மதுபான கடையில் ஒலித்த அலாரம்: விரைந்து வந்த பொலிசாருக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவம்!

Report Print Balamanuvelan in கனடா

ஹாலிபாக்சிலுள்ள மதுபான கடை ஒன்றில் திடீரென அலாரம் ஒலிக்க, விரைந்து வந்த பொலிசார் நடந்ததை அறிந்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

அந்த மதுபான கடையிலிருந்து ஒருவர் திகைத்துப்போய் வெளியே வந்து கொண்டிருந்தார். பொலிசார் அவரிடம், அவர் யார், என்ன நடந்தது என்று விசாரித்தனர். நோவா ஸ்கோஷியாவைச் சேர்ந்த அவரது பெயர் கவுரவ் அரோரா.

மதுபானம் வாங்குவதற்காக கடைக்குள் சென்ற கவுரவ், குளிர்பதன அறைக்குள் சென்று தனக்கு பிடித்த மதுபானத்தை தேர்வு செய்ய முயலும்போது திடீரென விளக்குகள் அணைந்துள்ளன.

மின்தடையாக இருக்கும், சற்று நேரத்தில் சரியாகிவிடும் என்று எண்ணிய கவுரவ், வெகு நேரமாகியும் மின்சாரம் வராமல் இருக்கவே, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்திருக்கிறார்.

அப்போதுதான் வாடிக்கையாளர்கள் எல்லோரும் சென்றுவிட்டதையும், கடை ஊழியர்கள் கடையை பூட்டி சென்றுவிட்டதையும் உணர்ந்துள்ளார் கவுரவ்.

சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அலாரம் ஒலித்ததைக் கேட்டு பொலிசார் வந்து பார்க்கும்போதுதான் நடந்ததை அறிந்து கொண்டுள்ளனர்.

வந்த பொலிசார் மட்டுமின்றி, விடயத்தைக் கேள்விப்பட்ட அனைவருமே விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

ஒருவர், ஆஹா, எவ்வளவு அரிய சந்தர்ப்பம், நம்மைச் சுற்றி அத்தனை விலை உயர்ந்த மதுபானங்கள், நானென்றால் ஒரு கை பார்த்திருப்பேன் என்கிறார். ஆனால் கவுரவ் எதையுமே தொடவில்லை...

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடை ஊழியர்கள் கடையை மூடுவது குறித்து ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தால் தான் வெளியே வந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

தகவல் அறிந்த மதுபான நிறுவன உரிமையாளர்கள், இதுவரை தங்கள் கடையில் இப்படி நடந்ததில்லை என்று தெரிவித்துள்ளதோடு, நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வருங்காலத்தில் கவுரவ் கூறியது போலவே கடை மூடும்போது அறிவிப்பு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்