கனடாவில் சிக்கன் சாப்பிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in கனடா

ஆறு கனேடிய மாகாணங்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமியின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து சிக்கன் மற்றும் வான்கோழி போன்ற மாமிச உணவு சாப்பிடுபவர்களுக்கு கனடா சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை கனடாவின் ஆறு மாகாணங்களில் 63 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலும் எங்கிருந்து இந்த நோய்த்தொற்று பரவியது என்பது தெரியவில்லை.

மேற்கு அட்லாண்டிக் பகுதியிலுள்ள அனைத்து மாகாணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கனடா சுகாதாரத்துறை ஒவ்வொரு மாகாணத்திலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி பிரிட்டிஷ் கொலம்பியாவில் 23 பேரும், ஆல்பர்ட்டாவில் 10 பேரும், சாஸ்கட்ச்சேவன் மாகாணத்தில் 8 பேரும் , மனித்தோபாவில் 10 பேரும் , ஒண்டாரியோவில் 10 பேரும், கியூபெக்கில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது கடந்த ஆண்டு நவம்பர் மாத்திலிருந்து இந்த மார்ச் வரையிலான கணக்கு ஆகும். இதுவரை 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

என்றாலும் உயிரிழந்தவர்கள் சால்மோனெல்லா நோய்த்தொற்றினால்தான் இறந்தார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று முதல் 87 வயது வரை உள்ளவர்கள், அதிக பாதிப்புக்குள்ளானவர்கள் (57 சதவிகிதம்) பெண்கள்.

இவ்வளவு நடந்தும் எங்கிருந்து நோய்த்தொற்று பரவியது என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்காக சுகாதாரத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு நாளும் உணவு சமைக்கும்போது சுகாதாரமாக உணவு சமைப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் உணவை சமைப்பதற்குமுன் சோப்பினால் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு கைகளை குறைந்தது 20 வினாடிகள் கழுவுமாறும், சிக்கன், மீன், பிற மாமிசம், நண்டு, இறால் போன்ற உணவு வகைகள் மற்றும் முட்டை போன்றவற்றை பச்சையாகவோ முழுவதும் வேக வைக்காமலோ உண்ண வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers