நானும் இலங்கை அகதிகளும் துன்புறுத்தப்பட்டோம்: உயிர் தப்பிய கனடா வழக்கறிஞர்

Report Print Balamanuvelan in கனடா

சர்வதேச அளவில் தேடப்படும் நபர் ஒருவருக்கு உதவியதற்காக இலங்கைத் தமிழர்கள் உட்பட அகதிகள் சிலரும் அவர்களது வழக்கறிஞர் ஒருவரும் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார் அந்த வழக்கறிஞர்.

அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டதற்காக சர்வதேச அளவில் தேடப்பட்ட Edward Snowden என்னும் அமெரிக்கருக்கு அடைக்கலம் கொடுத்த அகதிகளும் அவர்களது வழக்கறிஞரும் ஹாங்காங் அதிகாரிகளால் சொல்லொணா தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்பட்டதாக அங்கிருந்து தப்பி பிரான்சில் தற்காலிகமாக தங்கி இருக்கும் Robert Tibbo சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் வழக்கறிஞரான Robert, Edward Snowdenக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்த போது, அவரை யாரும் கண்டுபிடிக்க இயலாத ஒரு இடத்தில் அவரை மறைத்துவைக்க முடிவு செய்தார்.

அது உலகின் பணக்கார நகரமான ஹாங்காங்கின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் வாழும் சேரிப்பகுதி.

அங்குதான் பிலிப்பைன்சைச் சேர்ந்த அகதிக் குடும்பம் ஒன்றும் இலங்கை அகதிகள் சிலரும் வசித்து வந்தனர்.

Vanessa Mae Rodel, Supun Thilina Kellapatha, Nadeeka Nonis மற்றும் Ajith Pushpa Kumara என்னும் அகதிகளின் உதவியை, அவர்களது வழக்கறிஞரான Robert

நாடியபோது, அவர்கள் தங்களைப் போலவே இன்னொரு நாட்டில் சிக்கித் தவிக்கும் ஒரு நபராக கருதி Snowdenக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்தனர்.

பின்னர் இந்த தகவல் வெளியான நிலையில், மறைந்திருப்பது அவர்களுக்கே ஆபத்தாக முடியலாம், அவர்கள் வெளி வராமலே கொல்லப்பட்டுப் போகலாம் என்று எண்ணிய Robert, அவர்களைக் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். ஆனால் அது அவர்களுக்கு இன்னும் சிக்கலாக முடிந்தது.

Snowdenக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அவர்களை விசாரித்த ஹாங்காங் அதிகாரிகள், அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறிய உதவித் தொகையையும் நிறுத்தினர்.

அதன்பின் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய மறுத்ததோடு, அகதிகள் துன்புறுத்தப்பட்டனர், அவமானப்படுத்தப்பட்டனர்.

உடனடியாக அவர்களது புகலிடக் கோரிக்கைகள் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன. அவர்களுக்கு வேலை செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது.

கனடாவின் தொண்டு நிறுவனம் ஒன்று மட்டுமே அவர்களுக்கு உதவ முன்வந்த நிலையில் இன்னும் அச்சத்துடனே வாழ்கிறார்கள் அந்த அகதிகள்.

அவர்கள் மட்டுமில்லை, Robertக்கே கிட்டத்தட்ட உணவுக்கு வழி இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது. அவருக்கு வரவேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை.

கேட்டால் சரியான பதிலும் இல்லாத நிலையில் வேறு வழியின்றி ஹாங்காங்கை விட்டு வெளியேற முடிவு செய்தார் Robert.

இனி அங்கு வேலை செய்ய முடியாது என்கிறார் அவர். தற்போது பிரான்சில் தங்கியிருக்கும் அவர் மனிதநேய அடிப்படையில் ஒருவருக்கு உதவி செய்யப்போக, தனக்கும் தனது கட்சிக்காரர்களுக்கும் நடந்த கொடுமைகளைக் குறித்து விலாவாரியாக விளக்குவதோடு, அது ஹாங்காங் அரசோ அல்லது சீன அரசோ, அவர்கள் Snowden அகதிகளை தொந்தரவாகத்தான் கருதுகிறார்கள் என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers