கடலில் கடிதத்துடன் மிதந்து வந்த பாட்டில்: மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு காத்திருந்த ஆச்சர்யம்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜியா எலியட் என்கிற சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய அப்பா பால் உடன் மேற்கு கடற்கரையில் மீன் பிடிக்க சென்றுள்ளான்.

அப்போது கடலில் ஒரு பாட்டில் மிதந்து வந்துள்ளது. அந்த பாட்டிலுக்குள் ஒரு குறிப்புடன் கூடிய கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதம் பிரித்தானியாவை சேர்ந்த 13 வயது சிறுவனால் 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேற்கில் ஃப்ரீமாண்டில் இருந்து கிழக்கில் மெல்போர்ன் வரை தெற்கு அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒரு கப்பல் பயணத்தில் இருந்த 13 வயது சிறுவனின் பயணத்தை பற்றி அந்த குறிப்பு விவரிக்கிறது.

இப்போது ஜியா, பால் கில்மோர் எனப்படும் கடிதத்தின் உரிமையாளரான 63 வயது பிரித்தானியரை பேஸ்புக் மூலம் தீவிரமாக தேடி வருகிறார்.

இதுகுறித்து அவுஸ்திரேலிய அரசாங்க கடல்சார் ஆய்வாளரான டேவிட் கிரிஃபின் கூறுகையில், தென் கடற்கரையிலிருந்து 50 ஆண்டுகளாக இந்த பாட்டில் மிதந்து இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் "கடல் ஒருபோதும் நிலைத்திருக்காது". நிச்சயமாக இந்த பாட்டில் கடற்கரை மணலில் புதைந்திருக்கும். பின்னர் மீண்டும் ஏற்பட்ட புயலால் கடலில் மிதக்க ஆரம்பித்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

கடலில் அதிகபட்சமாக 2 வருடங்கள் மட்டுமே எந்த பொருளாக இருந்தாலும் மிதக்கும். அதன்பிறகு கரையில் ஒதுங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக 1960களில் லட்சக்கணக்கான பிரித்தானியர்கள் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தனர். அவுஸ்திரேலியா அரசாங்கம் அவர்களின் கட்டணங்களுக்கு மானியம் வழங்கியது. குழந்தைகள் இலவசமாக பயணம் செய்தனர்.

ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பை அவுஸ்திரேலியா பூர்த்தி செய்யாததால், அடுத்த சில ஆண்டுகளில் அவர்களில் பாதிபேர் பிரித்தானியாவிற்கே மீண்டும் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்