புலம்பெயர்வோருக்காக கனடாவில் அறிமுகம் செய்யப்படும் சர்ச்சைக்குரிய தேர்வு!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் புலம்பெயர்வோருக்காக சர்ச்சைக்குரிய தேர்வு ஒன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

2020ஆம் ஆண்டில் 44,500 புலம்பெயர்வோரை வரவேற்க இருப்பதாக தெரிவித்துள்ள அதே நேரத்தில் இந்த சர்ச்சைக்குரிய தேர்வும் அறிமுகம் செய்யப்படுகிறது.

கனடாவின் அதிகம் பிரெஞ்சு மொழி பேசப்படும் மாகாணமான கியூபெக்கில் குடியேற விரும்பும் பொருளாதார புலம்பெயர்வோர், சர்ச்சைக்குரிய ‘values test’ என்னும் தேர்வு ஒன்றில் தேர்ச்சியடைய வேண்டியிருக்கும் என நேற்று அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.

அது தொடர்பாக பேசிய கியூபெக்கின் பிரீமியரான Francois Legault, ஒருவர் எங்கு வாழ விரும்புகிறாரோ, அந்த சமுதாயத்தின் பண்பு நலன்களை அவர் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்று நான் எண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுக்கு ஆதரவு, பாலின சமத்துவம் மற்றும் அரசு ஊழியர்கள் முகத்திரை, தலைப்பாகை போன்ற மத அடையாளங்களை அணிவதை தடை செய்யும் ஒரு புதிய மதச்சார்பின்மைச் சட்டம் ஆகியவை அவற்றில் அடங்கும் என்றார் அவர்.

2020ஆம் ஆண்டில் 44,500 புலம்பெயர்வோரை வரவேற்க இருப்பதாக அறிவித்துள்ள கியூபெக்கின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Simon Jolin-Barrette, இந்த தேர்வை அறிமுகம் செய்வதன் நோக்கம், புலம்பெயர்வோர் கனடா மக்களோடு ஒருமித்து வாழ்வதை மேம்படுத்துவதாகும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் துவங்க உள்ளது. தேர்வு எழுதுவோர், தேர்வில் கேட்கப்படும் 20 கேள்விகளில் 15க்காவது சரியாக விடையளிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த தேர்வு அகதிகளுக்கானது அல்ல.

இந்த தேர்வு, எதிர்காலத்தில் புலம்பெயர இருப்போருக்கு எதிர்மறையான ஒரு எண்ணத்தைக் கொடுக்கும் என விமர்சகர்கள் விமர்சித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இதுபோன்ற தேர்வுகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் Jolin-Barrette.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்