உங்கள் குப்பைகளை எங்களுக்கு தாருங்கள்: கனடாவை கோரும் ஒரு கிராமம்!

Report Print Balamanuvelan in கனடா

பணக்கார நாடுகள் குப்பைகளை தங்கள் நாடுகளில் கொட்டுவதாக சில ஆசிய நாடுகள் புகார் கூறியுள்ள நிலையில், ஒரு கிராமம் கனடாவின் குப்பைகளை தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு கோரியுள்ளது.

அந்த கிராமம்? கனடா தங்கள் குப்பையை தங்கள் நாட்டில் கொட்டுவதாகக் கூறி பெரும் பிரச்சினையை பிலிப்பைன்ஸ் ஏற்படுத்தி, அது சர்வதேச செய்தியாக மாறிய நிலையில், கனடாவின் குப்பைகளை தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு இந்தோனேஷிய கிராமமான Bangun கோரியுள்ளது.

கனடாவிலிருந்து குப்பை இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிராக இந்தோனேஷிய அரசு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், அந்த நடவடிக்கைகள் Bangun கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

காரணம், விவசாயம் செய்து வருவாய் ஈட்டுவதைக் காட்டிலும் அதிக வருவாய் அந்த குப்பையிலிருந்து தங்களுக்கு கிடைப்பதாக Bangun கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

குப்பைகளை தங்கள் நாட்டுக்கு மற்ற நாடுகள் அனுப்புவதற்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் அமைப்புகள் பாராட்டி வரும் நிலையில், குப்பைகளை இறக்குமதி செய்வதை தடை செய்தால், அதற்கு பதிலாக தங்களுக்கு வருவாய்க்கு மாற்று ஏற்பாடு செய்து தருமாறு கேட்கின்றனர் Bangun கிராம மக்கள்.

3,600 பேர் வசிக்கும் Bangun கிராமத்தின் பெரும்பாலான வீடுகளின் பின்னாலும் முன்னாலும் குப்பை குவிந்து கிடக்க, பிள்ளைகள் அதன் மீது ஏறி விளையாடுகிறார்கள்.

குப்பையிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டே தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 17 முதல் 20 பேர் ஆண்டொன்றிற்கு புனித பயணம் செல்வதாக தெரிவிக்கிறார் Masud என்பவர்.

Salam (54) என்பவர், குப்பையிலிருந்து கிடைக்கும் பணத்தில், தான் பிள்ளைகளை படிக்க வைப்பதாகவும், ஒரு வீட்டை வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

எனக்கு ஒன்பது ஆடுகள் உள்ளன என்கிறார் Salam, அவ்வளவும் குப்பையிலிருந்து கிடைத்தது, அதாவது குப்பையிலிருந்து எடுத்த பிளாஸ்டிக், உலோகம் மற்றும் காகிதத்தை விற்றதில் கிடைத்தது என்கிறார் அவர்.

ஆனால் அந்த குப்பையினால் Bangun கிராமத்தின் நிலத்தடி நீரும், அருகிலுள்ள ஆற்று நீரும் கூட பிளாஸ்டிக் நுண் துகள்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள்.

ஓராண்டுக்குமுன் 283,000 டன் பிளாஸ்டிக் குப்பையை இறக்குமதி செய்த இந்தோனேஷியா, தற்போது கடலிலுள்ள பிளாஸ்டிக் குப்பையை குறைப்பதற்கான திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.

2020 வாக்கில் 70 சதவிகிதம் வரை பிளாஸ்டிக் குப்பையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ள இந்தோனேஷியா, அதற்காக 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அதற்காக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்