ஆறு ஆண்டுகள் முன் அவுஸ்திரேலியாவில் இறக்கிவிடப்பட்ட இலங்கை தமிழ் குடும்பம்: இன்னும் தீராத சோகம்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு ஒன்றில் வந்த ஒரு இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று, தங்களை அவுஸ்திரேலியா அகதிகளாக ஏற்றுக்கொள்வதற்காக ஆறு ஆண்டுகளாக காத்திருக்கிறது.

1998ஆம் ஆண்டு தனது குழந்தைகளுடன் இலங்கையிலிருந்து தப்ப முடிவு செய்த புஷ்பராணி குமரவேல், காடுகளில் சில காலம் மறைந்து வாழ்ந்தபின், படகு ஒன்றில் இந்தியாவுக்கு தப்பினார்.

குழந்தை அழுது, அதனால் தாங்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக, குழந்தைக்கு பாலூட்டியபடியே வந்ததை நினைவுகூறுகிறார் தற்போது 52 வயதாகும் புஷ்பராணி.

15 ஆண்டுகள் இந்தியாவில் அகதிகள் முகாம் ஒன்றில் வாழ்ந்த புஷ்பராணி குடும்பம், பின்னர் தங்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறிய மக்களை கடத்தும் ஒருவரின் பேச்சை நம்பி அவுஸ்திரேலியா எங்கிருக்கிறது என்பதே தெரியாமல் புறப்பட்டது.

ABC Gippsland: Mim Cook

அந்த நபர், படகில் அவர்களை இந்தோனேஷியாவுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இந்தோனேஷிய ராணுவம் அவர்களைப் பிடித்து அகதிகள் முகாம் ஒன்றில் அடைத்தது.

என்றாலும், அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. மீண்டும் மக்களை கடத்திக்கொண்டு செல்லும் ஒருவர் அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயலும்போது பொலிசாரைக் கண்டு பயந்து காடு ஒன்றிற்குள் நுழைந்துள்ளது புஷ்பராணி குடும்பம்.

ஒரே ஈரம், குளிர், சேறு, குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு, குடிக்க இலைகளிலிருந்து வடியும் நீர் என கடும் போராட்டத்துக்குப்பின் மீண்டும் மக்களை கடத்துவோர் புஷ்பராணி குடும்பத்தினரைக் கண்டுபிடித்து படகு ஒன்றில் ஏற்றிவிட, படகில் பயணித்த அவர்கள் அவுஸ்திரேலிய கடற்படையிடம் சிக்கியிருக்கிறார்கள்.

அவர்களை கைது செய்த கடற்படையினர் அவுஸ்திரேலியா நாட்டுக்குள் கொண்டு செல்வார்கள் என்று பார்த்தால், எந்த இந்தோனேஷியாவிலிருந்து தப்பினார்களோ அதே இந்தோனேஷிய தலைநகருக்கு அருகிலிருக்கும் கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு அவர்களை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ABC Gippsland: Mim Cook

பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு இடமாக பந்தாடப்பட்ட புஷ்பராணி குடும்பத்தினர், தற்போது கிழக்கு விக்டோரியாவிலிருக்கும் Sale என்ற இடத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.

காவலில் நீண்ட காலம் செலவிட்டோருக்காக வழங்கப்படும் bridging visa என்னும் விசாவில் வாழ்ந்துவரும் புஷ்பராணி குடும்பத்தினர், இனியாவது நிம்மதியாக ஒரு இடத்தில் குடியமர்ந்து வாழமுடியுமா என்ற ஏக்கத்துடன் அவுஸ்திரேலியாவின் மீது தங்கள் நம்பிக்கையை வைத்து காத்திருக்கிறார்கள்.

ஆனால் bridging விசாக்களை நம்பி வாழும் வாழ்க்கை பரமபதம் (snakes and ladders) விளையாட்டு போல, என்று கூறும் Gippsland அகதிகள் சட்டத்தரணியான Laurie Stewart, bridging விசாக்கள் விளையாட்டில் பாம்பு போல, சறுக்கிவிடும் என்கிறார்.

என்னிடம் பேசும் எனது கட்சிக்காரர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் நிலையற்ற தன்மைதான் தங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

தங்களால் எந்த திட்டமும் போட முடியாது என்கிறார்கள் அவர்கள், பிள்ளைகளுக்கு பள்ளிச் சீருடை புதிதாக வாங்க வேண்டுமா, ஏனென்றால் அடுத்த பள்ளியாண்டும் இதே ஊரில்தான் இருப்போமா என்பதே தெரியாத நிலையில் எப்படி சீருடை வாங்குவது? ஓரிடத்தில் ஓராண்டுக்கு வாழ்வோமா அல்லது ஆறு மாதங்கள்தானா என எதுவுமே உறுதியாக தெரியாத நிலையில் அடுத்து என்ன செய்வது என திட்டமிட முடியாத நிலையில் அவர்கள் இருப்பதாக தெரிவிக்கிறார் Stewart.

புலம்பெயர்தல் துறை எல்லாரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறது, நடத்த முயல்கிறது, ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை என்கிறார் Stewart.

ABC Gippsland: Mim Cook

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்