தை மாத ராசிப்பலன்கள் 2020 : எந்த ராசிக்காரர்களுக்கு செல்வந்தராகும் யோகம் இருக்கும் தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்

தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது பொன்மொழி பன்னெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைந்து சுமார் 29 நாட்கள், 27 நிமிடம், 16 விநாடிகள் இருப்பார்.

உத்தராயண புண்ணிய காலம் தை முதல் தேதி முதல் தொடங்குகிறது.

தமிழர்கள் சூரியன் மகர ராசியில் நுழையும் மாதத்தை திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்தவகையில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்களை கிடைக்கும் என்று இங்கு பார்ப்போம்.

மேஷம்

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது உண்மையாகி நற்பலன்களைக் காண உள்ளீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் கவுரவம் உயரும். பொதுப் பிரச்னைகளில் முன்நின்று செயல்படுவீர்கள்.

இக்கட்டான சூழலில் விவேகமான செயல்திட்டங்கள் வெற்றிபெற்று தரும். நேரத்திற்குத் தக்கவாறு பேசி நற்பலன் காண்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி இருக்கும். நிலுவையில் இருந்த பாக்கிகள் விரைவில் வசூலாகும்.

எதிர்பார்க்கும் வரவு வரும். புதிய பெண் நண்பர்களின் மூலம் செயல்திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பொழுதுபோக்குக்கும் பயன்தரும். உடன்பிறந்த சகோதரருக்கு உதவி செய்வீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் மேன்மையடையும்.

உறவினர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளால் கூடுதல் செலவுகள் வரும். அவர்களோடு கருத்து வேறுபாடும் தோன்றும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையும், நிதானமும் தேவை.

கூட்டுத்தொழில் செய்வோர் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்யோகஸ்தர்கள் அலுவலகக் கோப்புகளை பொறுமையுடன் கையாள்வது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 20, 21

பரிகாரம்: வினைகள் தீர விநாயகரை வணங்கலாம். தைப்பூச நாளன்று அருகில் உள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.

ரிஷபம்

சற்று சிரமப்பட்டு உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும். எந்த ஒரு காரியத்திற்கும் அடுத்தவர்களின் துணையை நாட நேரும். சுயமரியாதைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பேச்சு அடுத்தவர் மனதைப் புண்படுத்தக்கூடும் என்பதால் கவனத்துடன் பேசவும். குடும்பத்தில் சலசலப்பு இருக்கும்.

வரவு அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவினங்களும் காத்திருக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாகச் செல்வது நல்லது.

முன்பின் தெரியாதவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். நெடுநாட்களாக இழுபறியில் இருந்த சொத்துப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டும். பிள்ளைகளின் பிடிவாதம் வருத்தம் தந்தாலும் அவர்களது பெருமையைப் பேசி மகிழ்ச்சி கொள்வீர்கள்.

வெளிப்படையான பேச்சால் அவப்பெயர் வரும். தம்பதியருக்கிடையே கருத்தொற்றுமை அதிகரிக்கும். கவுரவச் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் அதிகாரமான பேச்சால் செல்வாக்கை நிலைநாட்டுவீர்கள். கலைத்துறையினர் போட்டியான சூழலை சந்திப்பர். சுகம், சுமை கலந்திருக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 22, 23

பரிகாரம்: புதன்தோறும் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

மிதுனம்

சாதக பாதகங்கள் கலந்திருக்கும். போராட்டமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். நினைத்த காரியங்கள் இழுபறி தரும். எது எப்படி இருந்தாலும் எதிலும் நீங்களே நேரடியாக இறங்கி சுறுசுறுப்புடன் காரியமாற்றினால் உழைப்பிற்கான பலனை உடனடியாகக் காண்பீர்கள்.

தனலாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். குழந்தைகள் குறித்த உங்கள் எதிர்கால எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அடுத்தவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் வெற்றி பெறும். அதே நேரத்தில் அடுத்தவர்களை நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்க வேண்டாம்.

சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவது கூடாது. உடன்பிறந்தோரால் இழப்புகளை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதாகி எரிச்சலூட்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற நண்பர்களோடு இணைந்து படிப்பது நல்லது.

அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

நரம்புத்தளர்ச்சி பிரச்னைகள் வரலாம் என்பதால் உடல்நிலையில் கவனம் அவசியம். தொழில்முறையில் உடன் பணிபுரிவோரை அனுசரித்து செல்வது அவசியம். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதினை ஆக்கிரமிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு நன்மை காண வேண்டிய மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 24, 25

பரிகாரம்: செவ்வாய்தோறும் அம்பிகை வழிபாடு சுறுசுறுப்பைத் தரும்.

கடகம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இழுபறியில் இருந்த குடும்பப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுகமான சூழ்நிலை இருந்தாலும் ஓய்வின்றி செயல்பட வேண்டியிருக்கும். எதிலும் எதிர்ப்புகளை மீறி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும்.

அதிகாரமான பேச்சால் அவப்பெயர் வந்தாலும் அதுவே உங்கள் பலமாகவும் இருக்கும். உறவினர்கள் உங்கள் உதவி நாடி வரக்கூடும். சுயகவுரவத்திற்காக அகலக்கால் வைக்கலாகாது. புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும்.

வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். தொலைதூரப் பிரயாண வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் உங்கள் கவுரவம் உயரும்.

நீண்ட நாட்களாக திருமண கனவில் இருந்தவர்களுக்கு கனவு கைகூடி வரும் நேரம் இது. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு உடல்நிலையில் சிறப்பு கவனம் அவசியம். முக்கியமான பிரச்னையில் நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். ஆன்மிகச் செலவுகள் அதிகரிக்கும்.

தொழில்முறையில் கூடுதல் உழைப்பினை வெளிப்படுத்த நேரும். ஆயினும் அதற்குரிய தனலாபம் உடனடியாகக் கிடைக்கும். கலைஞர்கள் மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். சாதகமான மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 26, 27, 28

பரிகாரம்: புதன்தோறும் சக்கரத்தாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.

சிம்மம்

அவசரத்தை தவிர்த்து எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். எதிலும் அளவுக்கதிகமாக ஆசைப்படுவது கூடாது. எடுத்த செயல்களில் சிறப்பான நற்பலன்களை காண்பீர்கள். வரவு கூடும். நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு சேமிப்பில் ஈடுபடுவது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த முனைப்புடன் செயல்படுவீர்கள்.

உடன்பிறந்தோரால் உங்கள் கவுரவம் உயரும். எதிர்பாராத வகையில் பெரிய மனிதர்களுடனான சந்திப்பு நிகழக்கூடும். திடீர் உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். வாகனங்களால் ஆதாயம் உண்டாகும்.

பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மன வருத்தம் தந்தாலும் அவர்களது செயல்வெற்றி பெருமிதம் கொள்ள செய்யும். கடன் பிரச்னைகள் வெகுவாகக் குறையும்.

தம்பதியரின் ஒற்றுமை எடுத்த செயல்களில் வெற்றி பெற்றுத் தரும். குறைந்த விலை உள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரை சார்ந்திருக்க நேரும். கலைத்துறையினருக்கு தடைகள் உண்டாகும். சுயதொழில் செய்வோர் தனலாபம் காண்பர். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 29, 30

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.

கன்னி

சுயகவுரவத்திற்காக அடுத்தவர்களின் பணிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வீர்கள். உங்கள் செயல்களை பொறுத்தவரை அடுத்தவர்களின் உதவியை அதிகம் எதிர்பாராது சுயபலத்தை மட்டும் நம்பி செயலில் இறங்குவது நன்மை தரும்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருந்து கையிருப்பில் ஏதும் மிஞ்சாது போகும். பேச்சால் நற்பெயர் கிடைக்கும்.

மூத்த சகோதர, சகோதரிகளின் மூலம் நன்மை ஏற்படும். தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்க்கவும். தகப்பனார் வழி உறவினர் ஒருவருடன் மனஸ்தாபம் தோன்றும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. மாணவர்களின் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளின் செயல்களில் மந்தத்தன்மை இருக்கும்.

குடும்பத்தினருடன் கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். முக்கியமான பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கருத்தில் கொள்வது நல்லது.

