கனடாவில் பணிபுரிந்துவரும் மருத்துவர் ஒருவர் மீது இரண்டு பெண்கள் புகார் தெரிவித்துள்ளதையடுத்து அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நீண்ட காலம் மகப்பேறு மற்றும் தாய் சேய் நல மருத்துவராக பணியாற்றிய மணிவாசன் மூட்லி என்பவர், பின்னர் கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள Cape Breton மருத்துவமனையில் இணைந்தார்.
இந்நிலையில் அவர் மீது இரண்டு கனேடிய பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு பெண் தன் உடலை மணிவாசன் தேவையின்றி வர்ணித்ததாகவும், பாலியல் ரீதியில் அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்ததாகவும், பாலியல் ரீதியிலான கேள்விகள் கேட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெண்ணுக்கு தேவையில்லாமல் இனப்பெருக்க உறுப்புக்குள் சோதனை செய்ததாகவும், அவரது உள்ளாடை அழகாக இருப்பதாக வர்ணித்ததாகவும், அவர் எங்கே வாழ்கிறார் என்பது தனக்கு தெரியும் என்று கூறியதாகவும், மருத்துவ விதிகளை மீறி அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்களைத் தொடர்ந்து மணிவாசனுக்கு சில இடைக்கால தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதாவது பெண் நோயாளிகளை அவர் சந்திக்கும்போது, அவருடன் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்பதுபோன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம், நோவா ஸ்கோஷியா மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான கல்லூரி, அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள உள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மணிவாசன், குற்றம் சாட்டியவர்கள் மீது வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.