வுஹானுக்கு திரும்பிப்போ... எனக்கு கொரோனாவைக் கொடுத்துவிடாதே: சீனரை அவமதித்த கனேடிய பெண்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் சீனர்களுக்கெதிரான இனவெறித்தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் வான்கூவரில் கடை ஒன்றில் நின்றிருந்த சீனர் ஒருவரைப் பார்த்து கனேடிய பெண் ஒருவர், தள்ளிப்போ, வுஹானுக்கு திரும்பிப்போ... எனக்கு கொரோனாவைக் கொடுத்துவிடாதே என்று மக்கள் முன்னாலேயே சத்தமிட, கூனிக்குறுகிப்போயிருக்கிறார் அவர்.

அப்போது அங்கு நின்ற Mira Oreck என்ற கனேடிய பெண், 2015இல் தேர்தலில் நின்றவர் அவர், தான் ஒரு கர்ப்பிணியாக இருந்தும் எதையும் குறித்து கவலைப்படாமல் அந்த சீனருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அந்த பெண்ணின் வார்த்தைகள் மிகக் கூர்மையாக இருந்தன என்று கூறும் Mira, அவை என்னை நோக்கி கூறப்படவில்லையென்றாலும், அவை உண்டாக்கிய வலியை என்னால் உணர முடிந்தது என்கிறார்.

உங்கள் வார்த்தைகள் வெறுப்பை வெளிப்படுத்துகின்றன, அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்று Mira அந்த பெண்ணிடம் கூற, அவரோ, எனக்குத் தெரிந்தவர்களே கொரோனாவால் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தொடங்கி மீண்டும் அந்த சீனரையே குறிவைத்து தாக்கியிருக்கிறார்.

வேறு யாருமே எதுவுமே பேசவில்லை என்று கூறும் Mira, அவர்கள் அமைதியாக இருப்பதன் காரணம் தனக்கு புரிகிறது என்றும், இருந்தாலும், இனவெறி தாக்குதலுக்கு உள்ளாவோர் தங்களுக்கு ஆதரவாக சிலர் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளச் செய்யவேண்டும் என்கிறார்.

கொரோனாவுக்குப்பின் இது கனடாவில் முதல் இனவெறித்தாக்குதல் அல்ல! வான்கூவரில் முகத்தில் குத்தப்பட்ட ஒரு இளம் சீனப்பெண் முதல் 92 வயது முதியவர் வரை இதுவரை வான்கூவரில் மட்டுமே குறைந்தது 20 இனவெறித்தாக்குதல்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல கவலைக்குரிய விடயமுமாகும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்