கவுரவச் செலவுகள் அதிகரிக்கும் நேரம் என்பதால் பண விவகாரங்களில் சுயகட்டுப்பாடு தேவை. தொழில்முறையில் கூடுதல் அலைச்சல் இருக்கும். அதற்கேற்ற லாபமும் கிடைக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த தன லாபம் கிடைக்கும். அலைச்சலின் பேரில் வெற்றி காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 31, பிப்ரவரி 1, 2

பரிகாரம்: சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை தினந்தோறும் ஜபித்து வரவும்.

துலாம்

எடுத்த செயல்களில் நினைத்தபடி வெற்றி பெற தடைகற்களை அகற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். செய்ய வேண்டிய செயல்களை பிரித்தறிந்து பொறுப்புகளை பங்கிட்டு வேலை வாங்குவதில் தனித்துவம் பெறுவீர்கள். பொதுப்பணிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.

இதனால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். அவ்வப்போது மனம் சஞ்சலப்படும். எதிர்பார்த்திருந்த பணவரவு வரும். பேச்சில் வெளிப்படும் விவேகமான கருத்துக்களால் சுயகவுரவம் உயரும்.

உடன்பிறந்தோரால் அதிக செலவுகளுக்கு ஆளாக நேரிடலாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் உண்டாகும். அந்நியப் பெண்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாகனங்களை மாற்றும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும்.

வீட்டில் திடீர் உறவினர்கள் வருகை இருக்கும். உறவினர்களின் வழியில் கலகங்களை சந்திக்க நேரலாம். மாணவர்களின் கல்வி நிலை மேன்மை அடையும். முக்கியமான நேரத்தில் பிள்ளைகளின் ஆலோசனை கைகொடுக்கும். கடன் பிரச்னைகள் தலைதூக்கக் கூடும். த

ம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். ஆன்மிகப் பயணம் தள்ளிப்போகும். தொழில்முறையில் அதிக அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். தடைக்கற்களை வெற்றிப்படிகளாக மாற்றிக்கொள்ளும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 3, 4

பரிகாரம்: காஞ்சி காமாட்சியை வழிபட்டு வாருங்கள்.

விருச்சிகம்

அயராத உழைப்பு, தளராத முயற்சியால் வெற்றிப்பாதையில் பயணிப்பீர்கள். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மனதினை அதிகமாக ஆக்கிரமிக்கும். புதிய செயல்திட்டங்களில் குழப்பம் உண்டாகும். சிறிது காலத்திற்கு புதிய முதலீடுகள், புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடுதல் கூடாது.

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பேச்சில் நிதானம் வெளிப்படும். பல்வேறு வழிகளிலிருந்தும் பொருள் தேட முயற்சிப்பீர்கள். உங்கள் உழைப்பு நீங்கள் எதிர்பார்த்த பலனைத்தரும்.

முன்பின் தெரியாத புதிய நபர்களின் பேச்சை நம்பி எந்த ஒரு விஷயத்திலும் தலையிடக்கூடாது. உடன்பிறந்தோரால் உதவிகள் கிடைக்கும். வாகனங்களால் செலவுகள் கூடும்.

உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரித்தாலும் அவர்களின் துணை உங்களுக்கு தேவைப்படலாம். மாணவர்களின் கல்வித் தரம் மேன்மையடையும்.

பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரோடு பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்குபெறுவீர்கள். தம்பதியருக்குள் கருத்தொற்றுமை அதிகரிக்கும்.

தொழிலில் தனலாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர் கூடுதல் அலைச்சலைக் காண்பர். அயராத உழைப்பால் நன்மை காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 5, 6

பரிகாரம்: செவ்வாய்தோறும் மாரியம்மன் ஆலயத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

தனுசு

பலன்களில் சாதக பாதகங்கள் கலந்திருக்கும். எந்த ஒரு காரியத்தையும் எளிதாகச் செய்துமுடித்து வெற்றி பெறுவீர்கள். சிறப்பான வரவு உண்டு. கடன்பிரச்னைகள் முற்றிலும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும்.

நண்பர்களின் ஆலோசனைகள் தக்க நேரத்தில் பயன் தரும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்குத் துணை நிற்கும்.

பெரிய மனிதர்களுடனான சந்திப்பு உங்கள் கவுரவத்தை உயர்த்துவதோடு எதிர்காலத் திட்டங்களுக்கும் பயன் தரும். வீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதற்குக் காலநேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்களால் ஆதாயம் உண்டாகும்.

உறவினர்களின் வருகை குடும்பத்தின் கலகலப்பை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை காண்பார்கள். விளையாட்டுத்துறை சார்ந்த மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபாடு கூடும்.

தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் அன்யோன்யம் அதிகரிக்கும். தான தரும காரியங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடலாம். தொழில்முறையில் தனித்துவத்தை வெளிப்படுத்துவீர்கள். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 7, 8, 9

பரிகாரம்: தினந்தோறும் 16 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வரவும்.

மகரம்

வேகமான செயல்பாடுகளால் படிப்படியாக சிரமங்கள் குறையும். மனதில் இருக்கும் கஷ்டத்தினை வெளிப்படுத்திக் கொள்ளாது எதையும் தாங்கும் இதயத்தோடு வலம் வருவீர்கள். இழுபறியான சூழலைச் சந்திக்க நேரும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாகி வருத்தம் தோன்றக்கூடும்.

பேச்சால் தேவையற்ற பிரச்னைகள் உருவாகலாம். உங்களது ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உபயோகமாக அமையும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தினை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் அமையும். அண்டை அயலாருடன் பழகும்போது எச்சரிக்கை தேவை.

குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரிடும். முடிந்தவரை அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஒரு சில நேரத்தில் ஞாபகமறதியினால் அவதிப்பட நேரிடலாம். இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

வழக்கு விவகாரங்களில் அடக்கி வாசிப்பது நல்லது. தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றும்கலைத்துறையினர் குறைந்த லாபத்திற்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அதிக அலைச்சலை சந்திக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 10, 11

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி தை அமாவாசை நாளில் ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்யுங்கள்.

கும்பம்

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமையும். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். நெடுநாளைய விருப்பங்கள் நிறைவேறும் நேரம் இது. நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகைகள் வசூலாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பல்வேறு வழிகளிலிருந்தும் பொருள் வரவினைக் காணத் துவங்குவீர்கள். பேசும் வார்த்தைகளில் தேர்ந்தெடுத்த கருத்துக்களை பிரயோகித்து கவுரவத்தினை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யும் சூழல் உருவாகக் கூடும்.

பிரயாணத்தின்போது புதிய நட்பு உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன்தரும்.

புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வாகனங்களினால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கும்.

வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் சேரும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.

அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு நற்தகவல் வந்து சேரும். தொழில்முறையில் போட்டியான சூழலை சந்திக்க நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபம் காண்பார்கள். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 15, 16, பிப்ரவரி 12

பரிகாரம்: திங்கள்தோறும் 11 முறை சிவாலய பிரதட்சிணம் செய்து வாருங்கள்.

மீனம்

துவக்கமே சிறப்பான நற்பலன்களைத் தரும். நினைத்த காரியங்களை எளிதில் நடத்தி முடிப்பீர்கள். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல, நீங்கள் சந்திக்க நினைக்கும் நபர் உங்களை நாடி வந்து உதவி செய்வார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும்.

பேச்சில் வெளிப்படும் விவேகம் அடுத்தவர்கள் மத்தியில் உங்கள் நன்மதிப்பினை உயரச் செய்யும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தினை உடனுக்குடன் கண்டு வருவீர்கள்.

கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர் ஒருவர் செய்நன்றி மறந்து செயல்படுவதைக் கண்டு மனம் வருந்த நேரிடும். உறவினர்களுடன் பண விவகாரங்களில் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு.

முக்கியமான காரியங்களில் இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக செயல்படுவது நல்லது. உடலில் அவ்வப்போது தலைதூக்கும் சோம்பல்தன்மையால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரலாம். முன்பின் தெரியாத பெண்களிடம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் காணும் நேரம் இது.

அலுவல் பணியில் உயரதிகாரிகளிடம் நன்மதிப்பினைப் பெறுவீர்கள். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபம் காண்பார்கள். கலைத்துறையினருக்கு பிப்ரவரி 4ம் தேதி முதல் வாய்ப்புகள் தேடி வரும். நினைத்தது நடக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 17, 18, 19

பரிகாரம்: வெள்ளி தோறும் மகாலட்சுமி பூஜை செய்து வரவும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்