வீட்டு வாசலிலிருந்த பார்சலை திருடிச் சென்ற இளம்பெண்: சுற்றி வளைத்த பொலிசாரைக் கண்டு அதிர்ந்த வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா
698Shares

ஒரு வீட்டு வாசலிலிருந்த பார்சல் ஒன்றை கமுக்கமாக தூக்கிச் சென்ற ஒரு இளம்பெண், மூன்று பொலிஸ் கார்கள் தன்னைச் சுற்றி வளைத்ததைக் கண்டு அதிர்ந்தார்.

கனடாவின் ஆல்பர்ட்டாவின் தலைநகரான எட்மண்டனில் உள்ள தெரு ஒன்றில் நடந்து வந்த ஒரு இளம்பெண், அக்கம் பக்கம் பார்த்துவிட்டு வீடு ஒன்றின் முன் இருந்த பார்சல் ஒன்றை நைசாக தூக்கிக்கொண்டு நடையைக் கட்டினார்.

அவர் அந்த தெருவின் முனையைக் கூட கடந்திருக்கமாட்டார், அதற்குள் வேகமாக வந்த ஒரு கார் அவரை வழி மறித்தபடி நின்றது.

ஒன்றும் புரியாமல் திகைத்த அந்த இளம்பெண் அங்கிருந்து நகர முயல, மேலும் இரண்டு கார்கள் அவர் அருகே வந்து நிற்க, அதிலிருந்து துப்பாக்கிகளுடன் இறங்கிய சிலர், அந்த பார்சலை கீழே வைத்துவிட்டு முழங்காலிடும்படி அந்த பெண்ணுக்கு உத்தரவிட்டார்கள்.

அப்புறம்தான் தெரிந்தது, அவர்கள் சாதாரண உடையில் வந்த பொலிசார் என்பதும் தன்னை பிடிக்க வைத்த வலையில் தான் சிக்கிவிட்டதும்.

கனடாவில், பார்சல்களை டெலிவரி செய்வோர், அவற்றை வீட்டு வாசல் முன்பு வைத்துவிட்டு செல்வதுண்டு.

அப்படி வைக்கப்படும் பார்சல்களை சிலர் யாருக்கும் தெரியாமல் திருடிச் சென்று விடுவதுண்டு.

அப்படிப்பட்ட திருடர்களை Porch pirate என்று அழைப்பார்கள். அதன்படி, அந்த பகுதியில் யாரோ ஒருவர் பார்சல்களை திருடி செல்வதாக புகார் வந்ததையடுத்து, பொலிசார் அந்த நபரை பிடிக்க வலை விரித்திருக்கிறார்கள்.

ஒரு பார்சலை, ஒரு கமெரா பொருத்தப்பட்ட வீட்டு வாசல் முன்பு வைத்துவிட்டு, மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருந்திருகிறார்கள் அவர்கள்.

தனக்கு வைத்த கண்ணி என்பதை அறியாமல் வழக்கம்போல் அந்த இளம்பெண் அந்த பார்சலை திருட, அது வீடியோவில் பதிவானதோடு, பொலிசாரும் அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள்.

இந்த தகவல் வெளியானதும், பலரும் தங்கள் பொருட்கள் திருடப்பட்ட அனுபவங்களை கோபத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

பெரும்பாலும் முக்கியமான மருந்துபொருட்கள்தான் அந்த பார்சல்களில் இருக்குமாம். தான் ஆர்டர் செய்த பார்சல் திருடப்பட்டதால் அந்த மருந்து இல்லாமல் பல நாட்கள் வலியில் தவித்ததாக கூறியுள்ளார் ஒருவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்