இந்தியாவில் மாயமான ரொரன்ரோ பேராசிரியர் புகைப்படம் வெளியானது: தவிப்பில் குடும்பம்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இந்தியாவில் பனிச்சரிவில் சிக்கி மாயமான சம்பவம் அவரது உறவினர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான 37 வயது Peter Wittek என்பவரே இமயமலை சிகரமான மவுண்ட் திரிசூல் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி மாயமானவர்.

ஞாயிறன்று 5 நண்பர்களுடன் இவர் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள இமயமலை சிகரமான மவுண்ட் திரிசூலில் சென்று சேர்ந்துள்ளார்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,900 மீற்றர் உயரே அமைந்துள்ள அந்த பகுதியில் பேராசிரியர் Peter Wittek ஓய்வெடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பீற்றருடன் இன்னொருவரும் சிக்கியுள்ளார்.

ஆனால் அந்த நபர் பனிச்சரிவு ஓய்ந்த பின்னர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பேராசிரியர் பீற்றரின் நிலை தொடர்பில் ஏமாற்றமே மிஞ்சியதாக அவரது சகோதரர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Global News

பீற்றருடன் மலேற சென்றவர்கள் குழுவானது வியட்நாம், மொரீஷியஸ், சிங்கப்பூர் மற்றும் ஹங்கேரி நாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

பனிச்சரிவை அடுத்து அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அவசர உதவி மற்றும் மீட்பு குழுவினர் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று சேர மேலும் இரு தினங்களாகும் என கூறப்படுகிறது.

ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் பணியை தொடர்ந்துள்ள மீட்பு குழுவினர், தற்போது மோசமான காலநிலை காரணமாக அந்த முயற்சியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எஞ்சிய ஐந்து மலையேறும் ஆர்வலர்களும் தற்போது தரை தளத்தில் உள்ள முகாமிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், சொந்த நாட்டுக்கு திரும்ப காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்