ஆங் சாங் சூ கியின் கௌரவ குடியுரிமை பறிப்பு: கனடா அதிரடி

Report Print Balamanuvelan in கனடா
231Shares
231Shares
ibctamil.com

மியான்மர் நாட்டில் பிரதமர் பதவிக்கு இணையான பதவியாகிய அரசு ஆலோசகர் என்னும் பொறுப்பு வகிக்கும் ஆங் சாங் சூ கிக்கு கனடா வழங்கியிருந்த கௌரவ குடியுரிமையை அந்நாடு அதிரடியாக பறிக்க முடிவு செய்துள்ளது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் பதற, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வீட்டுச் சிறையில் அடைபட்டுக் கிடந்த ஆங் சாங் சூகியோ இது குறித்து தட்டிக் கேட்கவில்லை.

சமீபத்தில் ஐ.நா உண்மையறியும் குழு ஒன்று, மியான்மர் ராணுவம் மைனாரிட்டி முஸ்லீம்கள் மற்றும் பிற மைனாரிட்டி மக்களுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபட்டதை உறுதி செய்தது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தன் சொந்த நாட்டு மக்களை காப்பாற்றாமல், ராணுவத்தின் அத்துமீறலை வேடிக்கை பார்ப்பதாக பலத்த விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ரோஹிங்கியா மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், கனடாவும் தன் பங்குக்கு ஆங் சாங் சூ கிக்கு வழங்கியிருந்த கௌரவ குடியுரிமையை பறிக்க முடிவு செய்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் நாடாளுமன்றம் ஆங் சாங் சூகியின் கௌரவ குடியுரிமை பறிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்.

என்றாலும் இதனால் ரோஹிங்கியா மக்களின் கஷ்டம் பெரிய அளவில் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கனடாவைப் பொருத்தவரையில் கௌரவ குடியுரிமை வழங்குவது பிரதமர் அல்ல, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலமாகவே அது முடிவு செய்யப்படும்.

அதேபோல், கௌரவ குடியுரிமையை பறிப்பதும் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலமாகவே முடிவு செய்யப்படும்.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக ஆங் சாங் சூகியின் கௌரவ குடியுரிமை பறிப்பது தொடர்பான ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளார்கள்.

ஆங் சாங் சூகி இனி கனடாவின் கௌரவ குடிமகளாக நாடாளுமன்றத்தால் கருதப்படமாட்டார், அதே நேரத்தில் அதிகாரப்பூர்வமாக ஆங் சாங் சூகியின் கௌரவ குடியுரிமை பறிக்கப்படுவதற்கு முன், தற்போது நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கோத்த இன்னொரு மசோதாவை செனட் நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்