கனடாவில் சரமாரியாக தாக்கப்பட்ட தமிழ் மாணவி: பெற்றோருக்கு வெளிவிவகார அமைச்சர் உறுதி

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் தமிழக மாணவி மர்ம நபரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் கனடா செல்ல உடனே விசா வழங்க வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த 23 வயதான ராச்சல் ஆல்பெர்ட் என்ற கல்லூரி மாணவி கனடாவில் உள்ள யார்க் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு ரொறன்ரோ பகுதியில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் அருகாமையில் நடந்து சென்றுகொண்டிருந்த ராச்சல் ஆல்பெர்ட்டை மர்ம நபர் வழி மறித்திருக்கிறார்.

மட்டுமின்றி தனது கையில் இருந்த கத்தியால் மாணவியின் கழுத்துப் பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவி அங்கிருந்து தப்பித்து அருகாமையில் உள்ள மருத்துவ மையத்திற்கு விரைந்துள்ளார்.

உயிருக்குப் போராடிய நிலையில் வந்த மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ மையம் பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

தற்போது அந்த மாணவி உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ரொறன்ரோ பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் தாக்குதல் நடத்திய நபரின் அங்க அடையாளம், அணிந்திருந்த உடை மற்றும் அணிகலன்களை பகிர்ந்து, அவர் தொடர்பாக தகவலை தெரிவிக்கும்படி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை ரொனால்ட் என்ற நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, தனது அன்பிற்குரிய ராச்சல் ஆல்பெர்ட்டுக்கு உதவி புரிய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அத்துடன் ராச்சலின் குடும்பத்தினர் நீலகிரியில் உள்ள கூனூரில் வசிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

குறித்த தகவல் தெரியவந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், இந்திய மாணவி ராச்சல் ஆல்பெர்ட், ரொறன்ரோவில் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கு உடனே விசா கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய வெளிவிவகார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மாணவியின் குடும்பத்தினர் உடனே குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்