2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : கும்ப ராசிக்காரர்களே! யோக வாய்ப்புகள் உருவாகுமாம்

Report Print Kavitha in ஜோதிடம்

விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.

அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து கும்ப ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை)

கும்ப ராசி நேயர்களே,

விகாரி வருடத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்பொழுது உங்கள் ராசிநாதன் சனி லாப ஸ்தானத்தில் குருவோடு கூடியிருக்கின்றார். அவரோடு ஞானகாரகன் கேதுவும் இணைந்து சஞ்சரிக்கின்றார்.

தன லாபாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் பலம்பெற்று இருந்து இந்த ஆண்டு தொடங்குவதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் ஆண்டாகவே கருதலாம்.

உங்கள் ராசிநாதன் சனி பகவான் லாப ஸ்தானத்திலேயே இருக்கின்றார். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.

சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை மட்டும் உண்டு. குறிப்பாக சனி பார்வை இருக்கும் வரை சிறுசிறு தொல்லைகள் வந்து கொண்டேதான் இருக்கும்.

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சந்திரன் பலம் பெற்றிருக்கின்றார். எனவே உத்தியோகம் சம்பந்தமாக ஏதேனும் புது முயற்சி எடுத்தால் அதில் வெற்றி கிடைக்கும்.

வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களுக்கு எண்ணியபடியே காரியம் கைகூடும்.

அஷ்டமாதிபதி சூரியன் உச்சம் பெற்றுச் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத்துணை வழியே வளர்ச்சி கூடும். அவர்களின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றிதரும். பிள்ளைகளாலும் உதிரி வருமானங்கள் வந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும். சகோதரகாரகன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் அதன் பார்வை 10-ம் இடத்தில் செவ்வாய் வீட்டிலேயே பதிவதாலும் உடன்பிறப்பு கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

பட்டமேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் குழந்தை களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கடைசி நேரத்தில் கைகூடலாம். 11-ல் கேது இருப்பதால் ஆன்மிகப் பயணங்களும், சுற்றுலாக்களும் அதிகரிக்கும். இறைவழிபாட்டில் நம்பிக்கை கூடும்.

தனுசு குருவின் சஞ்சாரம்

(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)

இக்காலத்தில் குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. வெற்றிகள் ஸ்தானம், புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகிய இடங்கள் புனிதமடைந்து நல்ல பலன்களை வழங்கப் போகின்றது. 3-ம் இடத்தைக் குரு பார்க்கும் பொழுது முன்னேற்றங்கள் அதிகரிக்கும் என்பர். சகோதர ஸ்தானம் பலப்படுகின்றது.

எனவே உங்களை விட்டு விலகிய சகோதரர்கள் உங்களோடு வந்திணையலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிய வழிபிறக்கும். அரசுவழி உத்தியோகத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கை கூடும். பங்காளிப்பகை மாறும். காது, மூக்கு, தொண்டை போன்றவற்றில் இருந்த பிரச்சினை அகலும்.

குருவின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் நல்ல முன்னேற்றங்கள் உங்களுக்கு வந்து சேரும். அடிப்படை வசதிகள் பெருகும். தாய் மாமன் வழியில் இருந்த விரிசல்கள் அகலும்.

மைத்துனர் வழி ஒத்துழைப்புகள், மக்கள் செல்வங்களால் மேன்மை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணம் ஈட்டும் வழியை கண்டு கொள்வீர்கள்.

குழந்தைப் பேறு இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இக்காலத்தில் பார்க்கும் மருத்துவமும், செய்யும் பரிகாரமும் கைகொடுக்கும்.

குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் இல்லறம் இனிதாக அமையும். எதிர்பார்த்த வரன்கள் வீடுதேடி வரலாம். பொதுவாக உங்கள் ராசிக்கு கணப்பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், ராசி அதிபதிப் பொருத்தம், ரஜ்ஜூ பொருத்தம் ஆகியவை பொருந்தியிருப்பது நல்லது. விவாகத்தால் ஏற்பட்ட விவகாரங்கள் அகலும்.

வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும் ஒருசிலருக்கு வந்து சேரும். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாதவர்களுக்கு இப் பொழுது அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் திரும்பி வரும் வாய்ப்பு உண்டு.

அதே போல தாய்நாட்டிலிருந்து வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு கம்பெனியின் அழைப்பு வராமல் காத்திருக்கும் சூழ்நிலையில் இருந்தவர்களுக்கு இப்பொழுது அழைப்புகள் வந்து சேரும்.

ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கு இக்காலம் ஒரு இனிய காலமாகும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு மகத்தான பலன் காண்பர்.

உங்கள் ஆற்றலும், அவர்களின் மூலதனமும் இணைந்து பலன்கொடுக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு இக்காலம் ஒரு இனிய காலமாகும்.

