2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : மீன ராசிக்காரர்களே! புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டுமாம்

Report Print Kavitha in ஜோதிடம்

விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.

அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து மீன ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

(பூரட்டாதி 4 ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை)

மீன ராசி நேயர்களே,

விகாரி வருடம் பிறக்கும் பொழுதே உங்கள் ராசிநாதன் குரு பகவான் 10- ம் இடத்தில் கேதுவோடும், சனியோடும் இணைந்து சஞ்சரிக்கின்றார்.

10-ல் குரு இருந்தால் பதவி மாற்றம் என்பார்கள் அதிலும் அதிசார குருவாக வரும்பொழுது கொஞ்சம் வேகம் கூடுதலாகவே இருக்கும். எனவே உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில்புரிவோருக்கு தொல்லைகள் அதிகரிக்கும்.

10-ல் சனி இருப்பதால் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் மனதில் உண்டாகும். ஆனால் ஆரம்பித்த தொழிலை திருப்தியாக நடத்த இயலாது. 10-ல் சனி சஞ்சரிப்பதால் கர்ம ஸ்தானம் பலப்படுகின்றது.

எனவே குடும்ப உறுப்பினர்களில் மூத்தவர்கள் அல்லது பெற்றோர் களுக்கு வைத்தியச்செலவும், விரயங்களும் அதிகரிக்கும்.

சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கின்றது. எனவே குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களால் அடிக்கடி தொல்லை ஏற்படும்.

உங்கள் ராசியிலேயே புதன் நீச்சம் பெற்று வருடம் தொடங்குவது யோகம்தான். எனவே மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.

விரய ஸ்தானத்தில் சுக்ரன் இருப்பதால் ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டிற்கு பக்கத்தில் உள்ள இடத்தை வாங்கி, கட்டிய வீட்டை விரிவு செய்யலாமா என்று நினைப்பீர்கள். அதற்குப் பொருத்தமான நேரமிது. வீண் விரயங்களில் இருந்த விடுபட சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.

தனுசு குருவின் சஞ்சாரம்

(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)

இக்காலத்தில் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே வாக்கு, தனம், குடும்பம், தாய்வழி ஆதரவு, இடம், பூமி வாங்கும் யோகம், வாகன வசதி, எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களை எல்லாம் குருவின் பார்வை பதிகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றது.

உங்களுக்கு அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் குரு பார்த்தால் அதில் இருந்து விடுபடும் சூழ்நிலை உண்டு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அந்த அடிப்படையில் 2-ம் இடத்தை குரு பார்ப்பதால் வறண்ட நிலை மாறி வளர்ச்சி ஏற்படும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பேச்சுத்திறன் மிக்க உறவினர் அல்லது நண்பர்கள் பின்னணியாக இருந்து புதிய பாதை புலப்பட வழிவகுத்துக்கொடுப்பர். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மங்கல நிகழ்வுகள் மனையில் ஒவ்வொன்றாக நடை பெறும்.

4-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் தாய்வழி உறவில் இருந்த விரிசல் அகலும். இதுவரை விலகியே இருந்த பெற்றோர்கள் உங்கள் மீது பாசம் காட்டுவர். நீங்களும் பழைய தகவல்களை மறந்து விட்டுப் புதிதாக உறவைப் புதுப்பித்துக்கொள்வீர்கள். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது நல்ல விலைக்கு விற்கும்.

அதன்மூலம் வரும் வருமானத்தை மூலதனமாகக் கொண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். வாகனங்கள் வாங்கி மகிழ வேண்டுமே என்று ஆசைப்பட்டவர்கள் இப்பொழுது அவரவர் தகுதிக்கேற்ப வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு இப்பொழுது பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

உறவினர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலகியிருக்கின்றார்களே என்ற கவலை இனி அகலும். பகை மறந்து பாசம் காட்ட முன்வருவதோடு உங்கள் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்துக்கொடுப்பர்.

கல்வியில் இருந்த தடை அகலும். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ள குழந்தைகள் இப்பொழுது வெளிநாடு சென்று படிக்கத் தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.

கட்டுமானப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் வீடு மற்றும் தொழிற்சாலை கட்டுவதில் தடைகள் ஏற்பட்டிருக்கலாம். அந்தத் தடைகள் இப்பொழுது விலகும். பாதியில் நின்ற பணி இப்பொழுது மீதியும் தொடரும். குருவின் பார்வை 6-ம் இடத்தில் ஜீவன ஸ்தானம் பலம்பெறுகின்றது. பணிநிரந்தரமாகவில்லையே என்ற கவலை இனி மாறும்.

பொதுவாக குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்பதால் குருவின் பார்வை பலனால் மேற்கண்ட காரியங்கள் அனைத்தும் துரிதமாக நடைபெறும்.

விருச்சிக குருவின் சஞ்சாரம்

(18.5.2019 முதல் 28.10.2019 வரை)

இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வரப் போகின்றார். அப்போது குருவின் பார்வை உங்கள் ராசியில் முழுமை யாகப் பதிகின்றது.

எனவே அற்புதமான நேரமிது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்கள் தேடிவந்து திருமணம் முடிய வழிவகுத்துக் கொடுக்கும். இடைக்காலத்தில் தடையாக இருந்தவர்கள் இனி விலகுவர். எதிர்காலம் இனிமையாக அமைய வழிபிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

3-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் முன்னேற்றப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். இதுவரை பாசம் காட்டாத சகோதரர்கள் இப்பொழுது பாசம் காட்டுவர்.

நேசமனப்பான்மையோடு பழகும் நண்பர்களும் உங்கள் நிகழ் காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். பூஜை புனஸ்காரங்களிலும் கவனம் செலுத்துவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உதிரி வருமானங்கள் வந்து சேரும்.

பலநாட்களாக வைத்த பஞ்சாயத்துக்கள் இதுவரை இழுபறி நிலையில் இருந்திருக்கலாம். இப்போது சாதகமாக முடியும். தனித்து இயங்கலாம் என்று முடிவு செய்வீர்கள். கூட்டாளிகளை விலக்கிவிட்டுத் தொழிலை முழுமையாக ஒப்புக்கொண்டு நடத்த முன்வரும் நேரமிது. மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டை அகலும்.

குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் வாரிசுகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றிவாய்ப்பு வந்து கொண்டேயிருக்கும். நெருக்கடி நிலை மாறும்.

பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சஞ்சலங்கள் அகன்று சந்தோஷங்கள் கூடும் நேரமிது. கல்வியில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற குழந்தைகளை மற்றவர்களும், சான்றோர்களும் பாராட்டுவதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கப் போகிறீர்கள்.

சனியின் சஞ்சார நிலை

வருடம் முழுவதும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில்தான் சஞ்சரிக்கப் போகின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். சனியின் பார்வை 4,7,12 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது.

எனவே ஒருசில சமயங்களில் ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தை சீராக்கிக் கொள்ளலாம். களத்திர ஸ்தானத்தில் சனி இருப்பவர்களுக்கு திருமணப் பேச்சுக்கள் வந்து வந்து விட்டுப்போகலாம்.

இருப்பினும் விட்டுப்போன வரன் மீண்டும் வந்து வியப்பில் ஆழ்த்தலாம். நீண்டதூரப் பயணங்கள் ஒருசிலருக்கு வாய்க்கும். அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிர்ப்பந்தமும் உருவாகும். வெளிநாட்டு முயற்சியும் கைகூடும். சனியின் வக்ர இயக்கத்தில் விரயத்திற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும் நன்மை தரும்.

ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். கேது குரு வீட்டில் இருப்பதாலும், ராகுவைக் குரு பார்ப்பதாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் தொழிலில் கூட்டாளிகளே உங்களுக்குத் தொல்லை கொடுக்கலாம்.

உங்களுக்கு வரவேண்டிய லாபம் ஏட்டில் இருக்குமே தவிர எதிரில் இருக்காது. வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தளரவிடாமல் இருக்க வேண்டிய நேரமிது.

சனி-செவ்வாய் பார்வைக்காலம்

(14.4.2019 முதல் 23.6.2019 வரை)

இக்காலத்தில் எதிலும் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவை இரண்டும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்ளும் பொழுது அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு திடீர் எனப் பொறுப்புகள் மாற்றப்படலாம்.

எதைச் செய்தாலும் அருகில் இருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செய்வது நல்லது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தாய்நாடு திரும்ப முடியாத சூழ்நிலை கூட உருவாகும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த ஆண்டு வரவும், செலவும் சமமான ஆண்டாகவே கருதலாம். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச்செலவுகள் கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது.

குறிப்பாக குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் சொல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் வரலாம், கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே ஒற்றுமை பலப்படும். எந்தஒரு முடிவையும் தாங்களாக எடுக்காமல் குடும்பப்பெரியவர்களை ஆலோசித்துச் செய்வது தான் நல்லது. பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அவர்களின் எதிர்கால முன்னேற்றமும் எதிர்பார்த்தபடி அமையும்.

தாய்வழி ஆதரவும் உண்டு. சகோதர பகை மாறும். பணிபுரியும் பெண்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்றவற்றிற்காக நீங்கள் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும்.

அக்டோபருக்கு மேல் அயல்நாட்டு யோகம் கூட கைகூடலாம். குலதெய்வ வழிபாடும், குரு வழி பாடும் குடும்ப முன்னேற்றத்தை அதிகரிக்கச் செய்யும்.

வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு

செல்வ வளம்பெருக சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வியாழன் தோறும் குரு வழிபாடும் நாக கவசம் பாடி ராகு-கேதுக்களுக் குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

- Daily Thanthi

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்