கனடாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் உயிரிழந்த இந்தியர்கள்: நண்பர் கண்ணீர் தகவல்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலியான மூவரில் இருவர் இந்தியர்கள் என தெரிவந்த நிலையில், உயிர் தப்பிய அவர்களது உறவினரில் ஒருவர் தான் கண்ட காட்சிகளை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் சில குடும்பத்தினரும், இந்தியாவிலிருந்து அவர்களை சந்திக்க சென்ற சில குடும்பத்தினருமாக சுமார் 11 பேர் உட்பட மொத்தம் 27 பேர் கொலம்பியா பனிப்பாறையைக் காண்பதற்காக சென்ற அந்த சுற்றுலா பேருந்தில் இருந்துள்ளனர்.

காற்றில் குட்டிக்கரணம் அடித்து, பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்த அந்த பேருந்தில் இருந்தவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள். இறந்தவர்களில் இருவர் இந்தியர்கள்.

தாதியர் படிப்பு முடித்து கனடாவில் பணிபுரிவதற்கான பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த கிரீவா பட்டேல் (28) என்ற பெண் இறந்தவர்களில் ஒருவர்.

அவரது கணவரின் நண்பரான வினய் பட்டேல் என்பவர் விபத்தில் விலா எலும்புகள் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும், உயிரிழந்த மற்றும் காயமடைந்த தனது நண்பர்கள் குறித்து பேசியுள்ளார்.

விலா எலும்பு உடைந்தாலும், முதலில் அந்த வலி தெரியாத நிலையில், தன் நண்பர் ஒருவர் உச்சந்தலையில் தோல் கிழிந்து மண்டையோடு தெரிய, தான் அவரது தோலை இழுத்து மூடிவிட்டு, அவருக்கு ஆறுதல் கூறியதாக தெரிவிக்கிறார் வினய்.

தனது நண்பர்கள் உறவினர்கள் ஒவ்வொருவர் பெயராக சொல்லி அழைக்க, சிலர் பதிலளிக்கும் நேரத்தில், தன்னுடன் பயணித்த முதியவர் ஒருவரின் குடும்பதைக் கண்டதைக் குறித்து விவரிக்கிறார் அவர்.

புதிதாக பிறந்துள்ள தங்கள் பேத்தியைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து கனடா வந்திருந்த அந்த தாத்தாவும் உயிரிழந்தவர்களில் ஒருவர்.

அவர் இறந்துபோக, அவரது மனைவி காயப்பட்டுக் கிடக்கும் நேரத்தில் பேருந்தின் கீழ் அந்த பெண் குழந்தை ஒரு சிறு இடைவெளியில் உயிருடன் இருப்பதைக் கண்டிருக்கிறார் வினய்.

அவள் உயிர் பிழைத்தது அதிசயம் என்று கூறும் வினய், அவளை தங்களோடு பார்ப்பதில் மகிழ்ச்சி என்கிறார்.

நாங்கள் பிழைப்புக்காக கனடாவுக்கு வந்தவர்கள், எங்களுக்கு இங்கு குடும்பம் என்று யாரும் இல்லை, என்றாலும் நாங்கள் அனைவரும் குடும்பம் போல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம் என்று அவர் கூறும்போது அவரையறியாமலே குரல் தழுதழுக்கிறது வினய்க்கு...

வீடியோவை காண

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்