பாலுறவுக்கு சம்மதிக்காவிட்டால் புலம் பெயர்ந்தோர் விண்ணப்பம் ரத்து! இந்தியப் பெண்ணுக்கு மிரட்டல்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவுக்கு வேலைக்காக சென்ற ஒரு இளம்பெண்ணிடம் பாலுறவுக்கு சம்மதிக்காவிட்டால் புலம்பெயர்ந்தோர் விண்ணப்பத்தை ரத்து செய்து விடுவதாக அவருக்கு பணி வழங்கியவர் மிரட்டியதை தொடர்ந்து அவர் அஞ்சி தலைமறைவாகியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ஆஷ்னா, 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிவதற்காக எட்மண்டனுக்கு சென்றார்.

ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஆஷ்னாவுக்கு பணி வழங்கியதோடு, நிரந்தர வாழிடம் பெறுவதற்கு ஒரு படியாக விளங்கும் Alberta Immigrant Nominee Program (AINP) என்னும் திட்டத்தின்கீழ், அவருக்கு ஸ்பான்சர் செய்யவும் ஒப்புக் கொண்டார்.

2018 ஜூலை வரை அந்த ஹோட்டலில் ஆஷ்னா பணிபுரிந்த நிலையில், அந்த ஹோட்டல் மற்றொருவருக்கு கைமாறியது.

அங்கேயே ஆஷ்னா தனது பணியைத் தொடர்ந்தாலும், அவரது AINP விண்ணப்பம் அவரது முந்தைய முதலாளியிடமே இருந்தது.

அதைப் பயன்படுத்திக் கொண்டு, ஆஷ்னாவை தன்னைக் காணும்படி வரச் சொன்ன அந்த நபர், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மிரட்டியதோடு, ஆஷ்னாவை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அவருடன் இருந்த நண்பர்களும் தொடர்ந்து ஆஷ்னாவை அங்கேயே இருக்க வற்புறுத்தியதோடு, தொடர்ந்து அவரை கட்டியணைக்கவும் தவறாக நடந்து கொள்ளவும் முயன்றிருக்கின்றனர்.

அத்துடன் தனது ஆசைக்கு இணங்காவிட்டால், ஆஷ்னாவின் AINP விண்ணப்பத்தை ரத்து செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார் அந்த நபர்.

அவர்களிடம் போராடி, தப்பியோடிய ஆஷ்னா, பொலிசாரிடம் புகாரளித்திருக்கிறார். பொலிசார் புகாரை பதிவு செய்த பின்னர், புகாரை வாபஸ் வாங்கும்படி ஆஷ்னாவை மிரட்டியிருக்கிறார் அந்த நபர்.

மன உழைச்சலால், ஆஷ்னா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் விடாமல் துரத்தியிருக்கிறார் அந்த நபர்.

மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் வேறு ஒரு வேலையைத் தேடிக் கொண்ட ஆஷ்னா தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

தன்னைப்போல் வேலைக்காக வரும் இளம்பெண்களை, வாழிட உரிமத்திற்காக படுக்கைக்கு அழைக்கும் இத்தகையவர்கள் கனடாவில் இருக்கிறார்கள் என மற்ற இளம்பெண்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே பத்திரிகைக்கு பேட்டியளித்ததாக தெரிவித்துள்ளார் ஆஷ்னா.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்