நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளை சுமந்துவந்த கப்பலுக்கு பிரியாவிடை கொடுக்கும் கனேடிய நகரம்!

Report Print Balamanuvelan in கனடா

நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளை சுமந்து வந்து கனடாவின் வான்கூவர் தீவை அடைந்த கப்பலுக்கு பிரியாவிடை கொடுக்கிறது இத்தனை காலமாக அதை சுமந்து நின்ற கனேடிய நகரம்!

ஆம்! MV Sun Sea கப்பல், Annacis தீவிலிருந்து Nanaimoவிலுள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை கனேடிய பொறியியல் நிறுவனம் ஒன்றிற்கு கொடுத்திருந்தது.

2010ஆம் ஆண்டு, இலங்கை யுத்தத்திற்கு தப்பி நாட்டை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான தமிழர்களை சுமந்து கொண்டு அந்த கப்பல் கனடாவின் வான்கூவர் தீவை அடைந்தது.

அந்த கப்பல் பல ஆண்டுகளாக Queensboroughவுக்கு அருகிலுள்ள நீர் நிலை ஒன்றிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த கப்பலில் வந்த 492 தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்வது குறித்து கனேடிய மக்களுக்குள் தேசிய அளவில் வாதங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த கப்பலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில், அது பின்னர் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியின் சொத்தாக மாறியது.

52 மீற்றர் நீளமுடைய அந்த கப்பலை வாங்க யாரும் முன்வராததால், அதை உடைப்பதென கனடா அரசு முடிவு செய்தது.

ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு தாமதமாகிக் கொண்டே வந்தது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அந்த கப்பலில் ஆஸ்பெஸ்டாஸ் பாதரசம் உட்பட பல நச்சுப்பொருட்கள் இருப்பதாக ஆய்வொன்று கண்டறிந்தது.

அத்துடன் அந்த கப்பலை பராமரித்து பாதுகாப்பதற்காக ஒட்டாவாவுக்கு சுமார் 970,000 டொலர்கள் செலவு பிடித்தது.

இந்நிலையில், ஜூலை மாதம் 12ஆம் திகதி ஃபெடரல் அரசு அந்த கப்பலை உடைப்பதற்காக 4,151,070.39 டொலர்கள் ஒதுக்கியது.

தற்போது அந்த கப்பல் Annacis தீவிலிருந்து Nanaimoவிலுள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடைக்கப்பட இருக்கிறது.

அந்த கப்பலின் பாகங்கள் பிரிக்கப்பட்டு, உபயோகமான பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படும்.

ஆகத்து மாதம் 30 ஆம் திகதி, MV Sun Sea கப்பலை, தள்ளிச்செல்லும் படகுகள் சில, Annacis தீவிலிருந்து Nanaimoவிலுள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு கொண்டு செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers