அவுஸ்திரேலியாவிலிருந்து குடும்பத்துடன் நாடு கடத்தப்பட உள்ள மாணவியின் நெகிழ வைத்த செயல்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் நாடு கடத்தப்பட உள்ள இந்திய வம்சாவளியினரான ஒரு மாணவி, புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக பிரபல அவுஸ்திரேலிய பாடல் ஒன்றை பாடி நெகிழ வைத்தார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜசேகரன் மாணிக்கம் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காக 2103ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார்.

தற்போது அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்காக மருத்துவ செலவுகளை செய்ய இயலாது என்று கூறி, அவரது குடும்பத்தை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது அவுஸ்திரேலிய அரசு.

தனது உடல்நிலை தனது வாழ்வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ள ராஜசேகரன், அரசு மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ளப்போவதில்லை என்று கூட கூறிவிட்டார்.

புலம்பெயர்தல் அமைச்சருக்கு சுமார் 14,000 பேர் கையெழுத்திட்ட விண்ணப்பம் ஒன்றையும் அவர் அளித்து விட்டார்.

என்றாலும் எந்த பிரயோஜனமும் இல்லை, அவர்கள் இம்மாதம் (ஆகத்து) 21 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்ட ராஜ சேகரனின் மகளான வாணிஸ்ரீ ராஜசேகரன், புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தனது செய்தியாக ’நான் ஒரு அவுஸ்திரேலியர்’ என்னும் பாடலை பாடினார்.

அவர் பாடிய விதம் அங்கிருந்தோரை நெகிழச் செய்ததையடுத்து, நீங்கள் மட்டும் இந்த நாட்டுக்கு எதையாவது செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.

வாணிஸ்ரீ 12ஆவது வகுப்பு படித்து வரும் நிலையில், உடனடியாக அவர் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளதால், சிறந்த மாணவியாகவும், மாணவர் தலைவராகவும் திகழும் அவர், தனது ஆண்டிறுதித் தேர்வை எழுதாமலே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்