கனடாவை உலுக்கிய டொரியன் புயல்... இருளில் மூழ்கிய பல லட்சம் குடியிருப்புகள்: பரிதவிப்பில் மக்கள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்காட்டியா மாகாணத்தின் ஹெலிபேக்ஸ் நகரில் ‘டொரியன்’ புயல் கரையைக் கடந்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையில் இருந்த மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கிவீசப்பட்டன.

புயலின் போது, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 20 மீற்றர் உயரத்துக்கு அலைகள் எழும்பின.

புயலை தொடர்ந்து, கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் தாக்கிய சில மணி நேரத்தில் மட்டும் 100 மில்லிமீட்டர் அளவு மழை பெய்ததாக கனடா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதற்கிடையில் புயல் காரணமாக ஹெலிபேக்ஸ் நகரில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இருப்பினும் டொரியன் புயலால் கனடாவில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

அதே வேளை புயல், மழை காரணமாக ஹெலிபேக்ஸ் நகரில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

முன்னதாக கரீபியன் தீவுக்கு அருகே உருவான ‘டொரியன்’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமசை பதம் பார்த்தது.

இந்த புயல் அந்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. மேலும் ‘டொரியன்’ புயலுக்கு பஹாமசில் 43 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers