பறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்: சைக்கிளில் சென்றபோது அதிர்ச்சி

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பறவை தாக்கியதால், தலையில் காயம்பட்டு 73 வயது சைக்கிள் பயணி ஒருவர் இறந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னிக்கு தெற்கே அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், வூனோனாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள நிக்கல்சன் பூங்காவின் வேலியை ஒட்டியப் பகுதியில் குறித்த பயணி தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப் பாதையிலிருந்து வெளியேறும்போது சைக்கிள் பயணி தலையில் மாக்பி, என்ற பறவை வந்து வேகமாக தாக்கியுள்ளது.

இதனால் நிலைகுலைந்த அவர் தரையில் வீசப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

உடனடியாக அவரை மீட்டு சிட்னியின் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உள்ளூர் நேரப்படி மாலையில் இறந்தார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பூங்கா அருகே சைக்கிளில் சவாரி செய்து கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட தாக்குதல் குறித்து தெரிவித்த உள்ளூர்வாசிகள் அவரது தலையில் ஆக்ரோஷமாக தாக்கிவிட்டுச் சென்ற மாக்பிதான் குற்றவாளி என்று தெரிவித்தனர்.

மாக்பி, அவுஸ்திரேலிய நாட்டின் முக்கியமான பறவை, வசந்த காலத்தை ஒட்டியே இந்தப் பறவையின் இனப்பெருக்கக் காலம். இத்தகைய காலகட்டத்தில்தான் அது கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் என கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த பாதைகளில் எச்சரிக்கை அறிகுறிகளையும் அபாய அறிவிப்புகளையும் வைத்துள்ளதாக நகரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அவுஸ்திரேலியாவின் வசந்த காலத்தில் மாக்பி பறவைகளின் தாக்குதல் நாடு முழுவதும் நிகழ்கிறது.

அவுஸ்திரேலியாவின் இந்தப் பறவைகள் ஆகஸ்டில் இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன, மேலும் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க அது சில தாக்குதலில் ஈடுபடுகின்றன.

மற்றபடி அதற்கு வேறு நோக்கங்கள் இல்லை. இதற்கு முன்னரும் பலமுறை மாக்பி தாக்குதல்கள் இதே பூங்காவில் நடந்துள்ளன உள்ளூர் பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்