கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட 14 வயது சிறுமி: திரும்ப பெறப்பட்ட ஆம்பர் அலெர்ட் பற்றிய பின்னணி தகவல்கள்

Report Print Balamanuvelan in கனடா

தனது பள்ளி அருகே கடத்திச் செல்லப்பட்ட ஒரு சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதையடுத்து Edmonton பகுதியில் விடுக்கப்பட்டிருந்த ஆம்பர் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நேற்று மதியம் Edmonton பகுதியில் அமைந்திருந்த ஒரு பள்ளியின் முன்பு ஒரு 14 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து அப்பகுதிக்கு ஆம்பர் அலெர்ட் விடுக்கப்பட்டது.

அந்த இளம்பெண்ணை கடத்தியது Jacques Sennesael என்ற நபர் என்றும் ஒரு செய்தி வெளியானது.

McNally High School என்னும் பள்ளியில் படிக்கும் அந்தப் பெண், காரில் வந்த ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் அவருடன் காரில் சென்றதாகவும் அந்த பெண்ணின் பள்ளியில் படிக்கும் பிற மாணவிகள் தெரிவித்தனர்.

அந்த நபர் சந்தேகத்திற்குரிய விதத்தில் காணப்பட்டதாகவும் அவரது காரில் ஒரு துப்பாக்கி இருந்ததைப் பார்த்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு நபர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த நபர் ஒரு லாண்டரியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அந்த இளம்பெண் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அந்த லாண்டரியின் உரிமையாளர் குறிப்பிட்ட அந்த நபர், தன் துணிகளைத் துவைப்பதற்காக வந்ததாகவும் பின்பு ஒரு மணி நேரத்திற்குப்பின் மீண்டும் ஒருஇளம்பெண்ணுடன் வந்ததாகவும், அவர்கள் இருவரும் அங்கிருக்கும்போதே பொலிசார் வந்து அந்த நபரைக் கைது செய்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஒரு நபரை பொலிசார் கைது செய்யும் காட்சி ஒன்றை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அவர்தான் அந்த பெண்ணை கடத்தியவர் என்பது உறுதி செய்யப்படாத நிலையில், பொலிசார் வெளியிட்டிருந்த அவரது அங்க அடையாளங்களும், அவரது காரின் அடையாளங்களும் பொருந்துவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதுமட்டுமின்றி அந்த இளம்பெண்ணும் அவளைக் கடத்தியதாகக் கூறப்படும் நபரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும் அவர்களுக்கிடையே என்ன உறவு என்பது குறித்து தெரியவில்லை என்றும் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers