அவுஸ்திரேலியாவில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான பத்திரிகைகள்: பின்னணி!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

இன்று பிரதான பத்திரிகைகள் உட்பட அவுஸ்திரேலிய பத்திரிகைகள் பல, கருப்பு வண்ணம் பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியாகியுள்ளன. அத்துடன், அவற்றில் சிவப்பு நிறத்தில் ரகசியம் என்ற முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுக்கொன்று எதிரிகள் என கருத்தப்படும் பத்திரிகைகளும் இவ்விடயத்தில் கைகோர்த்திருப்பதன் காரணம் இதுதான்.

அதாவது சமீப காலமாக, அவுஸ்திரேலியாவில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது.

ஜூன் மாதம், Australian Broadcasting Corporation (ABC) என்ற ஊடக அலுவலகம் மற்றும் News Corp Australia என்ற ஊடகத்தின் பத்திரிகையாளர் ஒருவரில் இல்லம் ஆகியவற்றில் பொலிசார் ரெய்டு நடத்தினார்கள். இதற்கு பலத்த எதிர்ப்பு தோன்றியது.

சமீபத்தில் வெளியான அரசு தொடர்பான சில ரகசிய தகவல்கள் குறித்து இந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு பத்திரிகை போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், மற்றொரு பத்திரிகை அவுஸ்திரேலிய குடிமக்களை அரசு வேவு பார்ப்பது தொடர்பாகவும் செய்தி வெளியிட்டிருந்தன.

எனவேதான், அவற்றைக் குறிவைத்து ரெய்டுகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அந்த பத்திரிகைகள், இன்றைய நாளிதள்களில் முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு வண்ணம் பூசி மறைத்தும், ரகசியம் என சிவப்பு நிறத்தில் முத்திரை பதித்தும் தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளன.

முக்கிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தடுக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசு தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டு வந்ததை எதிர்த்து, இந்த நடவடிக்கையை ஊடகங்கள் எடுத்துள்ளன.

அவுஸ்திரேலிய அரசு, பத்திரிகை சுதந்திரத்தை ஆதரிப்பதாகவும் ஆனால், யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.

இன்றைய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு, பல தொலைக்காட்சி, வானொலி மற்றும் ஒன்லைன் ஊடகங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்