என் தாய்தான் என்னுடைய பலம்: யுத்தத்துக்கு தப்பி இலங்கையிலிருந்து வெளியேறிய ஒரு தமிழரின் வெற்றிக்கதை!

Report Print Balamanuvelan in கனடா

லோகதாசன் தாஸ் தர்மதுரை, பள்ளி இறுதி வகுப்பில் ஆங்கில இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றதே பெரிய சாதனை. அப்படியிருக்கும்போது, தான் ஒரு எழுத்தாளராவார் என்று அவர் கனவிலும் எண்ணிப் பார்த்ததில்லை.

ஆனால், தனது கதையை உலகுக்கு சொல்வதற்காக எழுத்தாளராக முடிவு செய்தார் அவர்.

இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள சங்கத்தானை என்ற கிராமத்தில் பிறந்த தாஸ், 1985ஆம் ஆண்டு தனது 18ஆவது வயதில் தனது குடும்பம் இலங்கையில் இருக்க, யுத்தத்துக்கு தப்பி, ஒரு நல்ல வாழ்வை அமைத்துக்கொள்ளும் முயற்சியில் நாட்டை விட்டு வெளியேறினார்.

முதலில் ஜேர்மனியைச் சென்றடைந்த தாஸ், அங்கிருந்து பிரான்சுக்குள் கடத்தப்பட்டார்.

அங்கிருந்து போலி பாஸ்போர்ட்டில் கனடாவுக்குள் நுழையும் முயற்சியில் பொலிசாரிடம் சிக்கி சிறையிலடைக்கப்பட்டார்.

ஆனால் பிரான்சிலிருந்த அவரது அண்ணன் அவரை ஜாமீனில் எடுக்க, பிரித்தானியாவைச் சென்றடைந்தார் தாஸ்.

canadianimmigrant.ca
1986இல் மற்றொரு போலி பாஸ்போர்ட்டுடன் வெற்றிகரமாக கனடாவை அடைந்தார்.

இந்த நீண்ட பயணத்தின்போது, தப்பிப் பிழைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன் என்று கூறும் தாஸ், ஐரோப்பா வழியே பயணிக்கும்போது, சில நேரங்களில் அகதிகள் முகாமிலும், சில நேரங்களில் சர்வதேச எல்லைகள் வழியாக கடத்தப்பட்டும், போதை கடத்தல்காரர்களுடனும், சிறையிலடைக்கப்பட்டும், ஏதோ ஒரு கற்பனைப் பெயருடன் பயணித்துக்கொண்டிருந்தேன் என்கிறார்.

அந்த நீண்ட பயணம் முழுவதும் எனக்கு பலமாக இருந்தது என் தாய்தான், அவர்தான் என்னுடைய பலம், என்னுடைய வாழ்க்கையின் ஒரே குறிக்கோள், முன்னர் நான் வாழ்ந்த அதே வாழ்வை மீண்டும் கட்டி எழுப்பவேண்டும், எனது தாயையும் உடன்பிறந்தோரையும் மீண்டும் பார்க்கவேண்டும் என்பதாகத்தான் இருந்தது என்று கூறும் தாஸ், என் தாயை எண்ணும்போதெல்லாம், இழந்த பலனை திரும்பப் பெற்றுக்கொண்டேன் என்கிறார்.

கனடாவில் வேலை உரிமம் பெற்ற தாஸ், உணவகம் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்தார்.

வேலை செய்துகொண்டே, படிக்கவும் செய்தார், பட்டமும் பெற்றார், ஆங்கிலம் கடினம் என்பதால் அன்று கணினி அறிவியலை தேர்ந்தெடுத்த தாஸ், இன்று ஒரு ஆங்கில எழுத்தாளராக உயர்ந்திருக்கிறார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் பணி கிடைத்தாலும், படிக்கும்போதே தன் தாயையும் உடன்பிறந்தோரையும், பின்னர் பிரான்சில் தனக்கு உதவிய அண்ணனையும் கனடாவுக்கு வரவழைத்துவிட்டார்.

தங்களுக்கு ஆதரவளித்த கனடா, தொடர்ந்து அகதிகளுக்கும் புலம்பெயர்வோருக்கும் ஆதரவளிக்க வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவிக்கிறார் தாஸ். தான் அனுபவித்த துயரங்களை ஒரு புத்தகமாக எழுதவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, எழுதத் தொடங்கினார்.

எழுத எழுத, மனதை அழுத்திக் கொண்டிருந்த விடயங்கள் மூளையிலிருந்து காகிதத்துக்கு மாற, மனம் எளிதானது போல் உணர்ந்ததாக தெரிவிக்கிறார். பணி ஓய்வை எதிர்பார்க்கும் தாஸ், அதன் பின் தொடர்ந்து எழுத விரும்புகிறார்.

எனது கதையை தமிழ் சமுதாயத்துக்கு சொல்லவேண்டும், தமிழ் கனேடியன் என்பதில் நான் பெருமையடைகிறேன் என்று கூறும் தாஸ், கனடாவை தனது சொந்த நாடாக கருதுவதாகத் தெரிவிக்கிறார்.

ஒரு புதிய வாழ்வைத் தேடி ஒவ்வொரு நாடாக செல்லும்போது, சிறைகளிலும், அகதி முகாம்களிலும்தான், தான் போய் சிக்கியதாகவும், கனடா வந்ததும், தன்னை அவர்கள் ஒரு மனிதனாக மதித்து உண்மையாகவே வரவேற்றதாகவும், கனடா விமான நிலையத்தில் கால் வைத்ததும், கனடாவுக்கு உங்களை வரவேற்கிறோம் என்று அலுவலர் ஒருவர் இன்முகத்துடன் கூறியபோது, இதுதான் எனது சொந்த நாடு என எனக்குள் கூறிக்கொண்டேன் என்கிறார் தாஸ்.

கனடா எனக்கு கல்வி கொடுத்தது, வேலை கொடுத்தது, எனது குடும்பத்தை கவனித்துக்கொள்ளமுடிகிறது, என்னை மனதார வரவேற்ற கனடாவுக்கு நன்றி என்கிறார் தாஸ்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்