எல்லைக்கு அந்தப்பக்கம் மணமக்கள், இந்தப்பக்கம் குடும்பத்தினர்... ஒரு வித்தியாசமான திருமணம்!

Report Print Balamanuvelan in கனடா
160Shares

மணமகன் கனடா நாட்டைச் சேர்ந்தவர், மணமகளோ அமெரிக்கப்பெண்... கொரோனா கட்டுப்பாடுகளால் எல்லை கடக்கவும் முடியாது...

இப்படிப்பட்ட ஒரு சூழலில், இரு நாட்டு எல்லையில், மறக்கமுடியாத திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.

Jaxon Jensenம் Kadee Jensenம் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள்... Jaxon Jensen கனடாவைச் சேர்ந்தவர், Kadee Jensen அமெரிக்கர்.

ஆனால், ஏற்கனவே இன்னாருக்கு இன்னார்தான் என்று முடிவு செய்யப்பட்டதுபோல, இருவரின் இரண்டாவது பெயர்களும் Jensen என்றே அமைந்திருந்தது இரண்டு குடும்பத்தினருக்கும் ஆச்சரியம்தான்.

Jaxonக்கும் Kadeeக்கும் ஏப்ரலில் திருமணம் செய்வதாக இரு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்த நேரத்தில்தான் தொல்லையாக மார்ச் மாதத்தில் வந்தது இந்த பாழாய்ப்போன கொரோனா!

திட்டமெல்லாம் வீணாய்ப்போன நிலையில், நாம் எல்லையில் திருமணம் செய்துகொள்ளவேண்டியதுதான் என வேடிக்கையாக Kadee கூற, உண்மையாகவே ஏன் அப்படிச் செய்யக்கூடாது என, பத்தே நாட்களில் பரபரப்பாக திட்டம் ஒன்றை போட்டார்கள் இரு குடும்பத்தினரும்.

அதன்படி, இரு நாட்டு எல்லை பாதுகாப்புப் படையினரிடமும் அனுமதி கோர, அவர்கள் சம்மதம் கொடுக்க, அமெரிக்க கனடா எல்லையில் திருமணம் செய்வதென முடிவாயிற்று. மணமக்கள் மற்றும் மணமகனின் குடும்பத்தினர் கனடா பகுதியிலும், மணமகளின் குடும்பத்தினர் அமெரிக்க பக்கத்திலும் நிற்க, இரண்டு குழுக்களுக்கும் நடுவில் இப்படி ஒரு அழகான திருமணத்திற்கு இடைஞ்சலாக நிற்கிறோமே என வெட்கத்துடன் நிற்பதுபோல் நின்றது ஒரு முள்வேலி.

Kadeeயின் தந்தை வேலிக்கு அந்த பக்கம் நின்றபடி, வேலிக்கு இந்தப் பக்கம் நின்ற மகளின் கரம் பற்றி அழைத்து வர, அவரது மாமா திருமணத்தை நடத்தி வைத்தார்.

சற்று தொலைவிலிருந்த எல்லை பாதுகாவலர்களும், வரலாற்றுச் சிறப்பு மிக்க, அவர்களாலும் காலத்திற்கும் மறக்க முடியாத அந்த திருமணத்திற்கு சாட்சியாக நின்று கவனித்துக்கொண்டிருந்தனர்.

Kadeeயின் தாயார் ஒரு விடயத்தை நினைவு கூர்கிறார்... தான் மணமக்களுடன் கைகுலுக்க அனுமதி தரமுடியுமா என அதிகாரிகளிடம் கேட்டபோது, கைகுலுக்க மட்டுமில்லை, நீங்கள் மணமக்களை கட்டியணைத்துக்கொள்ளகூட அனுமதி உண்டு என்று அவர்கள் கூற, தன் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது என்கிறார் அவர்.

அதேபோல் மணமகளும், ஒரு வித்தியாசமான, மறக்க முடியாத திருமணம் சிறப்பாக நடந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தாலும், தனது குடும்பத்தினர் தன்னை விட்டு பிரிந்து செல்வதைக் கண்டபோது, அதை தன்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்கிறார், இந்த கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு குறுக்கே ஒரு வேலி இல்லாமல் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொள்ளும் நாளுக்காக காத்திருக்கிறார்கள் தாயும் மகளும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்