பசி ஒருபக்கம், உதவி கேட்கவோ வெட்கம்: உதவிக்கரம் நீட்டும் கனேடிய இளம்பெண்!

Report Print Balamanuvelan in கனடா

பசி வாட்ட, இன்னொருவரிடம் சென்று உதவி கேட்கவோ வெட்கம் வாட்டி வதைக்க, தவிக்கும் மக்கள் கௌரவமாக உணவு உண்ணும் வகையில், உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் ஒரு கனேடிய இளம்பெண்.

கல்லூரியில் படிக்கும் நாட்களில் பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்த டொராண்டோவைச் சேர்ந்த மெலிசா ரஃபேலுக்கு, பசி என்றால் எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும்.

அந்த நாட்களில் கையில் பணம் இன்றி, மற்றவர்களிடம் சென்று உதவி கேட்கவும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களை நினைவுகூறும் மெலிசா, தன்னைப் போல் பசியால் யாரும் அவதிப்படக்கூடாது என்பதற்காக தனது வீட்டின் முன் சிறு உணவு சேமிப்பகம் ஒன்றை நிறுவியுள்ளார்.

ஒரு சிறிய ஷெல்ஃப் போல் இருக்கும் அந்த உணவு சேமிப்பகத்தில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து உணவை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தனது அயலகத்தார் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த திட்டத்தை தொடங்கியதாக தெரிவிக்கும் மெலிசா, இணையத்தில் ஒரு சிறு பிள்ளை தனது தாயின் உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதைக் கண்டு, தானும் அதேபோல் செய்ய விரும்பியதாக தெரிவிக்கிறார்.

உணவுடன், சோப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களும் இந்த சிறு சேமிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை அமெரிக்கப் பெண்ணான Jessica McClard என்பவர் தொடங்கியதாக தெரிகிறது.

Little Free Pantry என்னும் இந்த திட்டம் அமெரிக்காவில் மட்டுமின்றி இப்போது கனடாவிலும் பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

உணவு இன்றி தவிக்கும் பலர் இந்த சேமிப்பகங்களில் இருக்கும் உணவை எடுத்து பயன்படும் அதே நேரத்தில், தங்களிடம் இருக்கும் உபரி உணவுப்பொருட்களை இந்த சேமிப்பகங்களில் கொண்டு வைக்கிறார்கள் சிலர்.

வெளியே பணக்கார நாடுகளாக தெரியும் பல நாடுகளில், உணவு பற்றாக்குறை நிலவுவதைக் குறித்துக் கேள்விப்படுவதற்கு அதிசயமாகத்தான் இருக்கிறது.

கனடாவைப் பொருத்தவரை, 2018ஆம் ஆண்டு மார்ச் மாத கணக்கின்படி, இலவச உணவை பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தரும் உணவு வங்கிகளில், சுமார் 1.1 மில்லியன் முறை மக்கள் உணவுகளை பெற்றுச் சென்றுள்ளார்கள்.

அந்த மாதம் மட்டும் உணவு வங்கிகள், 5.7 மில்லியன் சாப்பாட்டு பொட்டலங்கள் மற்றும் சிற்றுண்டிப் பொட்டலங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்