கனடாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நபர் ஒருவரை சுட்டு கொன்ற கொலையாளி இரண்டு வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொரண்டோவில் உள்ள ஒரு வணிகவளாகத்தின் வாசலில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி லியோனர்ட் பினோக் (33) என்பவர் இரண்டு மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பாக விசாரித்த பொலிசார் இந்த கொலைக்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என கூறினார்கள்.
இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய ஒருவர் பெயர் அகில் வெய்ட் (24) என்றும் இன்னொருவர் குறித்து தெரியவில்லை என்றும் பொலிசார் தகவல் வெளியிட்டனர்.
இந்நிலையில் அகில் வெய்ட் கடந்த வாரம் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரண்டோ பொலிசார் நேற்று தெரிவித்துள்ளனர், இதோடு அவரை டொரண்டோவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.