விமானத்தில் தூங்கிய கனேடிய பெண்மணி: பின்னர் நடந்த அதிர வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in கனடா

விமான பயணத்தினிடையே தூங்கிய கனேடிய பயணி ஒருவரை தனியாக தவிக்கவிட்டு, அந்த விமான ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட கனேடியரை, தொடர்புடைய விமான சேவை நிறுவனம் பலமுறை அழைத்து மன்னிப்பு கோரியிருந்தாலும், அந்த அதிர்ச்சியில் இருந்து தம்மால் மீளமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் டிஃபானி ஆடம்ஸ் என்பவர் ஏர் கனடா விமானத்தில் கியூபெக் சிட்டியில் இருந்து டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் வரை பயணம் செய்துள்ளார்.

வெறும் 90 நிமிடங்கள் கொண்ட இந்த பயணத்தினிடையே, டிஃபானி அயர்ந்து தூங்கியுள்ளார். அதன் பின்னர் அந்த விமானத்தில் நடந்த சம்பவமானது தமக்கு கவலை மற்றும் தூக்கமின்மையை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஃபானியின் இந்த அதிரவைக்கும் அனுபவத்தை அவரது தோழி ஒருவர் ஏர் கனடாவின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சம்பவத்தன்று அந்த விமானத்தில் பயணிகள் மிகவும் குறைவு என்பதால், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்துள்ளது.

இதனிடையே டிஃபானி ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்துள்ளார். திடீரென்று கண்விழித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

விமானம் அப்போது பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது. மட்டுமின்றி மிக அருகிலுள்ள முனையத்தில் இருந்து கொஞ்சம் தள்ளியே அந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.

தனது மொபைல் போனும் ஸ்விட்ச் ஒஃப் நிலையில் இருந்துள்ளது. விமானத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருள் மூடியிருந்தது.

மட்டுமின்றி, அந்த விமானத்தில் அப்போது அவர் மட்டுமே தனியாக இருந்துள்ளார். அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இறங்கிய அவர் விமானிகளின் இருக்கைக்கு சென்று ஒரு பிளாஷ் லைட் ஒன்றை எடுத்துள்ளார்.

அதன் வெட்டத்தில், முக்கிய கதவு வழியாக வெளியேற முயற்சித்துள்ளார். ஆனால் அங்கிருந்து தரையில் சென்று சேர படிகள் இல்லை.

சுமார் 40 முதல் 50 அடி உயரத்தில் இருந்து குதிப்பது ஒன்றே வழி என கருதி இருந்த நிலையில், வேறு எவரேனும் உதவிக்கு வருவார்களா என அந்த பிளாஷ் லைட் வைத்து முயற்சித்துள்ளார்.

இவரது முயற்சி வீண்போகவில்லை. நிறுத்தப்பட்டிருந்த விமானத்தினுள் இருந்து வெளிச்சம் ஒன்று நடமாடுவதை தொலைவில் இருந்து பார்த்த ஊழியர் ஒருவர், டிஃபானியின் உதவிக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து ஏர் கனடா ஊழியர்களால் அவரது குடியிருப்புக்கு வாகனம் ஒன்றில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் டிஃபானி.

மட்டுமின்றி, ஏர் கனடா நிர்வாகிகள் டிஃபானிக்கு தொலைபேசியில் அழைத்து மன்னிப்பும் கோரியுள்ளனர்.

மேலும், விமானத்தில் டிஃபானி மட்டும் தனியாக சிக்கியது எப்படி என்பது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்திற்கு பின்னர் தம்மால் சரிவர தூங்க முடிவதில்லை எனவும், அதில் இருந்து மீண்டு வருவதாகவும் டிஃபானி தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers