கால்கரியைச் சேர்ந்த ரபிந்த் ஆனந்த் தனது நீண்ட நாள் கனவான பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கினார்.
அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் என்றாலும், அதன் டீலர் அது நல்ல நிலையில் இருப்பதாக சான்றளித்ததையடுத்து ஆனந்த் அந்த காரை வாங்கினார்.
தனது குடும்பத்துடன் கௌரவமாக பயணிக்க ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்கியதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஆனால் கார் வாங்கி சில மாதங்களே ஆன நிலையில், காரில் ஏதோ பிரச்சினை இருப்பதாக சமிக்ஞை கிடைத்தது.
உடனடியாக காரை கால்கரியிலுள்ள பி.எம்.டபிள்யூ சேவை நிறுவனத்துக்கு கொண்டு சென்றபோது, அவர்கள் காரை பரிசோதித்து விட்டு, மன்னிக்கவும் உங்கள் கார் எஞ்சின் பழுதடைந்துள்ளது என்று கூற, அதிர்ச்சியடைந்தார் ஆனந்த்.
பின்னர்தான் கார் சரியாக பராமரிக்கப்படாமலிருந்த விடயம் ஆனந்துக்கு தெரியவந்தது.
எஞ்சினை மாற்றிக் கொடுக்குமாறு பி.எம்.டபிள்யூ நிறுவனத்திடம் ஆனந்த் கோரிக்கை வைக்க, அதற்கு நிறுவனம் மறுத்து விட்டது.
வேண்டுமானால் காரை பழுது பார்ப்பதற்கு ஆகும் செலவில் 40 சதவிகிதத்தை வேண்டுமானால் தருகிறோம் என்று கடைசியாக நிறுவனம் ஒப்புக் கொண்டாலும், ஆனந்துக்கு மீதி செலவை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.
ஏனென்றால் கார் வாங்கிய லோனையே இன்னும் அவர் அடைத்தபாடில்லை.
எப்படியாவது காரை பழுது பார்ப்பதா அல்லது ஆசையாக வாங்கிய காரை விற்றுவிடுவதா என குழம்பிப் போயிருக்கிறார் ஆனந்த்.