மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கனேடியர்: ஹீரோவாக எழுந்த அந்த தருணம்!

Report Print Balamanuvelan in கனடா

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு கனேடியர், தனது நண்பர்கள் டோரியன் புயலில் சிக்கி தவிப்பதை அறிந்து, அது தான் செயலாற்ற வேண்டிய தருணம் என முடிவெடுத்தார்.

தந்தையை இழந்ததால் மன அழுத்தத்திற்குள் சென்ற பிரிட்டிஷ் கொலம்பியாவின் Kelownaவைச் சேர்ந்த Mike Carter, பஹாமாஸ் தீவுகளில் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை அறிந்தபோது, தனது மன அழுத்தத்தை உதறி விட்டு அவர்களில் சிலரையாவது காப்பாற்ற முடிவு செய்து ஹீரோவாக எழுந்துள்ளார்.

Mike Carterஇன் தூரத்து சொந்தக்காரர்கள் சிலர் 2000தில் பஹாமாஸ் தீவுக்கு இடம்பெயர்ந்தார்கள்.

அங்கே அவர்கள் ஒரு மதுபான விடுதியை அமைக்க Mike உதவியுள்ளார். அப்போது பஹாமாசில் Dexter Ferguson என்ற உள்ளூர்வாசியை சந்தித்திருக்கிறார் Mike.

நண்பர்களானதும், அவருக்கு அந்த மதுபான விடுதியிலேயே வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் Mike.

தற்போது பஹாமாஸ் தீவை டோரியன் புயல் தாக்கியதும் முதல் ஆளாக Dexterக்கு போன் செய்து, அவரது குடும்பம் பத்திரமாக இருக்கிறதா என்று விசாரித்துள்ளார் Mike.

தாங்கள் பத்திரமாக இருப்பதாக தெரிவித்த Dexter, ஆனால் தாங்கள் வீடு, பொருட்கள் எல்லாவற்றையும் இழந்து மின்சாரமும், தண்ணீரும் இன்றி தவிப்பதாக கூறியுள்ளார்.

தங்களை கொஞ்ச நாளைக்கு கனடாவிற்கு அழைத்து வந்து வைத்துக் கொள்ள முடியுமா என Dexter கேட்க, உடனடியாக களத்தில் இறங்கிவிட்டார் Mike.

Dexter குடும்பத்திற்கு படகு பயணத்திற்காக டிக்கெட்களை வாங்கிக் கொண்டு உடனே பஹாமாசுக்கு புறப்பட தயாராகி விட்டார் Mike.

ஆனால் படகு ஏறச் செல்லும்போதுதான் தெரிந்தது, அங்கே சுமார் 50,000 பேர் படகுக்காக காத்திருப்பது. வந்த படகில் ஏற அனைவரும் முட்டி மோதிக்கொள்ள, ஒரே கலவரமாகி, படகு போக்குவரத்தையே நிறுத்திவிட்டனர் அதிகாரிகள்.

திகைத்துப்போன Mike, உடனடியாக போனை எடுத்து, கிடைத்த பஹாமாஸ் தீவுவாசிகளின் எண்களுக்கெல்லாம் போன் செய்து, எல்லாரிடமும் தனது நண்பர்களை மீட்க உதவி கோரியிருக்கிறார்.

ஏழு மணி நேரம் ஆகி யாரும் உதவிக்கு வராத நிலையில், மீண்டும் மனச்சோர்வு ஆக்கிரமித்து விடுமோ என எண்ணிய நேரத்தில், பஹாமாசில் ஒரு ஹீரோ உதவிக்கு வந்திருக்கிறார்.

ஆம், ரோஸ்மேரி என்ற ஒரு பெண், தான் உதவுவதாக கூற, தனக்கு தெரிந்த ஒரு படகு மாலுமியை அவர் சந்தித்து தான் பணம் தருவதாக கூறி உதவி கோர, Mario Moxy என்ற அந்த மாலுமியிடம் படகு இல்லாமல், அவர் ஒருவரின் படகை ரோஸ்மேரியின் பண உதவியுடன் வாங்கிக் கொண்டு புறப்பட்டிருக்கிறார்.

அதற்குள் பக்காவாக திட்டமிட்டு, நண்பர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து காத்திருக்கச் சொன்ன Mike, GPS உதவியுடன், ரோஸ்மேரிக்கு அந்த இடம் குறித்த தகவல்களை அனுப்ப, ரோஸ்மேரி அந்த தகவல்களை மாலுமிக்கு அனுப்ப, Mario சென்று Mikeஇன் நண்பர்களை அழைத்துச் சென்று, பத்திரமாக பஹாமாசின் தலைநகரான Nassauவில் கொண்டு சேர்த்திருக்கிறார்.

திங்களன்று மாலை கனடா வந்து இறங்கியிருக்கிறார்கள் Dexter குடும்பத்தினர். மன அழுத்தத்தால் எப்போதும் கண்ணீரில் மூழ்கியிருந்த தனக்கு, இப்போது தனது நண்பர்களை பத்திரமாக கொண்டு வந்ததில் மகிழ்ச்சியில் அழுகை தெரிவிக்கிறார் Mike.

அத்துடன் நிற்கவில்லை Mike, எப்படியாவது இன்னும் ஐந்து குடும்பங்களையாவது பஹாமாசில் இருந்து மீட்டுக் கொண்டு வந்துவிடவேண்டும்.

அவர்களுக்கு கனடாவில் புகலிடம் பெற்றுக் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் ஒரு கனேடியனாக இருந்து என்ன பிரயோஜனம் என்கிறார் Mike.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்