போலி வெடிகுண்டுடன் விமானத்தை கடத்த முயன்ற இலங்கையர்: வழக்கில் அதிரடி திருப்பம்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

போலி வெடிகுண்டுடன் விமானத்தைக் கடத்த முயன்ற இலங்கையர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் உடனடியாக விடுவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மெல்போர்னிலிருந்து இலங்கை புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் பயணிகளுக்கு, அடுத்த சில நிமிடங்களில் தாங்கள் ஒரு பயங்கர அனுபவத்தை சந்திக்க இருக்கிறோம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது இருக்கையிலிருந்து எழுந்த Manodh Marks என்பவர், தன் கையில் வெடிகுண்டுகள் போல் நீல நிற விளக்குகள் மின்னும் இரண்டு பொருட்களை கையில் வைத்துக்கொண்டு, விமானத்தை வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இரண்டு மணி நேர அச்சுறுத்தலுக்குப்பின், விமான ஊழியர்களும், பயணிகள் சிலரும் அவரைப் பிடித்து அவரிடமிருந்த பொருளை கைப்பற்றினர்.

நீண்ட நேரத்திற்குப் பின் வந்த அதிகாரிகள், அது வெடிகுண்டு அல்ல என்பதைக் கண்டுபிடித்தனர்.

என்றாலும் அவ்வளவு நேரமும் அந்த விமானத்திலிருந்த பயணிகள் உயிர் பயத்துடன்தான் இருந்தார்கள்.

பின்னர் கைது செய்யப்பட்ட Manodhக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறைந்தது 9 ஆண்டுகளாவது அவர் அவுஸ்திரேலியாவில் சிறையில் இருக்கவேண்டும் என்றும், அதன் பின் அவரது சொந்த ஊரான கொழும்புவுக்கு நாடு கடத்தப்படவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வழக்கில் அதிரடி திருப்பமாக, உடனடியாக Manodh இலங்கை திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.

சம்பவம் நடப்பதற்கு சற்று முன்புதான் Manodh மன நல மருத்துவமனை ஒன்றிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னர், அவர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் அவரது கையிலிருந்தது உண்மையான வெடிகுண்டும் அல்ல. எனவே தனது தீர்ப்பை எதிர்த்து Manodh மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.

தான் மிரட்டல் விடுத்தபோது, போதையின் தாக்கம் மற்றும் முந்தைய மன நல பிரச்னைகளின் தாக்கத்தில் Manodh இருந்ததாக கூறும் அவரது சட்டத்தரணி, அவர் விரைவில் இலங்கை திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்