சிறுவர்களுக்கு கொடுக்கப்படும் சில இருமல் மருந்துகள் போதை பழக்கத்தை ஏற்படுத்தலாம்: கனடா மருத்துவத்துறை எச்சரிக்கை

Report Print Balamanuvelan in கனடா

சிறுவர்களுக்கு கொடுக்கப்படும் சில இருமல் மருந்துகளில் போதைப் பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்படுவதால் அவை பின்னாட்களில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கனடா மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருமல் மற்றும் ஜலதோஷத்திற்காக பயன்படுத்தப்படும் சில மருந்துகளில் opioid வகை போதைப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

எனவே சிறுவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் (adolescents) அத்தகைய இருமல் மற்றும் ஜலதோஷ மருந்துகளை கொடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு இத்தகைய மருந்துகளைக் கொடுப்பது அவர்கள் வாழ்வின் பிற்காலத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு காரணமாக அமையும் வாய்ப்புள்ளது என்றும் கனடா மருத்துவத்துறை கூறியுள்ளது.

நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு codeine, hydrocodone மற்றும் normethadone ஆகிய opioid வகை போதைப்பொருட்கள் கொண்ட இருமல் மருந்துகளை கொடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கும் இந்த வகை இருமல் மருந்துகளுக்கும் நேரடி தொடர்பு ஏதும் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், சிறு வயதில் அவற்றை பயன்படுத்துவது பிற்காலத்தில் அவர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகுவதற்கு ஒரு காரணமாக அமையலாம்.

அதேபோல் இந்த மருந்துகள் 18 வயதுக்கு குறைந்தவர்களில் இருமல் மற்றும் ஜலதோஷத்தை நன்கு குணமாக்குவதற்கான போதுமான ஆதாரங்களும் இல்லையென்றும், சிறுவர்களின் இருமல் மற்றும் ஜலதோஷத்திற்கான வேறு நல்ல மருந்துகள் இருப்பதாகவும் கனடா மருத்துவத்துறை கூறியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்