கனடாவில் முடிவுக்கு வந்த தேடுதல் வேட்டை: குற்றவாளிகளின் சவப்பெட்டிகளுடன் பொலிசார் திரும்பும் காட்சிகள்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் மூன்றுபேரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடும் முயற்சி, அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டதையடுத்து முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்கரான Chynna Deese, அவரது அவுஸ்திரேலிய காதலர் Lucas Fowler மற்றும் வான்கூவர் தாவரவியலாளர் Leonard Dyck ஆகிய மூவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த Schmegelsky மற்றும் McLeod ஆகியோரின் உடல்கள் என கருதப்படும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த தகவல்கள் நேற்றே வெளியானாலும், முதல்முறையாக குற்றவாளிகள் மறைந்திருந்த இடத்தைக் காட்டும் வீடியோ, அவர்களது உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை பொலிசார் சுமந்து செல்லும் புகைப்படங்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

தலைமறைவாக இருந்த குற்றவாளிகளின் உடல்கள் மனிதோபாவின் கில்லாம் பகுதியில் நெல்சன் நதிக்கருகாமையில் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களிலிருந்து, குற்றவாளிகள் இருவரும் கடைசியாக மீன், பன்றிக்கறி மற்றும் ஆரஞ்சுப் பழங்களை உண்டிருப்பது தெரிய வந்தது.

கனடாவின் ஐந்து மாகாணங்களில் பொலிசாரை ஓட விட்டு அவர்கள் தப்பிய கார் ஒன்றை அவர்கள் தீ வைத்து கொளுத்தியிருந்தார்கள்.

அந்த எரிந்த நிலையிலிருந்த கார், ஒரு தூங்கும் பை, உணவுத் துகள்கள் மற்றும் அலுமினியத்தாலான ஒரு படகு ஆகியவை, குற்றவாளிகள் இருந்த இடத்தை பொலிசார் கண்டுபிடிக்க உதவியாக இருந்தன.

அத்துடன் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியான Clint Sawchuk என்பவர், நெல்சன் நதியில் நீல நிற தூங்கும் பை ஒன்று கிடப்பதைக் கண்டதையடுத்து, பொலிசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

எதனால் குற்றவாளிகள் இறந்தனர் என்பது உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே தெரியும் என்றாலும், அவர்கள் மறைந்திருந்த காட்டுப்பகுதியின் மோசமான சூழலே அவர்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

கிருமிகள் நிறைந்த அசுத்தமான நீரை குடித்தது, ஒவ்வாமையினால் ஏற்பட்ட அதிர்ச்சி, இரத்தம் குடிக்கும் ஈக்கள் முதல் பலவகை கரடிகள் என எது வேண்டுமானாலும் அவர்களது உயிரைக் குடித்திருக்கலாம்.

எப்படியோ 3,100 மைல்களுக்கு நீண்ட 15 நாள் தேடுதல் வேட்டை, சந்தேகத்துக்குரிய நபர்களின் உடல்கள் கிடைத்ததையடுத்து முடிவுக்கு வந்திருக்கிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்