என் கணவரைக் கொன்றவன் தண்டிக்கப்படவேண்டும்: நீதி கேட்கும் கனடா விதவைப்பெண்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் கியூபெக் நகரில் உள்ள இஸ்லாமிய கலாச்சார மையத்தில் அலெக்சாண்ட் என்பவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் அறிக்கைகளை நீதிபதி கேட்டு வருகிறார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒருவரான அப்துல் கரீம் என்பவரின் மனைவியாகிய லூயிஸா என்பவர் தனது அறிக்கையில் குற்றம் புரியும் மற்றவர்களை எச்சரிக்கும் வகையில் அலெக்சாண்ட்டுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

லூயிஸா தனது அறிக்கையில் கூறியுள்ள விடயங்கள் கல்லையும் கரையச் செய்யும் விதத்தில் அமைந்துள்ளன.

அப்துல் கரீம், லூயிஸா தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள். எப்போதும் உற்சாகப்படுத்தும் வகையிலும் அதே நேரத்தில் வேடிக்கையாகவும் பேசும் அப்துல் கரீம், சம்பவம் நடந்த அன்று தொழுகைக்காக சென்றுள்ளார். அப்போதுதான் அலெக்சாண்டின் துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

தந்தை இறந்துபோன செய்தியை பிள்ளைகளிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவித்திருக்கிறார் லூயிஸா.

ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த சுற்றுலாப் பயணங்கள், நடன நிகழ்ச்சிகள் எல்லாம் மொத்தமாக தடைபட்டுப்போயின என்று கூறும் லூயிஸா, தனது பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாக்களையோ திருமணங்களையோ பார்ப்பதற்கு அவர்களது தந்தை இருக்கமாட்டாரே என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தந்தையின் இறப்புச் செய்தியைக் கேட்ட நாள் முதல் அப்துல் கரீமின் பிள்ளைகள் தாங்கள் பின்பற்றும் மதத்திற்காகத்தான் தங்களது தந்தை கொல்லப்பட்டார் என்றால் தங்களுக்கும் தங்களது தாய்க்கும் கூட அதே நிலைமைதானே ஏற்படும் என்ற அச்சத்திலேயே எப்போதும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மதத்தின் மீதுள்ள வெறுப்பால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதால், தீவிரவாதமும் இஸ்லாமின் மீதான வெறுப்பும் இஸ்லாமிய சமுதாயத்தையே அச்சத்திற்குள்ளாக்கியதோடு, சமுதாயத்தின் முக்கிய நோக்கமான சேர்ந்து வாழ்தலையே அது கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி மேல் நடக்ககூடாது என்பதால் இந்த இனவெறுப்புக் குற்றத்தை செய்தவனுக்கு மற்றவர்களை எச்சரிக்கும் வகையிலான ஒரு சரியான தண்டனையை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இறக்கும் வரையில் சிறையை விட்டு வெளியே வராத வகையில் அலெக்சாண்டுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்