விருச்சிக குருவின் சஞ்சாரம்

(18.5.2019 முதல் 28.10.2019 வரை)

இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார். அதன் பலனாக வாழ்வில் நல்லமாற்றங்கள் வந்துசேரும்.

குறிப்பாக அதன் பார்வை எங்கெங்கெல்லாம் பதிகின்றதோ அந்தந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன.

அந்த அடிப்படையில் குருவின் பார்வை 2, 4. 6 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே குடும்ப ஸ்தானம், தாய் ஸ்தானம், எதிர்ப்பு, வழக்கு, வியாதிகளைக் குறிக்கும் இடம் போன்றவற்றை குரு பார்க்கப் போகின்றார்.

பார்க்கும் குருவைப் பலப்படுத்த ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் விரதமிருந்து குருவிற்குரிய கவசம் பாடி வழிபடுவதோடு குரு பீடங்களுக்கும் சென்று வழிபட்டு வரலாம். திருச்செந்தூர், திட்டை, ஆலங்குடி, குருவித்துறை, பட்டமங்கலம், திருவாலிதாயம் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பற்றாக்குறை பட்ஜெட் மாறும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும்.

வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்குசெய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். பிறருக்கு பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை தானாக வந்து சேரும்.

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவது யோகம் தான். சுக ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே சுகக் கேடுகள் அகலும். ரணசிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலையில் உள்ளவர் களுக்கு இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே அது குணமாகும்.

தாய்வழி ஆதரவு உண்டு. தாயின் உடல் நலம் சீராகும். என்றைக்கோ வாங்கிப்போட்ட சொத்து இன்றைக்கு நல்ல விலைக்குப் போகும்.

கட்டிடப் பணியில் இருப்பவர்கள்,கட்டிட உபயோகப்பொருட்கள் விற்பனை செய்பவர் களுக்கு எதிர்பார்த்த நற்பலன்களும் லாபமும் கிடைக்கும்.

குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிரிகள் விலகுவர்.

புதிய உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். பணியிடமாற்றங்களை விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த இடம் கிடைத்து மகிழ்ச்சி காண்பர்.

சனியின் சஞ்சார நிலை

ஆண்டு முழுவதும் சனி பகவான் 11-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியைப் பார்க்கின்றார்.

மேலும் 5, 8 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். சனி பகவான் உங்கள் ராசிநாதன் மட்டுமல்ல, விரயாதிபதியாகவும் விளங்குபவர்.

எனவே இக்காலத்தில் விரயங்களும் கொஞ்சம் ஏற்படத்தான் செய்யும்.

வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் ஒருசிலருக்கு உறுதியாகலாம். பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். உடல்நிலையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டு அகலும். சனியின் வக்ர காலத்தில் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது.

ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ராகுவும், 11-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். பூர்வீக சொத்துக்களில் சில பிரச்சினைகள் தலைதூக்கலாம்.

பூமி விற்பனையில் பத்திரப் பதிவில் தாமதங்கள் ஏற்படலாம். வெளிநாட்டு முயற்சியில் தாமதங்கள் ஏற்படும். கேது, சனி இரண்டும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட வகையில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும்.

சனி-செவ்வாய் பார்வைக்காலம்

(14.4.2019 முதல் 23.6.2019 வரை)

உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்கு பவர் சனி பகவான். சகாய ஸ்தானாதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் செவ்வாய்.

இரண்டும் ஒன்றை ஒன்று பார்ப்பதால் சகோதரத்துடன் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. அலைச்சல் கூடுதலாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட காரியங்களைச் செய்ய இயலுமா என்பது சந்தேகம் தான். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் சில பிரச்சினைகள் உருவாகலாம்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த ஆண்டு புதிய திருப்பங்கள் பலவும் ஏற்படும் ஆண்டாக அமையும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும், வசதிகள் பெருகும்.

சென்ற வருடத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். புகுந்த வீட்டில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்க சம்மதிப்பர்.

தாய்வழி ஆதரவு திருப்தி தரும். சகோதர வர்க்கத்தினர்கள் அப்போதைக்கப்போது சச்சரவு ஏற்படுத்தினாலும் சமாதானம் அடைவர். பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்து உதிரி வருமானம் வந்து சேரும்.

அதே நேரத்தில் ராகு-கேதுக்களின் ஆதரவு பலமாக இருப்பதால் குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பணிபுரியும் பெண்களுக்கு பலநாட்களாக கிடைக்காத சலுகை இப்பொழுது கிடைக்கும்.

பிற மாநிலங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். குலதெய்வ வழிபாடும், அனுமன் வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு

சனிக்கிழமை தோறும் விரதமிருந்து விநாயகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவது நல்லது. ஏகாதசி நன்னாளில் திருமகள் கவசம் பாடி வழிபடுவதன் மூலம் விஷ்ணு, லட்சுமி அருளுக்கு பாத்திரமாகலாம்.

- Daily Thanthi

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்