இளம்பெண்ணை கத்தியால் குத்திய பெண்: காப்பாற்ற துணிந்து களமிறங்கிய கனேடியர்கள்!

Report Print Balamanuvelan in கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இளம்பெண் ஒருவரை திடீரென மற்றொரு பெண் கத்தியால் குத்த, சற்றும் தயங்காமல் அவரை காப்பாற்ற துணிந்து களமிறங்கியிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் நெல்சன் பகுதியில் உள்ள தெரு ஒன்றில் ரமிதா என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தியிருக்கிறார் Fiona Jane Coyle (49) என்ற பெண்.

யாராவது ஒருவருக்கு காயம்பட்டுவிட்டால் சுற்றி நின்று மொபைலில் வீடியோ எடுக்கும் இந்த காலத்திலும், அந்த பெண்ணை காப்பாற்ற துணிந்திருக்கிறார்கள் நெல்சன் பகுதி மக்கள்.

Niomi Starspires என்ற உள்ளூர் பெண் ஒரு பெண் மற்றொரு பெண்ணைக் குத்துவதை கவனித்திருக்கிறார்.

அதே நேரத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த Adrian Moyls என்பவர், சிக்னலில் சிவப்பு விளக்கைக் கண்டு வண்டியை நிறுத்தும்போது அவரும் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஏதோ பிரச்னை என்பதை கவனித்திருக்கிறார்.

இருவரும் ஆளுக்கொரு திசையிலிருந்து அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக ஓட, அதற்குள் அப்பகுதியில் புத்தக்கடை வைத்திருந்த Stephen Fowlerஎன்பவர் விரைந்து சென்று கத்தியால் குத்திய அந்த பெண்ணின் கைகளை பின்னாலிருந்து பிடித்திருக்கிறார்.

பார்ப்பதற்கு குட்டியாக இருந்த அந்த பெண், மிகவும் வலிமையாக இருந்ததாக தெரிவிக்கும் Stephen, அவரை பிடிக்க முயலும்போது, அவரது காலிலும் அந்த பெண் கத்தியால் குத்தியிருக்கிறார், என்றாலும் அவர் Moyls உதவியுடன், அந்த பெண்ணின் கையிலிருந்த கத்தியை தட்டிவிட்டு விட்டு, அவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.

Moylsம் Starspiresம் குத்தப்பட்ட பெண் மீது கவனம் செலுத்தி, அவருக்கு ஏற்பட்டிருந்த இரத்தப்போக்கை நிறுத்தும் முயற்சியில் இறங்கியிருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட Fiona என்ற அந்த பெண் மற்றவர்களை காயப்படுத்தும்போது, அவருக்கும் அவர் வைத்திருந்த கத்தியால் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.

அவரை கைது செய்த பொலிசார், அவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள்.

Fiona மீது கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் ஆயுதம் கொண்டு தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர் எதற்காக ரமிதாவை தாக்கினர் என்பது இதுவரை தெரியவரவில்லை. கைகளிலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டிருந்த ரமீதாவுக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியதோடு, நுரையீரலிலும் சில பிரச்சினைகளுக்காக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

ரமிதாவின் துணைவரான Michael MacFadden, தனது காதலியை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் துணிந்து உதவிக்கு வந்த அப்பகுதி மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். ரமிதா இன்று உயிரோடு இருக்கிறாரென்றால் அதற்கு அவர்கள்தான் காரணம் என நெகிழ்கிறார் Michael.

Bill Metcalfe/Nelson Star

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்