பாலியல் வன்முறை புகாரளிக்க வந்த இளம்பெண்ணை மோசமாக விசாரித்த பொலிசார்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம்!

Report Print Balamanuvelan in கனடா

தன்னை ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகாரளிக்க வந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் மோசமான கேள்விகளை கேட்ட பொலிசாருக்கு கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் பாலியல் புகாரளிக்க வந்த பெண்ணிடம் அந்த பொலிஸ் அதிகாரி மோசமான கேள்விகளை கேட்கும் காட்சிகள் வெளியாகின.

அந்த பெண்ணின் முகத்தையோ, அந்த அதிகாரியின் முகத்தையோ அந்த தொலைக்காட்சி வெளியிடவில்லை.

அந்த இளம்பெண் கனடாவின் பூர்வக்குடியினப் பெண் ஆவார். இந்த சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்றது.

அந்த இளம்பெண்ணை விசாரித்த அதிகாரி, உங்களை பாலியல் வன்புணர்வு செய்யும்போது அது உங்களை மகிழ்ச்சிப்படுத்தியதா என்பது போன்ற கேள்விகளை கேட்டார்.

அத்துடன் நிற்காமல், அந்த ஆண் செய்த செயலுக்கு உடன்படும் விதத்தில் உங்கள் உடல் விளைவுகளைக் காட்டியதா என்றும் கேட்டார்.

உடல் ரீதியாக நீங்கள் அவருக்கு உடன்படாமல் இருக்கலாம் ஆனால் மனதில் அப்படி நடந்திருக்கலாம் அல்லவா என்று அவர் கேட்க, இல்லை, நான் மிகவும் பயந்திருந்தேன் என்கிறார் அந்த இளம்பெண்.

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் பாலுறவு கொள்ள முயற்சிக்கும்போது, பெண் முழுமையாக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கடினம் அல்லவா என்றும் கேட்கிறார் அந்த பொலிஸ் அதிகாரி.

இந்த வீடியோவுக்கு, நேற்று கனடா எதிர்க்கட்சி தலைவர் உட்பட கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அந்த இளம்பெண்ணை விசாரித்த அதிகாரி கேள்வி கேட்ட விதம் முற்றிலும் தவறானது, பழமையான முறை மற்றும் காயப்படுத்தும் வகையிலானது என்று ஃபெடரல் பொது பாதுகாப்பு அமைச்சர் Ralph Goodale நேற்று கூறினார்.

பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட ஒருவர் கூட தங்கள் வழக்கு சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படாது என்றோ, அவர்கள் விசாரணையின்போது மீண்டும் தாக்குதலுக்குள்ளாவோம் என்றோ பயப்படக்கூடாது என்று கூறினார் அவர்.

அந்த வீடியோ தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றும் கோரமாக இருந்தது என்றும் கூறிய எதிர்க்கட்சி தலைவர் Scheer, அந்த பெண்ணை விசாரித்த விதம் அதிர்ச்சியூட்டுவதாகவும், உணர்ச்சியற்ற ஜடத்திடம் விசாரிப்பது போலவும் இருந்தது என்றார்.

வீடியோவை காண

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்