கனடாவில் குடியேற விரும்புவர்கள் நிரந்தர வசிப்புரிமை பெற என்ன செய்ய வேண்டும்?

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் அமையவிருக்கும் நிலையில், இங்கு குடியேற விரும்புபவர்கள் நிரந்தர வசிப்புரிமை பெற செய்ய வேண்டியது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய பொதுச்சபைக்கு மொத்தமுள்ள 388 தொகுதிகளில் 157 தொகுதிகளை கைப்பற்றிய லிபரல் கட்சி சிறுபான்மை ஆட்சியை அமைக்க உள்ளது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி அடுத்த மூன்றாண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு நிரந்தர வசிப்புரிமை வழங்குவதாக வெளியான அறிவிப்பு அமுலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடக்கத்தில் பல்வேறு நாடுகளின் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை வரவேற்ற கனடா, தற்போது சர்வதேச அளவில் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் முன்னேறியவர்களும் குடிபெயர முன்வரும் நாடாக உருவெடுத்துள்ளது.

கனடாவில் குடியேற விரும்புவர்களுக்கு 'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' என்ற புள்ளி அடிப்படையிலான திட்டத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு, கனடாவில் நிரந்தர வசிப்புரிமை (Permanent Residency) வழங்கப்படும். அதன் மூலம், வாக்குரிமை நீங்கலாக கனேடிய குடிமக்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' திட்டத்தின்படி, தெரிவு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் 92,231 பேர் கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்றுள்ளனர். இது கடந்த 2017ஆம் ஆண்டை விட 41% அதிகம்.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும், 'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' திட்டத்தின்கீழ், கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெறுபவர்களின் பட்டியலில் முதலிடத்தை பெற்று வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017ஐ விட கடந்த ஆண்டு 5,367 அதிகரித்து 41,675 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது.

இரண்டாவது இடத்தை பெற்றுள்ள சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வித்தியாசம் 35,427 பேர்.

இந்த நிலையில், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் கனடாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு குடியேற்ற அனுமதி வழங்குவதற்கு கனேடிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில், கனடாவில் பெரும்பான்மை கொண்ட அரசை அமைக்கும் வாய்ப்பை ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி இழந்துள்ளது.

இதன் மூலம், சிறுபான்மை லிபரல் அரசு, தனது திட்டங்களை எதிர்க்கட்சிகளின் ஆதரவு இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்படும் முட்டுக்கட்டையை ஜஸ்டின் ட்ரூடோவால் எப்படி சமாளிக்க முடியும் என்று என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு பதிலளித்த இலங்கையரான நேரு குணரத்தினம், "கனடாவின் பிரதான கட்சிகளான லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் ஆகியவை குடியேற்றத்தில் ஒத்த கருத்தை கொண்டுள்ளன.

தற்போது கனடாவுக்கு குடியேறிகள் வருவதற்கு முக்கிய வழியாக உள்ள 'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' முறையை கன்சர்வேட்டிவ் கட்சி தலைமையிலான அரசுதான் 2015இல் அறிமுகப்படுத்தியது.

பின்பு ஆட்சிக்கு வந்த லிபரல் கட்சி அதே முறையின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் முன்னெப்போதுமில்லாத அளவில் குடியேறிகளை வரவேற்று வருகிறது.

அதே நிலையில், கனடாவில் குடியேறிகளுக்கு எதிரான கருத்து கொண்ட புதிதாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பீப்பிள்ஸ் பார்ட்டி ஆஃப் கனடா கட்சியின் தலைவர் மாக்சிம் பெர்னியர் கூட இந்த தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.

இதன் மூலம் கனடாவில் குடியேற்றத்தின் முக்கியத்துவத்தில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயும், வாக்காளர்களுக்கிடையேயும் நிலவும் ஒற்றுமையை புரிந்துகொள்ள முடியும் என நேரு குணரத்தினம் விளக்கமளித்துள்ளார்.

கனடா குடியேறிகளை வரவேற்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் பரவலாக கூறப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வரும் பிறப்பு விகிதமும், நாட்டில் அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கையுமே முதலாவது காரணம்.

பரப்பளவில் ரஷ்யாவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடா தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதியை மட்டுமே கொண்டுள்ளது.

இந்த பிரச்னையை குடியேற்றத்தை அனுமதிப்பதன் மூலம் ஈடுகட்டும் பணியை ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும், கனடா கடந்த 20 ஆண்டு காலத்திற்கும் அதிகமாக திறம்பட மேற்கொண்டு வருகிறது.

இரண்டாவதாக, கனடாவில் மக்கள் தொகை அதிகரிப்பதால் சேவைகளின் தேவையும் பெருகி வருகிறது. அதை நிறைவு செய்வதற்கு தேவையான பணியாட்களின் பற்றாற்குறையை ஈடுகட்டுவதற்காகவும், வெளிநாட்டினரை கனடா வரவேற்கிறது.

மூன்றாவதாக, தகுதிவாய்ந்த குடியேறிகள் கனடாவுக்கு வந்து புதிய தொழில்களை தொடங்குவதாலும், புதிய வேலைவாய்ப்புகளை பெருக்குவதினாலும், கல்வி போன்றவற்றில் முதலீடு செய்வதினாலும் நாட்டின் பொருளாதாரம் புதிய எல்லைகளை நோக்கி பயணிப்பதாக கருதப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்