரும். சந்தோஷங்கள் சேரும்.

- Daily Thanthi

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers