ஹொட்டலில் தங்க வசதியில்லாததால் கூடாரத்தில் தங்கிய கர்ப்பிணிப்பெண்: அப்படியும் செலவு 10,000 டொலர்கள்!

Report Print Balamanuvelan in கனடா

பிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதற்கு வசதியாக, மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஹொட்டல் எதிலாவது தங்கிக்கொள்ளலாம் என்று எண்ணி வீட்டை விட்டு வந்தார் ஒரு பெண்.

ஆனால், ஹொட்டல் அறையின் வாடகை தன்னால் செலுத்த இயலாத அளவுக்கு அதிகமாக இருந்ததால் கூடாரம் (Tent) ஒன்றில் அவர் தனது குடும்பத்துடன் தங்கிய சம்பவம் கனடாவில் நடைபெற்றுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Bella Coola என்ற பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் Shaiyena Currie.

Shaiyena தான் வாழும் இடத்திலிருந்து தான் பிரசவிக்கப்போகும் மருத்துவமனை ஐந்து மணி நேர பயணத்திற்கப்பால் இருப்பதால், தனது கர்ப்ப காலத்தின் இறுதி மாதத்தை மருத்துவமனை இருக்கும் Williams Lake என்ற நகரில் கழிக்க வேண்டும் என அவரது மருத்துவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் Williams Lake நகருக்கு வந்தபோதுதான் தெரிந்தது, ஹொட்டல் அறையின் வாடகையை செலுத்தும் வசதி தனக்கு இல்லை என்பது.

எனவே அப்பகுதியில் வாடகைக்கு கிடைக்கும் டெண்ட் ஒன்றில் செலவிட முடிவு செய்தார் அவர். ஆனால் அந்த டெண்டில் ஏற்கனவே பலர் தங்கியிருந்தனர்.

பத்து பேர் தங்கும் அந்த டெண்டில் Shaiyena, அவரது சகோதரி மற்றும் அவரது மகன் ஆகிய மூவரும் ஏற்கனவே இருந்தவர்களுடன் இணைந்துகொண்டனர்.

அந்த நேரம் குதிரைப்பந்தயம் நடக்கும் நேரம் என்பதால், எப்போது பார்த்தாலும் ஒரே சத்தம்.

டெண்டிற்குள்ளும் மக்கள் வருவதும் போவதுமாக வெகு கஷ்டத்துடனேயே செலவிட்டிருக்கிறார்கள் Shaiyenaவும் அவரது குடும்பமும்.

சரியான தூக்கம் இல்லாமல், குழந்தையையும் வைத்துக்கொண்டு சுமார் மூன்று வாரங்கள் அந்த டெண்டிற்குள் செலவிட்ட நிலையில், ஒரு அளவுக்கு மேல் பொறுக்க இயலாமல், ஹொட்டல் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார் Shaiyena.

அதிர்ஷ்டவசமாக சில நாட்களிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட, பணச் செலவிலிருந்தும், மீண்டும் டெண்டிற்கு செல்வதிலிருந்தும் தப்பியிருக்கிறார் Shaiyena.

அப்படியும் அவர் உணவுக்காகவும், தங்குவதற்காகவும், பிற செலவுகளுக்காகவும் 10,000 டொலர்கள் செலவிட்டுள்ளார்.

தங்கள் பகுதியில் பிரசவம் பார்க்கும் வசதிகள் கொண்ட ஒரு நல்ல மருத்துவமனை இருந்திருந்தால், அந்த தொகையை தனது குட்டிக்குழந்தை Octaviaவுக்காக செலவழித்திருந்திருக்கலாம் என்கிறார் Shaiyena.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்