எண்ணெய் அல்ல இயற்கை போதும்: கனடா பிரதமரை நெருக்கும் பூர்வகுடிகள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் அல்பெர்ட்டா பகுதியில் எண்ணெய் குழாய்களின் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து அங்குள்ள பூர்வகுடிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கனடாவில் 1940 ஆம் ஆண்டு காலகட்டத்தின் இறுதியில், அல்பெர்ட்டா பகுதியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது.

இப் பகுதியில், பிட்டுமென் மற்றும் கச்சா எண்ணெய் மண் படிமங்களாக இருந்தன. எனவே, அதைப் பிரித்தெடுப்பது எளிதானதாகவும் இருந்தது. அதைத் தொடர்ந்து, புதிதாக எண்ணெய் நிறுவனங்கள் அல்பெர்ட்டா பகுதியில் கால் பதித்தன.

ஆனா,ல் அவர்களுக்கு ஒரு சிக்கல் இருந்தது. கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால், கடல்பகுதிதான் ஏற்றதாக இருக்கும்.

அதை ட்ரக்குகளில் கொண்டுசென்றால் நேர விரயம் ஆனது, செலவும் அதிகமானது. அதன் பின்னர்தான், எண்ணெய்க் குழாய் இதற்குச் சரியான தீர்வாக இருக்கும் என முடிவுசெய்யப்பட்டது.

அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 1953 ஆம் ஆண்டு காலகட்டத்தில் எண்ணெய்க் குழாய் பயன்பாட்டுக்கு வந்தது.

ட்ரான்ஸ் மவுன்டெயின் பைப்லைன் எனப்படும் இது, அல்பெர்ட்டா பகுதியிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரை வரைக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டுசெல்கிறது.

1150 கிலோ மீற்றர் தூரம்கொண்ட இந்தக் குழாயில், பம்ப்பிங் ஸ்டேஷன்களும் வழியெங்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது, இந்த குழாய்களின் விரிவாக்கத் திட்டத்துக்குத்தான் அனுமதியளித்திருக்கிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

அதன்படி, ஏற்கெனவே இருக்கும் குழாய்க்கு அருகில் கூடுதலாக இரண்டு எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்படும்.

இதன்மூலமாக 3 லட்சம் பேரல்களாக இருக்கும் இதன் கொள்ளளவு, 8 லட்சம் பேரல்களாக உயரும். இதனால் அரசுக்கு பொருளாதார பலன்கள் அதிகரிக்கும்.

ஆனால் பூர்வகுடிகள் இதன் மறுபக்கத்தைக் காட்டுகிறார்கள். ஏற்கெனவே இருக்கும் குழாயில் பல இடங்களில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கிறது.

அதுவே தீர்க்க முடியாத பிரச்னையாக இருக்கிறது. கூடுதலாக இந்தக் குழாய் பதித்தால், இன்னும் பல சிக்கல்கள் உருவாகும்.

முதலில் குழாய் பதிக்க நிலம் வேண்டும். அடுத்ததாக, அதிக அளவில் கச்சா எண்ணெய் கொண்டுசெல்லப்படும்போது, அது கடற்கரைப் பகுதியில் போக்குவரத்தை அதிகரிக்கும்.

அப்போது, அதற்கான கட்டமைப்புகளை அதிகப்படுத்தவேண்டியிருக்கும். ஏற்றுமதியும் அதிகமாகும் என்பதால், கடலில் கப்பல்களின் வரத்து அதிகமாகும்.

மறுபக்கம் அல்பெர்ட்டாவில் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும். அதன் காரணமாக அந்தப் பகுதியிலும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமாகும்.

இப்படிப் பல்வேறு காரணங்களால்தான் இந்த விரிவாக்கத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் ஃபர்ஸ்ட் நேஷன் என்ற கனடாவின் பூர்வ குடிகள். அவர்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துவருகின்றன. அவர்களின் எதிர்ப்பையெல்லாம் மீறி இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மையை அதிகப்படுத்தும் என இதை ஆதரிப்பவர்கள் கருத்துதெரிவித்துவருகிறார்கள்.

சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு எதுவும் வராதபடி குழாய் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துவருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்