கொலை செய்துவிட்டு படகில் தப்பியோட திட்டமிட்ட கனேடிய சீரியல் கில்லர்கள்: சிக்கியதால் தற்கொலை!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் மூன்று பேரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கனேடிய சீரியல் கில்லர்கள் இருவர், தற்கொலை செய்துகொள்ளும் முன் பதிவு செய்த ஆறு வீடியோக்களிலிருந்த மேலும் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த தாவரவியலாளரான Leonard Dyck, அமெரிக்க இளம்பெண் Chynna Deese மற்றும் அவரது அவுஸ்திரேலிய காதலரான Lucas Fowler என்னும் மூவர் கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்கள்.

அவர்களை கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் Kam McLeod மற்றும் Bryer Schmegelsky என்னும் இரு இளைஞர்களை பொலிசார் தீவிரமாக தேடிவந்தார்கள்.

தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின், நெல்சன் நதிக்கருகில் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட, அப்பகுதிக்கு சென்ற பொலிசார் McLeod மற்றும் Bryer இருவரும் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுபிடித்தனர்.

அவர்களுக்கருகில் கொலைக்கும் தற்கொலைக்கும் பயன்படுத்திய துப்பாக்கிகளும், வீடியோ கமெரா ஒன்றும் கிடைத்தன.

அந்த வீடியோ கமெராவில் ஆறு வீடியோக்கள் பதிவாகியிருந்ததாக தற்போது பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் ஒரு நிமிடம் ஓடும் ஒரு வீடியோவில், தாங்கள்தான் மூன்று கொலைகளுக்கும் பொறுப்பு எனவும், Hudson Bay என்ற இடத்திற்கு நடந்தே சென்று, அங்கிருந்து படகு ஒன்றை கடத்தி ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் செல்வது என முடிவு செய்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் இனி தப்ப முடியாது, சிக்கிக்கொள்வோம் என தெரியவரவும், தங்கள் கடைசி ஆசைகள் என்ன, தங்கள் இறுதிச்சடங்கு எப்படி நடக்கவேண்டும் என்பதுபோன்ற விடயங்களை மற்றொரு வீடியோவில் அவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

தாங்கள் செய்த கொலைகளுக்காக சற்றும் வருந்தாத கொலையாளிகள் இருவரும், இன்னும் சிலரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், தாங்களும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததும் மற்றொரு வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி McLeod, Bryerஐ சுட்டுக்கொன்றுவிட்டு, தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

தங்கள் உடல் தகனம் செய்யப்படவேண்டும் என்பதை அவர்கள் தங்கள் கடைசி வீடியோவில் பதிவுசெய்துள்ளதாகவும், அந்த வீடியோ கொலையாளிகளின் குடும்பத்தாருக்கு காட்டப்பட்டதாகவும் கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவை குழப்பிக்கொண்டிருந்த தொடர் கொலைகள் தொடர்பாக பல விடயங்கள் புரியாமலே இருந்த நிலையில், தற்போது பொலிசார் வெளியிட்டுள்ள சில தகவல்கள் சில கேள்விகளுக்காவது பதில் கிடைக்க உதவியுள்ளன.

என்றாலும், இதுவரை கொலையாளிகள் ஏன் அந்த மூவரையும் கொலை செய்தார்கள் என்ற கேள்விக்கான பதில் மட்டும் இன்னமும் கிடைக்காமல் தவித்து வரும் கொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தாரும், எதனால் இப்படி நடந்தது என குழம்பி நிற்கும் கொலை செய்தவர்களின் குடும்பத்தாரும், தங்கள் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்