கியூபாவிலிருந்து கனடாவுக்கு பயணித்து பிரசவித்த தேள்: ஒரு அபூர்வ வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா

குறிப்பிட்ட சில விலங்குகளின் பிரசவத்தைக் காண்பது அபூர்வமாக இருக்கும் நிலையில், கியூபாவிலிருந்து கனடாவுக்கு பயணித்த ஒரு தேள் தனது குட்டிகளை முதுகில் சுமந்து பயணிக்கும் ஒரு அபூர்வ வீடியோ வெளியாகியுள்ளது.

அதுவும் கனடா போன்ற நாடுகளில் இத்தகைய காட்சிகளைக் காண்பது அபூர்வம்.

அப்படியிருக்கும் நிலையில் வான்கூவரில் Gail Hammond என்ற பெண், தனது சமையலறையில் தேள் ஒன்று நடமாடுவதைக் கண்டு, தைரியமாக அதைப் பிடித்து வன விலங்குகள் பூங்காவிடம் ஒப்படைத்தார்.

வான்கூவரில் இவ்வகை தேள்கள் கிடையாது, எனவே, தான் சமீபத்தில் கியூபாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு தேள் தனது பெட்டிகளில் ஒன்றில் ஏறி மறைந்து கொண்டிருக்கலாம் என்றும், அப்படிதான் அது கனடாவுக்கு வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார் Gail Hammond.

முதலில் அது ஒரு கொடிய விஷமுடைய தேள் என்று கருதிய வன விலங்குகள் பூங்கா ஊழியர்கள், பின்னர் அது குறைந்த அளவே விஷமுள்ள கியூபா தேள் என்று கண்டறிந்தனர். வன விலங்குகள் பூங்கா அதிகாரிகள் Gail Hammondஇன் பெயரையே அந்த தேளுக்கு வைத்துள்ளனர்.

தற்போது Gail என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தேள் சுமார் 20 குட்டிகளை ஈன்றுள்ளது.

தனது குட்டிகளை முதுகில் சுமந்தபடி வலம் வரும் Gailஐப் பார்க்கும் சிலர், அதன் முதுகில் கட்டிகள் இருப்பது போல் காணப்படுகிறது என்று அருவருப்பு காட்டினாலும், வேறு சிலர், ஆஹா எவ்வளவு அருமையான அம்மா, தனது பிள்ளைகளை முதுகில் சுமந்து வருகிறதே என வியக்கிறார்களாம்.

Gail தேள் குட்டி போட்டுள்ளதை கேள்விப்பட்ட Gail Hammond, தனக்கு அந்த தேள் கர்ப்பமாக இருப்பது தெரியாது என்றும், நல்ல வேளையாக அதை வன விலங்குகள் பூங்காவில் ஒப்படைத்து விட்டதாகவும், இல்லையென்றால், வீடு முழுவதும் தேள்கள் வலம் வந்து கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்